தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான விஜய் நேற்று வருகை தந்திருந்தார். பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று, அவர் ரோட் ஷோ மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது மாருதி நகர் முதல் மூலனூர் வரை 30 கிலோமீட்டர் தூரத்திற்குப் பிரச்சாரப் பேரணி நடத்திய விஜய், வழியில் மாட்டுவண்டியையும் ஓட்டிச் சென்றார். அதேபோல், அப்பகுதியில் இருந்த முருங்கைத் தோட்டத்திற்கு சென்றார். அங்கு இருந்தவர்களுடன் உரையாடிய விஜய் முருங்கைக்காய்களைப் பறித்தார். அங்கிருந்தவர்கள் விஜய்க்கும் வேட்பாளர் சத்யபாமாவிற்கும் முருங்கைக்காய் கட்டுகளைப் பரிசாக வழங்கினர்.
இந்தச் சம்பவம் குறித்து முருங்கை தோட்டத்தின் உரிமையாளர் கூறுகையில், “திடீரென எங்களது முருங்கைத் தோட்டத்திற்கு விஜய் வந்தார்; முருங்கைக்காய்களைப் பறித்தார். சரி, அவரும் பார்த்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டேன். நான் இதுவரை விஜய்யை நேரில் பார்த்ததில்லை; திரைப்படங்களில் மட்டுமே பார்த்துள்ளேன். அவர் எங்கள் தோட்டத்திற்கு வந்தபோது கூட நான் அவரைப் பார்க்கச் செல்லவில்லை. நான் எதற்காக அவரைப் பார்க்க வேண்டும்? நான் திமுகவைச் சேர்ந்தவன்; திமுகவில் அவைத் தலைவராக இருக்கிறேன். ‘திடீரென சிலர் தோட்டத்திற்குள் செல்கிறார்கள்’ என்றார்கள், ‘பார்த்துவிட்டுப் போகட்டும்’ என்று கூறிவிட்டேன்” என்றார்.
அதேபோல் மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் டீ குடித்த கடைக்காரர் திமுக தொண்டர் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

