VIDEO: காங்கிரஸ் எம்.பி.- தவெக எம்.எல்.ஏ. இடையே அமைச்சர் முன்னிலையில் மோதல்… மெழுகுவர்த்தியை தட்டிவிட்டதால் பரபரப்பு!

Published On:

| By Mathi

TVK Vs Congress

திருச்சியில் தமிழக அரசு சார்பில் இன்று (அக்டோபர் 5) நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றுவதில் தவெக எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜிக்கும் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. கிறிஸ்டோபர் திலக்கிற்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் அமைச்சர் ரமேஷ், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், எம்.எல்.ஏ.க்கள் நவல்பட்டு விஜி, விக்னேஷ், கதிரவன் மற்றும் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. கிறிஸ்டோபர் திலக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. முதலில் அமைச்சர் ரமேஷ் குத்துவிளக்கு ஏற்றினார். அவரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கதிரவன், விக்னேஷ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

ADVERTISEMENT

அடுத்து குத்துவிளக்கு ஏற்றுவதற்காக காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக்கிடம் மெழுகுவர்த்தி வழங்கப்பட்டது. அப்போது திருவெறும்பூர் தவெக எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி குறுக்கிட்டு, தனக்கு முன்னுரிமை வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார். கிறிஸ்டோபர் திலக்கிடம் இருந்த மெழுகுவர்த்தியை அவர் தட்டிவிட்டதால் அது கீழே விழுந்தது.

மேலும், “நான் ஏற்ற வேண்டாமா? என்னை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? புரோட்டாக்கால் தெரியாதா?” என அமைச்சர் ரமேஷை பார்த்து நவல்பட்டு விஜி கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

அப்போது அருகில் இருந்த அமைச்சர் ரமேஷ், ‘என்னங்க… இப்படி பண்றீங்க?’ என்பது போன்று ரியாக்ட் செய்ததுடன், நவல்பட்டு விஜியை சமாதானப்படுத்தினார். இதனால் மேடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் நவல்பட்டு விஜி குத்துவிளக்கு ஏற்றினார்.

இந்த சம்பவம் தொடர்பாக பின்னர் விளக்கம் அளித்த நவல்பட்டு விஜி எம்.எல்.ஏ., அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு பிறகு அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. என்ற முறையில் தன்னைத்தான் குத்துவிளக்கு ஏற்ற அழைத்திருக்க வேண்டும் என்றும், தனக்கு முன்னதாக காங்கிரஸ் எம்.பி.யிடம் மெழுகுவர்த்தி வழங்கப்பட்டது குறித்துதான் கேள்வி எழுப்பியதாகவும் கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share