பரனூர் சுங்க சாவடியில் வாகனங்கள் நிற்காமல் கட்டணம் வசூல்.. ஒரே மாதத்தில் வருவாய் 26.95% உயர்வு!

By Mathi

|

Published on 24 Nov 2026, 8:25 AM

Toll Plaza India

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிற்காமல் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் புதிய முறை அமல்படுத்தப்பட்ட பிறகு, 26.95% வருவாய் அதிகரித்துள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை மாற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மல்டி லேன் ஃப்ரீ ஃப்ளோ (Multi-Lane Free Flow – MLFF) என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த முறையில் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியமில்லை. வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும்போதே தொழில்நுட்பத்தின் உதவியுடன் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், பயண நேரம், எரிபொருள் செலவு மற்றும் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடும் குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பரனூரில் 26.95% வருவாய் உயர்வு

தமிழகத்தில் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில், கடந்த அக்டோபர் 1-ந் தேதி தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை செயல்பாட்டுக்கு வந்தது. இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, அக்டோபர் மாதத்தில் பரனூர் சுங்கச்சாவடியின் நிகர வருவாய் 26.95% அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

நாடு முழுவதும் இந்தத் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டுள்ள 7 சுங்கச்சாவடிகளில், பரனூரில்தான் அதிகபட்ச வருவாய் உயர்வு பதிவாகியுள்ளது.

7 சுங்கச்சாவடிகளில் ரூ.89.23 கோடி கூடுதல் வருவாய்

குஜராத் மாநிலம் சோர்யாசி சுங்கச்சாவடியில் கடந்த மே 1-ந் தேதி இந்தத் திட்டம் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

ADVERTISEMENT

அக்டோபர் இறுதி நிலவரப்படி, தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை செயல்படுத்தப்பட்ட 7 சுங்கச்சாவடிகளின் வருவாய் உயர்வு விவரங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நவம்பர் 23-ந் தேதி வெளியிட்டுள்ளது.

இதில் தமிழகத்தின் பரனூர் சுங்கச்சாவடியில் அதிகபட்சமாக 26.95% வருவாய் உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் மாநிலம் மனோஹர்புரா சுங்கச்சாவடியில் 24.51%, டெல்லி முண்ட்காவில் 23.55%, குஜராத் மாநிலம் சோர்யாசியில் 23.06% வருவாய் அதிகரித்துள்ளது.

ஹரியானா மாநிலம் கரவுண்டா சுங்கச்சாவடியில் 17.39%, உ.பி. மாநிலம் ஷாஜகான்பூரில் 16.57%, தௌலத்புராவில் 15.66% வருவாய் உயர்ந்துள்ளது.

இந்த 7 சுங்கச்சாவடிகளிலும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முந்தைய ஒப்பீட்டுக் காலகட்டத்தில் ரூ.449.72 கோடியாக இருந்த மொத்த வருவாய், புதிய முறை அமல்படுத்தப்பட்ட பிறகு ரூ.538.95 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரூ.89.23 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இது 19.84% உயர்வாகும்.

சுங்கக் கட்டண பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

கட்டணம் செலுத்தாமல் செல்லும் வாகனங்களைக் கண்டுபிடிக்க AI

தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறையில் சில வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக வாகனங்களின் பதிவு எண் பலகைகளை மறைப்பது, மாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இத்தகைய வாகனங்களைக் கண்டறிவதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

வாகனங்களை அவற்றின் தனித்துவமான அம்சங்களின் அடிப்படையில் அடையாளம் காணும் Vehicle Fingerprinting தொழில்நுட்பமும், மத்திய அரசின் VAHAN வாகனப் பதிவுத் தரவுத்தளமும் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற வாகன உரிமையாளர்களுக்கு மின்னணு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. கட்டணம் செலுத்தாதவர்களுக்கு விதிகளின்படி VAHAN சேவைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதுவரை இந்த 7 சுங்கச்சாவடிகளிலும் அனுப்பப்பட்ட மின்னணு நோட்டீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையில் சுமார் 60% வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகள்

பரனூரைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள நெமிலி சுங்கச்சாவடியில் நவம்பர் 12-ந் தேதியும், செனசமுத்திரம் சுங்கச்சாவடியில் நவம்பர் 21-ந் தேதியும் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த 2 சுங்கச்சாவடிகளும் நவம்பர் மாதத்தில்தான் செயல்பாட்டுக்கு வந்ததால், தற்போது வெளியிடப்பட்டுள்ள 7 சுங்கச்சாவடிகளின் வருவாய் உயர்வு கணக்கில் இவை சேர்க்கப்படவில்லை.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக, தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறையை மேலும் பல சுங்கச்சாவடிகளுக்கு விரிவுபடுத்த உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel