திமுகவில் இணைந்த கடையநல்லூர் எம்.எல்.ஏ. டி.எம். ராஜேந்திரன், சீர்காழி எம்.எல்.ஏ. எஸ். செந்தில் செல்வன் ஆகியோரை ராஜினாமா செய்ய வைப்பதற்காக தவெக தலைவரும் முதல்வருமான விஜய், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. ஆகியோர் கூட்டாக சதி செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று திமுக சட்டத்துறை இணை செயலாளரும் மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளருமான பரந்தாமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடையநல்லூர் எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன், சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் ஆகிய இருவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று, தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் அக்டோபர் 1-ஆம் தேதி மாநில லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அதிகாரியை சந்தித்து ஒரு புகார் கொடுத்திருக்கிறார்கள். புகார் கொடுத்து, அவர்களிடமிருந்து ஒப்புகையையும் பெற்றிருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் என்ன புகார் கொடுத்திருக்கிறார்கள் என்றால், மதிமுகவிலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து, திமுக தலைவரின் அங்கீகரிக்கப்பட்ட ஏ-பார்ம், பி-பார்ம் பெற்று உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்று சட்டமன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்றவர்கள்.
ஆனால் இவர்கள் இருவரையும் ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்திய செய்திகள் எல்லாம் செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் வந்திருக்கின்றன.
கடந்த மே 13-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் அரசு சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்து நம்பிக்கையை பெற்றது. பெற்ற நம்பிக்கை மைனாரிட்டி நம்பிக்கை. அவர்களுக்கு போதிய பெரும்பான்மை, தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்கள் அவர்களுடைய கட்சிக்கு மட்டும் இல்லை. இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியிலிருந்து வெற்றி பெற்ற கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைத்திருக்கிறார்கள்.
அதிமுகவிலிருந்து சில சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்து இந்த அரசு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் மாறி வாக்களித்தது குறித்த விவகாரங்கள் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். அதிமுகவை சேர்ந்தவர்கள் சட்டமன்ற சபாநாயகரிடம் புகார் கொடுத்தது, அதன்பிறகு அதை திரும்பப் பெற்றது எல்லாமே நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.
கூட்டுச் சதி- லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்
இப்போது இந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் கொடுத்திருக்கக்கூடிய புகார் என்னவென்றால், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ ஆகிய நால்வரும் கூட்டுச் சதி செய்திருக்கிறார்கள்.
இவர்கள் தங்களை ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள். குதிரை பேரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ராஜினாமா செய்துவிட்டு மறுபடியும் தேர்தலில் நிற்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள். எனவே இவர்கள் மீது சட்டப்படி லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இரண்டு எம்.எல்.ஏ.க்களும் நேரடியாக சென்று புகார் கொடுத்திருக்கிறார்கள்.

மே 13 முதல் என்ன நடந்தது?
மே 13-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்த இந்த அரசு, ஜூன் 16-ஆம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, வைகோவை நேரடியாக சந்தித்தார். இது எல்லாம் ஊடகங்களில் வந்த செய்திகள்தான். இருந்தாலும் தேதி வாரியாக சொல்கிறேன்.
ஜூன் 16-ஆம் தேதி ஆதவ் அர்ஜூனா, வைகோவை சந்தித்து பேசுகிறார். அவர் என்ன பேசியிருக்கிறார் என்பதெல்லாம் அந்த புகாரில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த புகாரில் சொல்லப்பட்டதெல்லாம் எங்கள் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களிடம் வைகோ சொன்னதை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் ராஜினாமா செய்யச் சொல்லி முதலமைச்சர் கூறியிருக்கிறார். இவர்கள் இடைத்தேர்தலில் நிற்பதற்கான செலவுகள் அனைத்தையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். இவர்களை ஜெயிக்க வைக்கிறோம். இவர்களுக்கு தேவையான அளவுக்கு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று முதலமைச்சர் சொல்லச் சொன்னதாக ஆதவ் அர்ஜூனா ஜூன் 16-ஆம் தேதி வைகோவிடம் சொல்லியிருக்கிறார்.

ஜூன் 17-ஆம் தேதி வைகோ முதலமைச்சரை சந்திக்கிறார். சந்தித்த இடம் தலைமைச் செயலகம். ஆனால் அது அரசியல் நிமித்தமான சந்திப்பாக நடந்திருக்கிறது. அரசு தரப்பில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.
