பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6 செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால் இந்த இரு தொகுதிகளும் காலியாகின. இதையடுத்து தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஆளும் தவெக அரசுக்கு இது முதல் இடைத்தேர்தல் என்பதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளன.
இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இவர்களுடன் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மதுராந்தகத்தில் மொத்தம் 27 பேரும், தாராபுரத்தில் 22 பேரும் போட்டியிடுகின்றனர்.
மதுராந்தகம் (தனி) தொகுதி
தவெக – மரகதம் குமரவேல்
திமுக – இ. பரந்தாமன்
அதிமுக – கணிதா சம்பத்
நாம் தமிழர் கட்சி – கோ. ஜானகிராமன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – பி. சுகந்தி
தாராபுரம் (தனி) தொகுதி
தவெக – பி. சத்தியபாமா
திமுக – சுகன்யா
அதிமுக – கே. பானுமதி
நாம் தமிழர் கட்சி – மு. கார்த்திகா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – லட்சுமணன்
மதுராந்தகத்தில் 2,12,639 வாக்காளர்களும், தாராபுரத்தில் 2,22,406 வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. தவெக தலைவரும் முதல்வருமான விஜய், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் இரு தொகுதிகளிலும் முகாமிட்டு வீடு வீடாக வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டனர்.
கடந்த சில வாரங்களாக உச்சகட்டத்தில் இருந்த தேர்தல் பிரசாரம் அக்டோபர் 4-ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 2,614 போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 480 பேர் மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள். இங்கு 23 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.
தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 3,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், வாக்கு பதிவை சிசிடிவி கேமராக்கள் மற்றும் வெப் கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம். இதில் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன.

வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
இன்று பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
