உதயநிதி வழக்கில் தீர்ப்பு வந்தால் TVK எம்.எல்.ஏ-க்கள் பதவியை இழக்க நேரிடுமா? – என்ன சொல்கிறார் டிகேஎஸ் இளங்கோவன்

Published On:

| By Pandeeswari Gurusamy

தாராபுரம் நகரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளை மீறி, 8 வயது சிறுவனை வேனில் ஏற்றி முதல்வரை அவமதிக்கும் வகையில் அச்சிறுவனைப் பேச வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் காவல்துறை, உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ‘ஏ.என்.ஐ’ (ANI) செய்தி நிறுவனத்திற்குத் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டியில், “உதயநிதி ஸ்டாலின் வழக்கில், தேர்தல் பிரச்சாரத்திற்காகக் குழந்தைகளைப் பயன்படுத்தினார் என்பதே பிரதான குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு என்ன வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். இதில் தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக வந்தால், நாங்களும் நீதிமன்றத்தை நாடுவோம்.

ADVERTISEMENT

ஒவ்வொரு தொகுதியிலும் விஜய்யின் வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்யக் குழந்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஒரு குழந்தை விஜய் குறித்துப் பேசியது மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்தச் குழந்தை வேட்பாளருக்காகப் பிரச்சாரம் செய்யவில்லை; மாறாக விஜய்யைத் தாக்கிப் பேசியிருந்தார்.

ஒருவேளை அந்த வழக்கில் அவர்கள் வெற்றி பெற்றால், டி.வி.கே-வின் அனைத்து வேட்பாளர்களும் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். ஏனென்றால் விஜய் உட்பட டி.வி.கே-வின் அனைத்து வேட்பாளர்களும் குழந்தைகளைப் பிரச்சார உத்தியாகப் பயன்படுத்தியுள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரங்களும் பதிவுகளும் எங்களிடம் உள்ளன” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

அப்போது “கடந்த தேர்தலிலும் திமுக தரப்பில் இதுபோன்ற புகார்கள் எழுப்பப்பட்டதே?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர்: “அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். குழந்தைகளைப் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தியதற்காக வழக்கு தொடர முடியும் என்றால், டி.வி.கே-வின் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் பதவி விலக வேண்டியிருக்கும். அப்படி நடந்தால் அது நல்ல விஷயம்தான். அவரே தனது அரசியலை முடிவுக்குக் கொண்டு வருகிறார் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share