அங்கு முதலமைச்சர் வைகோவிடம், “இரண்டு பேரையும் ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்களை ஜெயிக்க வைக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது” என்று சொல்லியிருக்கிறார்.
விஜய் சந்திப்புக்கு பின் வைகோ சொன்னது என்ன?
இதை பேசி முடித்த வைகோ, ஜூன் 17-ஆம் தேதி மாலை 6 மணிக்கு இரண்டு எம்.எல்.ஏ.க்களையும் தனது வீட்டுக்கு அழைக்கிறார். ராஜேந்திரனையும் செந்தில் செல்வனையும் வீட்டுக்கு அழைத்து, “முதலமைச்சரை நான் பார்த்தேன். உங்கள் இரண்டு பேரையும் ராஜினாமா செய்யச் சொல்கிறார். அந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் கொண்டு வந்துவிடலாம். கொண்டு வந்த பிறகு அந்த தொகுதிகளுக்கான தேர்தல் செலவுகள் அனைத்தையும் அவரே பார்த்துக் கொள்வதாக சொல்கிறார். அது மட்டுமல்லாமல் உங்கள் இரண்டு பேரில் ஒருவருக்கு கேபினெட் அமைச்சர் பதவி கொடுப்பதாக சொல்கிறார். அதனால் நீங்கள் ராஜினாமா செய்யுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். இதை இரண்டு பேரும் மறுத்திருக்கிறார்கள்.

விஜய்யை 5 நாட்களில் 2 முறை சந்தித்த வைகோ
ஜூன் 17-ஆம் தேதியில் இருந்து ஜூன் 21-ஆம் தேதி வரையிலான நாட்களில் வைகோ, முதலமைச்சரை இரண்டு முறை சந்தித்திருக்கிறார். பனையூரில் உள்ள அவரது வீட்டிலேயே சந்தித்திருக்கிறார். அப்போதும் இது குறித்து பேசப்பட்டிருக்கிறது.
ஜூன் 25-ஆம் தேதி இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.
ஜூன் 26-ஆம் தேதி உயர்நிலைக் குழுக் கூட்டம் வைத்திருக்கிறார் தலைவர் வைகோ. அதனால், “காலை 10 மணிக்கு உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. நீங்கள் காலை 7 மணிக்கெல்லாம் தலைவரை அவரது வீட்டில் பாருங்கள்” என்று ஜூன் 25-ஆம் தேதி இரவு தொலைபேசியில் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவரோடு தொடர்ந்து பயணித்தவர்கள் என்பதால், மரியாதை நிமித்தமாக காலை 7 மணிக்கெல்லாம் அவரது வீட்டுக்கு செல்கிறார்கள்.

ராஜினாமா செய்ய சொல்லி நெருக்கடி தந்த வைகோ
அங்கு சென்றபோது வைகோ மறுபடியும் வற்புறுத்துகிறார். “நீங்கள் ராஜினாமா செய்யுங்கள். நான் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் இதை சொல்லியாக வேண்டும். உங்களுடைய செலவுகள் அனைத்தையும் முதலமைச்சர் பார்த்துக் கொள்கிறார். அவரே தேர்தல் பிரசாரம் செய்கிறார். நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருப்பதால் அது அவர்களுக்கு இடையூறாக இருக்கிறது. நீங்கள் ராஜினாமா செய்துவிட்டு நமது கட்சி சின்னத்தில் நில்லுங்கள். செலவெல்லாம் முதலமைச்சரே பார்த்துக் கொள்கிறார். உங்களை பொருளாதார ரீதியாக பார்த்துக் கொள்வதாக என்னிடம் உறுதி அளித்திருக்கிறார். நான் உங்களுக்கு பொறுப்பு” என்று வற்புறுத்தியிருக்கிறார். இதற்கு இவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.
கொத்தடிமையா இருக்க போறீங்களா?
இந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் ஒத்துக்கொள்ளாததால் வைகோ, “என்ன, நீங்கள் கொத்தடிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நான் சொன்னால் நீங்கள் கேட்க மாட்டீர்களா? ஏன் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறீர்கள்?” என்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார்.
ஆனால் அவர்கள் ஒரு தலைவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துவிட்டு, அவர்களுடைய முடிவில் தீர்க்கமாக இருந்திருக்கிறார்கள்.
ஜூன் 27-ஆம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதில் வைகோ பேசியது அனைத்து ஊடகங்களிலும் வந்தது.
முதலமைச்சர் விஜய் தன்னை சந்தித்ததாகவும், அவரோடு பேசியதாகவும், இடைத்தேர்தலை கொண்டு வர வேண்டும் என்றும், இவர்கள் இருவரையும் அந்த இடைத்தேர்தலில் நிறுத்த வேண்டும் என்றும், “நானே வந்து பிரசாரம் செய்கிறேன்” என்று விஜய் சொன்னதாகவும் வைகோ பேசியது அனைத்து ஊடகங்களிலும் வந்தது. அது எல்லோருக்கும் தெரியும்.
மாமல்லபுரம் தவெக கூட்டணி சந்திப்பு
இந்த நேரத்தில்தான் ஜூலை 1-ஆம் தேதி தவெக கூட்டணிக் கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து சந்திக்கும் நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது வைகோ என்ன செய்கிறார் என்றால், ஜூன் 25-ஆம் தேதி தொலைபேசியில் அழைத்து 26-ஆம் தேதி காலை வீட்டுக்கு வரச் சொல்கிறார். 26-ஆம் தேதி காலை 7 மணிக்கு இரண்டு எம்.எல்.ஏ.க்களும் சென்று பார்க்கிறார்கள்.
26-ஆம் தேதி காலை 10 மணிக்கு உயர்நிலைக் குழுக் கூட்டம் நடக்கிறது. அதில் இவர்கள் கலந்து கொள்ளவில்லை. 27-ஆம் தேதி ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. அதிலும் இவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இவர்களை ராஜினாமா செய்ய வற்புறுத்தியிருக்கிறார்.
அந்த ஜூன் 27-ஆம் தேதி மாலை 5 மணிக்கு இன்னொரு தூதராக சுப்பையா என்ற வழக்கறிஞரை அனுப்பி, அவர்களை ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்.
காரணம், ஜூலை 1-ஆம் தேதி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தவெக சார்பில் நடத்தப்படுகிறது.
“நான் எந்த முகத்தோடு அங்கே போவேன்? நான் விஜய்க்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். இவர்கள் ராஜினாமா கடிதத்தை கையில் கொண்டு போனால்தான் எனக்கு மரியாதை. அதனால் போய் ராஜினாமா கடிதத்தை வாங்கி வாருங்கள். அவர்களிடம் கொடுக்கச் சொல்லுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். அவர்கள் மறுத்திருக்கிறார்கள்.

துரை வைகோ விமர்சனத்தின் பின்னணி
அதனால்தான் துரை வைகோ, தவெக கூட்டணிக் கட்சிக் கூட்டம் முடிந்த பிறகு இந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் திமுக விலை கொடுத்து வாங்கியிருக்கிறது என்ற வார்த்தைகளை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அதையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஆளுநரிடம் புகார்
இது குறித்து இந்த ஆட்சி வந்த உடனேயே ஜூலை 1 மற்றும் ஜூலை 13 ஆகிய தேதிகளில் இரண்டு முறை எங்களுடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் இரண்டு புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், எம்.எல்.ஏ. ஆஸ்டின், நான் உட்பட ஆளுநரை சந்தித்து மனு கொடுத்ததும் அனைவருக்கும் தெரியும்.
இதையெல்லாம் கொடுத்திருக்கிறோம். வைகோ ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் என்ன பேசினார் என்பதற்கான ஆடியோ மென்பிரதியையும், அதன் இணைப்பையும் கொடுத்திருந்தோம்.
ஏன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்?
இப்போது இந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் அக்டோபர் 1-ஆம் தேதி நேரடியாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
திமுக ஜூலை 1 மற்றும் ஜூலை 13-ஆம் தேதிகளில் கொடுத்த புகார்கள், ஆளுநரை சந்தித்து கொடுத்த புகார், அந்த மனுக்கள் எல்லாம் கொடுத்திருக்கிறோம். லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார் கொடுத்திருக்கிறோம். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரைக்கும் இந்த புகாரை பதிவு செய்யவே இல்லை.
இப்போது சம்பந்தப்பட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த உரையாடலில் நேரடியாக தொடர்புடையவர்கள்.
