மாட்டு வண்டி ஓட்டியது முதல் முருங்கை காய் பறித்தது வரை .. முதல்வர் விஜய் ரோடு ஷோவில் நிகழ்ந்த சுவாரசியங்கள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து தலைவர் விஜய் ‘ரோடு ஷோ’: தீவிர வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று, தாராபுரத்தில் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் ‘ரோடு ஷோ’ (Road Show) மூலம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக இன்று காலை விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் விஜய் ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் சென்றார்.

ADVERTISEMENT

தாராபுரம் மாருதி நகரில் இருந்து பிரசார வேனில் முதல்-அமைச்சர் விஜய் ரோடு ஷோ-வில் ஈடுபட்டார். வேட்பாளர் சத்யபாமாவும் உடன் இருந்தார்.

தாராபுரம் அருகே உள்ள மூலனூரில் விஜய், விவசாயிகள் வழங்கிய முருங்கைக்காய்களைப் பரிசாகப் பெற்றுக்கொண்டார். பின்னர் மரத்திலிருந்து முருங்கைக்காயைப் பறித்தவாறே தவெக தலைவர் விஜய் வாக்கு சேகரித்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து காங்கேயம் காளைகளின் முன் நின்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டவர், மாட்டு வண்டியில் அமர்ந்தவாறே தீவிரப் பரப்புரையை மேற்கொண்டார்.

இதன்பின்னர், மூலனூர் அருகே உள்ள வஞ்சியம்மன் கோவிலில் விஜய் சிறப்பு வழிபாடு செய்தார். அப்போது தொண்டர்கள் சிலர், விஜய்க்கு அவரது தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பரிசாக வழங்கினர். தொடர்ந்து சாலையில் இறங்கி நடந்து சென்றும் அவர் வாக்கு சேகரித்தார்.

ADVERTISEMENT

இதனிடையே ரோடு ஷோவில் பேசிய விஜய், “திமுகவோடு கைகோர்க்கக் கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மேடம் ஆகிய இருவருமே மிகவும் கவனமாக இருந்தனர். ஆனால் இன்று என்ன நடக்கிறது? அதிமுக மற்றும் பலரும் திமுகவினரோடு மறைமுகமாக, யாரோடெல்லாம் கூட்டுச் சேரக் கூடாதோ அவர்களுடனெல்லாம் சேர்கின்றனர். எனவே, வாக்காளர்கள் அனைவரும் தவெகவிற்கு வாக்களிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

ரோடு ஷோவில் முதல்வரை பார்க்க வந்த மக்கள், வேல், முதல்வர் விஜய் இருக்கும் போட்டோ உள்ளிட்ட பலவற்றை பரிசாக வழங்கினர்.

இதையடுத்துத் தவெக தலைவர் விஜய் தனது ரோடு ஷோவை நிறைவு செய்து, ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்தடைந்தார். பின்னர் கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share