அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு எதிராக வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி!

Published On:

| By Kavi

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர திமுகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

ஜெம் கிரானைட்ஸ் தலைவர் வீரமணி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

ஜெம் வீரமணி விவகாரத்தில் கடந்த திமுக ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

குறிப்பாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு, அவருக்கு தெரியாமல் இந்த வழக்கு மறைக்கப்பட்டிருக்காது என்று குற்றம் சாட்டினர். 

ADVERTISEMENT

இந்த சூழலில், அமைச்சர்கள் திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாகவும், ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கில் திமுக அரசு மீது குற்றம்சாட்டும் வகையில் கருத்துக்களை தெரிவிக்க அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றி கழக ஐடி விங் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில், ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க அமைச்சர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். 

ADVERTISEMENT

ஜெம் வீரமணிக்கு எதிராக 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி புகார் அளிக்கப்பட்ட நிலையில் மறுநாளே வழக்கு பதிவு செய்யப்பட்டது. எந்த தலையிடும் இல்லாமல் எந்த தாமதமும் இல்லாமல் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர்கள் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமானால் முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும். அப்படி நோட்டீஸ் வழங்காமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று தெரிவித்தார். 

திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ ரவீந்திரன், ‘அமைச்சர்கள் என்ற முறையில் அல்லாமல் தனி நபர்கள் என்ற முறையிலேயே இருவரும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளனர்’ என்று கூறினார். 

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி ஒத்தி வைத்திருந்தார். 

இந்த சூழலில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, போக்சோ வழக்கில் கைதான வீரமணி வழக்கில் இணைத்து பேசிய விவகாரத்தில், அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தமிழக வெற்றி கழக தொழில்நுட்ப பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share