விஜயுடன் வைகோ பேசினார். அதை வைகோ இவர்களை நேரடியாக அழைத்து, “விஜய் என்னிடம் இந்த மாதிரி பேசினார். இந்த மாதிரி சொல்லியிருக்கிறார். நீங்கள் ராஜினாமா செய்யுங்கள். உங்கள் இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் செலவை அவரே பார்த்துக் கொள்வார். பொருளாதார ரீதியாக உங்களை பார்த்துக் கொள்வார். உங்களில் ஒருவருக்கு கேபினெட் அமைச்சர் பதவி கொடுக்கிறார்” என்று சொல்லியிருக்கிறார்.
இதையெல்லாம் இவர்கள் அக்டோபர் 1-ஆம் தேதி நேரடியாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகாராக கொடுத்திருக்கிறார்கள்.
இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறையாக நாங்கள் கேட்பது என்னவென்றால், எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அக்டோபர் 1-ஆம் தேதி உங்களிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதை நீங்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.
ஆளுநரிடம் வழக்கு தொடர்வதற்கான அனுமதியை கேட்டு பெற வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 7, பிரிவு 7A, பிரிவு 8, பிரிவு 15 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒரு கூட்டுச் சதி. இதற்கான தண்டனைச் சட்டப் பிரிவுகளும் இதில் வரும்.
முதலமைச்சர் விஜய் பேசுகிறார். அதை ஆதவ் அர்ஜூனா தெரிவிக்கிறார். வைகோ அதை உள்வாங்கிக் கொள்கிறார். வைகோ எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசுகிறார். மறுபடியும் வைகோ முதலமைச்சரை சந்திக்கிறார்.
முதலமைச்சர், “தேர்தல் செலவை நான் பார்த்துக் கொள்கிறேன். இரண்டு தொகுதிகளுக்கும் நான் செலவு செய்கிறேன்” என்று சொல்கிறார். அதை வைகோ தெரிவிக்கிறார். இது ஒரு கூட்டுச் சதி.
இந்த ஆட்சியே ஒரு குதிரை பேர ஆட்சிதான் என்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் சொல்லி வருகின்றன. அதை ஒவ்வொரு நாளும் நிரூபிக்கும் வகையில்தான் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த ஆட்சி 108 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆட்சியாக இருக்கிறது. அதில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவியை விஜய் ராஜினாமா செய்தார். அதனால் 107.
ஆனால் திமுக கூட்டணிக் கட்சிகளிடமிருந்து ஆதரவு பெற்று தற்போது ஆட்சி அமைத்திருக்கிறார்.
இதற்கிடையில் இது போதாது என்று அதிமுகவில் இருக்கக்கூடிய ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார். இது அனைவருக்கும் தெரியும். இடைத்தேர்தல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருவதற்கு தயாராக இருக்கின்றன.
இப்போது விஜயின் நோக்கம் என்னவென்றால், வெளி கட்சியில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, இடைத்தேர்தல்களை கொண்டு வந்து, தனக்கென்று தனிப்பட்ட பலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
ஊழலில் நடக்கும் விஜய் சர்க்கார்
இதிலிருந்து நாங்கள் கேட்பதும், மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமும் என்னவென்றால், “நான் ஆட்சிக்கு வந்த உடனே லஞ்ச லாவண்யத்தை, ஊழலை ஒழித்துவிட்டேன்” என்று தம்பட்டம் அடிக்கிறார்கள்.
ஆனால் இந்த அரசாங்கமே ஊழலில்தான் நடக்கிறது, நிற்கிறது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றன என்று தவெக பரப்புரை செய்கிறது. பெரிய புண்ணியவான்களைப் போல பேசுகிறார்கள்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுவது ஒரு பக்கம். ஆனால் வாக்காளர்களிடமிருந்து வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை அப்படியே மொத்தமாக எடுக்கிறார்கள்.
பத்து பேரிடம் போய் வாக்குகளை பெற்று வருவது ஒன்றுதான்; அந்த ஒரே ஆளை தூக்கிக் கொண்டு வருவதும் ஒன்றுதான் என்றபோது, மற்ற கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றன என்று குற்றம் சுமத்துவது எப்படி சரி?
நீங்கள்தான் தூய சக்தியா?
அதேதான் எம்.எல்.ஏ.வை நீங்கள் விலைக்கு வாங்குவதும். இதற்கும் அதற்கும் என்ன பெரிய வித்தியாசம்? அப்போது நீங்கள் தூய சக்தியா? இந்த கேள்வி நாட்டு மக்கள் மத்தியில் இருக்கிறது. புரையோடி போயிருக்கிறது. தற்போது அடித்தட்டு மக்கள்கூட இந்த கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு முதலமைச்சர் விஜயின் முதலமைச்சர் நாற்காலியின் நான்கு கால்களும் ஊழல் கால்கள்தான். முதலமைச்சருடைய நாற்காலியின் நான்கு கால்களும் ஊழல் கால்கள்தான்.
உத்தமர் வேடம் போடும் விஜய்
உத்தமரைப்போல் வேடம் போடுகிற முதலமைச்சர் விஜய், ஊழலை ஒழித்துவிட்டேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிற விஜய், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட ஆட்சியாளர்கள் அனைவரும் வேறு கட்சிகளில் இருக்கிற சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை தக்க வைப்பதற்கும் இடைத்தேர்தல்களை கொண்டு வருவதற்கும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதனுடைய விளைவாகத்தான் தற்போது அனைத்தையும் எதிர்கொண்டிருக்கிறோம் என்பதை இந்த புகார் வெளிப்படுத்துகிறது.
டிடிவி தினகரன், அதிமுக புகார்கள்
இதற்கு முன்பு டிடிவி தினகரன் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதை பதிவு செய்யவில்லை. அதிமுக புகார் கொடுத்திருக்கிறது. அதையும் பதிவு செய்யவில்லை. இப்போது இந்த விவகாரத்தில் நேரடியாக தொடர்புடைய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களே நேரடியாக சென்று புகார் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு மேலேயும் லஞ்ச ஒழிப்புத்துறை என்ன செய்யப்போகிறது?
அடுத்து சட்டப்படி நடவடிக்கை
லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கையில்தான் இருக்கிறது. இந்த விஜிலென்ஸ் இந்த ஆட்சியாளர்களின் கையில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இவர்கள் முறையாக வழக்கை பதிவு செய்வார்களா என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால்தான் நாங்கள் தற்போது எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்திருக்கிறோம்.
இதை உடனடியாக பதிவு செய்து விசாரிக்கவில்லை என்றால் திமுக சட்டத்துறை சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கிறது. அதனால் லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக ஆளுநரிடம் வழக்கு தொடர்வதற்கான அனுமதியை கேட்டு பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் திமுக சட்டப்படி போராட்டத்தை மேற்கொள்ளும்.
திமுக என்ன செய்தது தெரியுமா?
ஏனென்றால் ஜெயலலிதாவின் டான்சி வழக்கை திமுகதான் நடத்தியது. ஜெயலலிதா ஊழல்வாதி என்பதை திமுக சட்டத்துறைதான் முகத்திரையை கிழித்து காட்டியது.
ஒரு முதலமைச்சரை தேசியக் கொடியோடு நீதிமன்றத்திற்கு சென்று சிறைக்கு அனுப்பிய பெருமையும் வரலாறும் திமுக சட்டத்துறைக்கு உண்டு. அதே வரலாற்றை மீண்டும் எழுத வைத்திருக்கிறார் விஜய்.
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்காதீர்..
இந்த ஊடகத்தின் மூலமாக நான் கேட்டுக் கொள்வதெல்லாம், நாட்டு மக்களின் வரிப்பணம் வீணாகக்கூடாது. ஒரு குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட லாபத்திற்காக, அரசியல் சுயலாபத்திற்காக, தீய நோக்கத்திற்காக, மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் தேர்தல் முடிந்த உடனேயே ராஜினாமா செய்யப்பட்டு இடைத்தேர்தல் கொண்டு வருவது நாட்டுக்கு நல்லதல்ல.
இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் மோசடி. ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகிறார்கள்.
ராஜினாமா செய்வதை தடுக்க சட்டம்
இந்த ஒரு சம்பவத்தை முக்கியமாக வைத்து இந்தியாவில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். ஒரு சாதாரண மனிதனாக, ஒரு வழக்கறிஞராக, சமூகத்தின் மீது அக்கறை கொண்டவனாக, பொது வாழ்க்கையில் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு அரசியல் கட்சியின் பிரதிநிதியாக நாட்டின் தேவையை கருதி ஒரு சட்டம் வர வேண்டும் என்று சொல்கிறேன். கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டு வந்த காலகட்டம் வேறு.
