திருப்பரங்குன்றம் சர்வே கல்தூணில் தீபம்? உச்சகட்ட பதற்றம்.. மதுரை முழுவதும் 144 தடை.. 7,000 போலீசார் குவிப்பு!

By Mathi

|

Published on 24 Nov 2026, 7:52 AM

Thiruparankundram Tension

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய கல் தூணில் இன்று (நவம்பர் 24) கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, மலை உச்சி முதல் அடிவாரம் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது. வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோயில் பகுதியில் தீபம் ஏற்றப்படும் நிலையில், சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள சர்ச்சைக்குரிய கல் தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் நவம்பர் 20-ந் தேதி இடைக்கால அனுமதி வழங்கியது.

ADVERTISEMENT

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு நேற்று விசாரணைக்கு வரவில்லை. இதனால் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு அமைப்புகள் திரளக்கூடும் என்ற உளவுத்துறை மற்றும் வருவாய்த்துறை தகவல்களைத் தொடர்ந்து மதுரை மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

மதுரை முழுவதும் 144 தடை

மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இது பழைய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144-வது பிரிவுக்கு இணையானது. நவம்பர் 23-ந் தேதி இரவு 9 மணிக்குத் தொடங்கிய இந்தத் தடை உத்தரவு, நவம்பர் 25-ந் தேதி காலை 10 மணி வரை அமலில் இருக்கும்.

ADVERTISEMENT

இதன்படி, அனுமதியின்றி ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது பொதுமக்கள் ஏறிச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட நிகழ்ச்சிகள், திருமணங்கள், இறுதிச் சடங்குகள் உள்ளிட்டவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் 7,000 போலீசார் குவிப்பு

திருப்பரங்குன்றம் மற்றும் மதுரையின் முக்கியப் பகுதிகளில் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மற்றும் புறநகரில் இருந்து 3,000 போலீசாரும், வெளிமாவட்டங்களில் இருந்து 4,000-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்புப் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

4 டிஐஜிக்கள், 7 எஸ்பிக்கள், 10 கூடுதல் எஸ்பிக்கள், 45 டிஎஸ்பிக்கள், 100-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில், துணை ஆணையர் இனிகோ திவ்யன் உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.

மலை உச்சியில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் தீபம் ஏற்ற அனுமதித்துள்ள கல் தூண் பகுதியில் 187 போலீசாரும், சிக்கந்தர் பாதுஷா தர்கா பகுதியில் 190 போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நெல்லித்தோப்பு பகுதியில் 282 போலீசாரும், காசி விஸ்வநாதர் கோயில் பகுதியில் 318 போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுப் பாதையில் 453 போலீசாரும், மலைக்குச் செல்லும் 9 வழித்தடங்களில் 163 போலீசாரும் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.

கிரிவலப் பாதையில் 125 போலீசாரும், சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் 110 போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

70 சிசிடிவி கேமராக்கள்.. வெடிகுண்டு தடுப்புப் பிரிவு சோதனை

திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் முக அடையாளக் கண்காணிப்பு வசதி கொண்ட கேமராக்களும் இடம்பெற்றுள்ளன.

வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீசார் மலை உச்சி, உச்சிப் பிள்ளையார் கோயில், நெல்லித்தோப்பு, மலைப்பாதைகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் ஆயுதம் ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ரெட் ஜோன்.. டிரோன்கள் பறந்தால் நடவடிக்கை

திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மதுரை மாநகர காவல்துறை சிவப்பு மண்டலமாக (RED ZONE) அறிவித்துள்ளது. நவம்பர் 23, 24 ஆகிய இரண்டு நாட்களிலும் அனுமதியின்றி டிரோன்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலை உச்சி, கிரிவலப் பாதை, திருப்பரங்குன்றம் நுழைவு வளைவு முதல் 16 கால் மண்டபம் வரையிலான சாலை, கிரிவலப் பாதைக்கும் மலையடிவாரத்துக்கும் இடைப்பட்ட பகுதிகள் ஆகியவை இந்தத் தடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

தவிர்க்க முடியாத தேவைகளுக்காக டிரோன்களை இயக்க வேண்டியவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்து, முஸ்லிம் அமைப்புகளின் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்திருந்தன. இந்த நிலையில், இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஊர்வலங்கள் நடத்தக் கோரப்பட்ட அனுமதிகளை போலீசார் மறுத்துள்ளனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel