ஆந்திராவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்து திடீரென கோஷங்கள் எழுந்ததால், அவர் தனது பேச்சை பாதியில் நிறுத்திய வீடியோ தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியில் அக்டோபர் 2-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர் நாரா லோகேஷ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செயல் இயக்குநர் அனந்த் அம்பானி உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த சிலர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். அவர்களில் சிலர், “உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்” என வலியுறுத்தி பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

விசில் சத்தமும் அரங்கை அதிரவைத்தது. இதனால் தனது பேச்சை நிறுத்திய நிர்மலா சீதாராமன், கூட்டத்தை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அருகில் அமர்ந்திருந்த சந்திரபாபு நாயுடு எழுந்து மைக்கை வாங்கி, கூட்டத்தினரை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நிர்மலா சீதாராமன் மீண்டும் தனது பேச்சை தொடர்ந்தார். இந்த சம்பவம் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இந்த வீடியோவை பகிர்ந்து, நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு எதிராக மக்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாக விமர்சித்தார்.
ஆனால் இதனை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. கூட்டத்தில் எழுந்த சத்தம் நிர்மலா சீதாராமனுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு அல்ல என்றும், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு ஆதரவாக திரண்டிருந்த மக்களின் உற்சாகத்தையே காங்கிரஸ் திரித்து சித்தரிப்பதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.
மேலும், பெரும் கூட்டத்தை கையாளும்போது ஏற்பட்ட சலசலப்பால் நிகழ்ச்சி சிறிது நேரம் தடைபட்டதாகவும், அதனை ‘மக்கள் கொந்தளிப்பு’ என்று வேண்டுமென்றே தவறாக சித்தரிப்பதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. பாஜகவின் இந்த பதிவை நிர்மலா சீதாராமன் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கமும் ரீ போஸ்ட் செய்துள்ளது.
சந்திரபாபு நாயுடு மறுப்பு
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷுக்கு பதிலளித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “அங்கு நடந்ததை நீங்கள் புரிந்து கொண்ட விதம் உண்மைக்கு முற்றிலும் மாறானது. மக்கள் கோபம் என்று நீங்கள் தவறாக சித்தரிக்க முயற்சிப்பது, உண்மையில் மக்களிடமிருந்து வெளிப்பட்ட மிகப்பெரிய உற்சாகமான வரவேற்புதான்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “கூட்டத்தில் இருந்தவர்களின் உற்சாகம் அதிகமாக இருந்ததால்தான் நிகழ்ச்சி தொடர்ந்து சுமூகமாக நடைபெற நான் சிறிது நேரம் தலையிட வேண்டியிருந்தது. மக்களின் உற்சாகத்தை கோபம் என்று புரிந்து கொள்வது, ஆந்திரா மற்றும் நாட்டு மக்களின் மனநிலையிலிருந்து நீங்கள் எந்த அளவுக்கு விலகி இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது. அரசியல் நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் உருவாக்கப்படும் கதைகள், மக்கள் உண்மையில் என்ன உணர்ந்தார்கள் என்பதை மாற்றிவிட முடியாது” என்றும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