கட்சி மாறி வாக்களிப்பதை தடுப்பதற்காக கட்சித் தாவல் தடைச் சட்டத்தை கொண்டு வந்தோம். ஆனால் இன்று அது பல் இல்லாத சட்டமாக இருக்கிறது. ராஜினாமா செய்துவிட்டு போய்விடுகிறார்கள். இதை தடுப்பதற்கான வழிமுறை இல்லை. அதை கொண்டு வர வேண்டும்.
அதை கொண்டு வந்தால்தான் எதிர்காலத்தில் நாட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படாமல், மக்களால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அந்த ஐந்தாண்டு காலமும் மக்களுக்கு பணியாற்றுவதற்கு வழிவகை செய்ய முடியும். அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் பார்வையில் நிச்சயமாக ஒரு கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட ராஜினாமாக்களை ஊக்குவிக்கக்கூடாது. சட்டத்தின் பார்வையில் அவர்கள் தப்பிக்கிறார்கள். சட்டத்தின்படி அவர்கள் தப்பிக்க முடியாத வகையில் அவர்களுக்கு கிடுக்குப்பிடி போடுவதற்கு ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பேசுவோம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இது குறித்து நாடாளுமன்றத்திலும் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச இருக்கிறார்கள். இது குறித்து பேசியும் வருகிறார்கள். எனவே இந்த ஊடகத்தின் வாயிலாக நான் கேட்டுக் கொள்வதெல்லாம், தயவுசெய்து சட்டத்தை மதியுங்கள். ஜனநாயகத்திற்கு மதிப்பு கொடுங்கள்.
ஆட்கள் வரலாம், போகலாம். அரசுகள் வரலாம், போகலாம். ஆனால் அரசு இயந்திரம், அதிகாரிகள், காவல்துறை ஆகியோர் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்கும் பணி உங்களுக்கு இருக்கிறது.
A1 குற்றவாளி விஜய்
காவல்துறை அதிகாரிகள் அரசு மீதும் முதலமைச்சர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் தயங்கக்கூடாது. மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மக்களின் பிரதிநிதிகளாக, மக்களின் ஊழியர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் பொது ஊழியர்கள்.
மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில்தான் ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும் ஊதியம் வாங்குகிறார்கள். அதனால் மக்கள்தான் நம்முடைய எஜமானர்கள். மக்களுக்கு மதிப்பளித்து, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளித்து காவல்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்து, உரிய வழக்கு பதிவு செய்து, முதலமைச்சர் ஜோசப் விஜயை A1 குற்றவாளியாக சேர்த்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்.
முதல்வர் என்றால் புனிதரா?
யாரும் முதலமைச்சர் என்பதால் புனிதர் கிடையாது. ஜெயலலிதாவையே பார்த்த தமிழ்நாடுதான் இது. ஜெயலலிதாவையே பார்த்த திமுக சட்டத்துறைதான் இது. ஜெயலலிதாவையே பார்த்த நீதிமன்றம்தான் இது. நீதிக்கு முன்னால் யாரும் பெரியவர்கள் கிடையாது. சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்.
அதனால் ஒரு குடிமகனாக நான் கேட்டுக் கொள்வதெல்லாம், காவல்துறை கண்மூடி இருக்காதீர்கள். மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
எனவே நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் திமுக சட்டத்துறை சட்டப்படி இவற்றை எல்லாம் சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பரந்தாமன் கூறினார்.
திடீர் புகாரா? தாமதமா?
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பரந்தாமன் அளித்த பதில்: மே 13-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த அரசு அமைந்த பிறகு ஜூலை 1-ஆம் தேதியே திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் புகார் கொடுத்தார். ஜூலை 13-ஆம் தேதியும் புகார் கொடுக்கப்பட்டது. அதனால்தான் திமுக குழு ஆர்.எஸ்.பாரதி தலைமையில் சென்றது. அந்த குழுவில் நானும் இருந்தேன். ஆளுநரை சந்தித்து புகார் கொடுத்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தோம். அதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு நியாயமான கால அவகாசம் கொடுத்தோம்.
ஒருவேளை அரசியல் கட்சி புகார் கொடுத்திருக்கிறது, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிகாரிகள் நினைத்திருக்கலாம். ஆனால் இப்போது இந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த சம்பவத்தில் நேரடியாக தொடர்புடையவர்கள். சாட்சிகளாக இருக்கக்கூடியவர்கள்.
