ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் பயன்படுத்திய புதிய தகவல் தொடர்பு கருவிகள் அடுத்தடுத்து கைப்பற்றப்பட்டிருப்பது பாதுகாப்பு படையினருக்கு சவாலாக உருவெடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 29-ந் தேதி பாதுகாப்புப் படையினர் நடத்திய நடவடிக்கையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியான முகமது ஆசிப் என்ற ஹாஷிம் மூசா கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கி, தோட்டாக்கள் மட்டுமின்றி ‘LoRa/Ultra’ தகவல் தொடர்பு சாதனங்களும், ஒரு செல்போனும் கைப்பற்றப்பட்டன.
இதற்கு முன்பும் காஷ்மீரில் இதே வகையான கருவிகள் சிக்கியுள்ளன.
2025-ம் ஆண்டு பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதில் பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்களுடன் இரண்டு LoRa தகவல் தொடர்பு கருவிகளும் கைப்பற்றப்பட்டன.
இந்த கருவிகளை தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு ஆய்வு செய்தது. தீவிரவாதிகள் காஷ்மீர் வனப்பகுதிகளில் இருந்து எல்லைக்கு அப்பால் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு இத்தகைய கருவிகளை பயன்படுத்தினார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் LoRa கருவிகள் சிக்கியிருப்பதுதான் பாதுகாப்பு படையினரை உஷார்படுத்தியுள்ளது.
LoRa என்றால் என்ன?
LoRa என்பது குறைந்த மின்சக்தியை பயன்படுத்தி நீண்ட தொலைவுக்கு சிறிய அளவிலான தகவல்களை அனுப்ப உதவும் ரேடியோ தொழில்நுட்பம்.
இதற்கு சிம் கார்டு தேவையில்லை. செல்போன் கோபுரம் தேவையில்லை. இணைய இணைப்பும் தேவையில்லை.
ஒரு LoRa கருவியில் இருந்து மற்றொரு இணக்கமான கருவிக்கு ரேடியோ அலைகள் மூலம் தகவல்களை அனுப்ப முடியும். இதன் மூலம் குறுஞ்செய்திகள், இருக்கும் இடம் தொடர்பான தகவல்கள், அவசரகால தகவல்கள் உள்ளிட்டவற்றை அனுப்ப முடியும்.
காஷ்மீரில் தற்போது கைப்பற்றப்பட்ட கருவிகள் ரகசியக் குறியீடுகளாக மாற்றப்பட்ட தகவல்களை பரிமாறும் வசதி கொண்டவை என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



வயர்லெஸ் முதல் LoRa வரை
தீவிரவாதிகள் தங்களுக்குள் ரகசியமாக தகவல்களை பரிமாற தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புதிதல்ல. ஆரம்ப காலங்களில் வயர்லெஸ் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
ஒரே அலைவரிசையில் இருக்கும் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இந்த கருவிகள் மூலம் பேசிக் கொள்ள முடியும். ஆனால் இந்த உரையாடல்களை பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து கேட்க முடியும். இதனால் நபர்கள், இடங்கள் மற்றும் திட்டங்களை நேரடியாக குறிப்பிடாமல் சங்கேத வார்த்தைகள் மூலம் தகவல்களை பரிமாறும் நடைமுறை பயன்படுத்தப்பட்டது.
உதாரணமாக ஒரு நபருக்கு ‘பறவை’ என்றும், குறிப்பிட்ட இடத்திற்கு ‘கூடு’ என்றும் சங்கேத பெயர் வைத்திருந்தால்,
“பறவை கூட்டுக்கு வந்துவிட்டது”
என்று தகவல் பரிமாறப்படும்.
இதனை இடைமறித்து கேட்டாலும் ‘பறவை’ என்பது யார்? ‘கூடு’ என்பது எந்த இடம்? என்பதை கண்டுபிடித்தால்தான் அதன் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும்.
பின்னர் செயற்கைக்கோள் தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்தது.
சாதாரண செல்போன் அருகிலுள்ள செல்போன் கோபுரத்தை பயன்படுத்தி தகவல் தொடர்பை ஏற்படுத்துகிறது. ஆனால் செயற்கைக்கோள் தொலைபேசி நேரடியாக செயற்கைக்கோள் வழியாக தகவல்களை அனுப்பும்.
இதனால் செல்போன் கோபுரங்களே இல்லாத மலை, காடு மற்றும் எல்லைப் பகுதிகளில் இருந்தும் தொடர்பு கொள்ள முடிந்தது. இதுவும் பாதுகாப்புப் படையினருக்கு புதிய சவாலை ஏற்படுத்தியது.
ஆனால் செயற்கைக்கோள் தொலைபேசிகளின் பயன்பாட்டை கண்டறிவதற்கான தொழில்நுட்பங்களையும் பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கின.
செல்போன் பயன்பாடு அதிகரித்த பின்னர் சிம் கார்டுகள், இணையம் மூலமான தகவல் தொடர்பு மற்றும் தகவல்களை ரகசிய குறியீடுகளாக மாற்றி அனுப்பும் செயலிகள் பயன்பாட்டுக்கு வந்தன.
இதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. செல்போன் பயன்படுத்தும்போது சிம் கார்டு, செல்போன் கோபுரம், செல்போனின் அடையாள எண் உள்ளிட்ட பல்வேறு தடயங்கள் உருவாகும். இந்த தடயங்களைக் கொண்டு ஒருவர் எந்த பகுதியில் இருந்தார், யாருடன் தொடர்பு கொண்டார் உள்ளிட்ட தகவல்களை பாதுகாப்பு அமைப்புகளால் கண்டறிய முடியும்.
இந்த வரிசையில்தான் தற்போது LoRa தொழில்நுட்பம் பாதுகாப்பு அமைப்புகளுக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதில் சிம் கார்டு இல்லை. செல்போன் டவர் தேவையில்லை. இணையம் தேவையில்லை. செயற்கைக்கோளையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. இதனால் வழக்கமான செல்போன் தகவல் தொடர்பில் கிடைக்கும் தடயங்கள் இதில் கிடைப்பதில்லை.
அதே நேரத்தில் LoRa கருவியை பயன்படுத்தினால் வெளியாகும் ரேடியோ அலைகளை கண்டறிந்து அது பயன்படுத்தப்படும் பகுதியை தோராயமாக கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் பாதுகாப்பு அமைப்புகளிடம் உள்ளது. ஆனால் அடர்ந்த வனப்பகுதிகளில் அந்த கருவி இருக்கும் சரியான இடத்தை கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
பாகிஸ்தான் – சீனா தொடர்பு?
தற்போது கைப்பற்றப்பட்ட LoRa கருவிகள் உள்ளூரில் தயாரிக்கப்பட்டவை அல்ல என்றும், ஏற்கனவே ரகசிய தகவல் தொடர்புக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்ட நிலையில் அவை கிடைத்ததாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கருவிகளின் தொழில்நுட்ப பின்னணியில் சீன தொடர்பு இருப்பதாகவும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கங்களின் நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்ள இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் சந்தேகம் தெரிவித்துள்ளன.
இதையடுத்து தெற்கு காஷ்மீரின் வனப்பகுதிகளில் LoRa கருவிகள் பயன்படுத்தும் ரேடியோ அலைகளை கண்டறியும் வகையில் கண்காணிப்பு சாதனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