முதலமைச்சர் விஜய், வைகோவிடம் பேசியதை வைகோ இவர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதைவிட என்ன சாட்சி வேண்டும்? அதனால்தான் நாங்கள் நியாயமான கால அவகாசம் கொடுத்தோம். சட்டத்தில் ஒரு நியாயமான கால அவகாசம் கொடுக்க வேண்டும். அரசுக்கும் காவல்துறைக்கும் நியாயமான கால அவகாசம் கொடுத்தோம்.
அந்த வாய்ப்பை அவர்கள் தவறாக பயன்படுத்திவிட்டார்கள். அதை முறையாக பயன்படுத்தவில்லை. இப்போது இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்படி புகார் கொடுத்திருக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது. எனவே அனைத்து விசாரணைகளிலும் அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பாக இருப்பார்கள். இது இன்று உருவாக்கப்பட்டது அல்ல. அக்டோபர் 1-ஆம் தேதி உருவானதும் அல்ல.
இந்த ஆட்சி வந்ததில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட விஷயம்தான். இது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் செயல்முறை. அக்டோபரில் இதை புதிதாக உருவாக்கியிருந்தால் கேள்வி கேட்கலாம். அவர்கள் ஏற்கனவே அதை நிரூபித்துவிட்டார்கள். அதை நிரூபித்த பிறகும் அந்த தாகம் தீரவில்லை. அவர்களுக்கு ஒரு பயம் இருக்கிறது.
தற்போது இருக்கக்கூடிய தோழமைக் கட்சிகள் எல்லாம் எவ்வளவு காலம் தன்னோடு இருப்பார்கள் என்ற சந்தேகம் அவர்களுக்கு இருக்கலாம். அப்போது நமக்கென்று சொந்தமாக சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற நிலைக்காக ஜனநாயகத்துடன் விளையாடுகிறார்கள். அவ்வளவுதான்.
ஆளுநரை ஸ்டாலின் சந்திப்பாரா?
ஆளுநரை ஏற்கனவே சந்தித்து புகார் கொடுத்துவிட்டோம். தேவைப்பட்டால் எங்களுடைய தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த முடிவை எடுக்கலாம். இப்போது சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை எடுத்துவிட்டோம். ஒருவேளை எங்களுடைய தலைவர் மீண்டும் ஆளுநரை சந்தித்து புகார் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தால் அதற்கு எந்த தடையும் இல்லை.
இது மிகவும் முக்கியமான புகார். அதனால்தான் இதை வலியுறுத்துகிறோம். அதனால்தான் நீதிமன்றத்துக்கும் செல்வோம். எம்.எல்.ஏ.க்கள்தான் புகார் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. கட்சி கொடுக்கும் புகாரே எம்.எல்.ஏ.க்கள் கொடுப்பதுதான்.
கட்சிதானே எம்.எல்.ஏ.வுக்கு ஏ-பார்ம், பி-பார்ம் கொடுக்கிறது. எனவே கட்சிதான் உயர்ந்த அதிகாரம். இப்போது எம்.எல்.ஏ.க்கள் கொடுத்திருப்பது கூடுதல் புகார்.
கட்சி ஒன்று புகார் கொடுத்தாலே போதும். நாங்கள் கட்சிக்கு கட்டுப்பட்டவர்கள். நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் என் தலைவருடைய முடிவுதான் என்னுடைய முடிவே தவிர, எனக்கு தனிப்பட்ட முடிவு இல்லை. என்னுடைய கட்சி எனக்காக ஒரு புகார் கொடுத்தாலும், அது நான் கொடுத்ததற்கு சமம்தான். அதிலிருந்து மாறுபட்டு நான் பேசினால்தான் அது தவறு. ஆனால் என்னுடைய கட்சி ஏற்கனவே புகார் கொடுத்துவிட்டது.
என் கட்சி புகார் கொடுத்திருந்தாலும் கூட, எங்களுடைய தலைவர் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை நேரடியாக சென்று புகார் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.
அதனால்தான் ஏற்கனவே சொன்னேன். இது அரசியல் கட்சி கொடுத்த புகார், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஒருவேளை அதிகாரிகள் இதை அமைதியாக வைத்திருந்திருந்தாலும், இப்போது அவர்கள் இதை விசாரிக்க தொடங்கியே ஆக வேண்டும். அதை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு நாங்கள் இப்போது கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறோம். இவ்வாறு பரந்தாமன் கூறினார்.
