ராஜன் குறை
இருவகையான போராட்டங்கள் மக்களாட்சியைக் காக்க இந்தியாவில் நடக்கின்றன. ஒரு போராட்டம் காக்ரோச் ஜனதா கட்சியாலும், மாணவர்கள் அமைப்புகளாலும் மும்பாயிலும், டில்லியிலும் நடத்தப்படும் தேர்தல் ஆணையருக்கு, மக்களின் வாக்குரிமைகளை பறித்ததற்கு எதிரான போராட்டம். எதிர்கட்சிகளும் இந்த போராட்டங்களை ஆதரிக்கின்றன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த சில ஆண்டுகளில் நடந்த தேர்தல்கள் எல்லாமே மோசடிகள், ஒன்றிய அரசாங்கம் உட்பட எல்லா அரசாங்கங்களும் கலைக்கப்பட வேண்டும் என்று கூறுமளவு சென்றுள்ளார்.
இன்னொரு போராட்டம் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் என்ற வடிவில் நடக்கின்றது. இதுவும் மக்களாட்சியை காக்கும் போராட்டம்தான். அறமற்ற குதிரை பேர அரசியல், மக்கள் பிரதிநிதித்துவத்தை கேவலப்படுத்துவதிலிருந்து காக்கும் போராட்டம். ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத முதல்வர் விஜய், அ.இ.அ.தி.மு.க-விலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலகச் செய்து தன் கட்சியில் சேர்த்து, அவர்களை மீண்டும் இடைத்தேர்தல்களில் வெற்றி பெறச் செய்ய முயல்கிறார். அதாவது எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது குதிரை பேரம் என்றால், அதனை இடைத்தேர்தல் மூலம் செய்ய முயல்கிறார்.

மக்களிடையே இந்த குதிரை பேர இடைத்தேர்தலுக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது. பல இடங்களில் வேட்பாளர்களை மறித்து வாக்காளர்கள் ஏன் கட்சி மாறி மீண்டும் வாக்கு கேட்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். இதனால் கலக்கமடைந்த விஜய், மதுராந்தகத்தில் எம்.ஜி.ஆர் போல தொப்பி அணிந்து பிரசாரம் செய்துள்ளார். அதாவது தனது திரைநாயக பிம்பம் எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி என்று உணர்த்த இவ்வாறு தொப்பி அணிந்து பிரசாரம் செய்துள்ளார். அவர் குதிரை பேரத்தில் இழுத்த சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.ஆர் தோற்றுவித்த அ.இஅ.தி.மு.க உறுப்பினர்கள் என்பதும் முக்கியமானது.
திரைக் கதாநாயகனின் கருத்துக்களும், பிம்பமும்!
அறுபதாண்டுகளுக்கு முன்னால் “ஆயிரத்தில் ஒருவன்” (1965) திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் நடித்த மணிமாறன் கதாபாத்திரம் கொடுமைப் படுத்தப்படும் அடிமைகள் பொங்கியெழும்போது ஒரு சிறப்பான பாடலைப் பாடும். “ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை” என்ற பாடல்தான் அது. கவிஞர் வாலி எழுதியது. மிகவும் எழுச்சியூட்டும் வரிகளைக் கொண்ட அந்த பாடல் எப்படி ஆதிக்கத்திற்கு எதிராக கேள்விகளை எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தும். அந்த பாடலில் “பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே” என்ற அற்புதமான வரியும் இடம் பெற்றிருக்கும்.
அந்த திரைப்படத்தை பார்த்த ஏழை எளிய மக்கள் பலர் அந்த பாடலின் எழுச்சிமிகு கருத்துக்களை உள்வாங்கியிருக்கலாம். ஏனெனில் எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த மகத்தான பகுத்தறிவு இயக்கமாகிய திராவிட இயக்கம் அதே செய்தியைத்தான் மக்களிடையே பரப்பிக்கொண்டிருந்தது. மக்களாட்சி என்பது ஆட்சியில் உள்ளவர்களைப் பார்த்து “ஏன்?” என்ற கேள்வியைக் கேட்பதுதான் என்ற செய்தியைத்தான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் ஓயாமல் பிரசாரம் செய்து வந்தார்கள். எம்.ஜி.ஆர் அதைப் பாடலாகவே திரையில் பாடினார்.

“ஆயிரத்தில் ஒருவன்” மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. செல்வி ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம் அது. திரைப்படக் கலையின் ஒரு பிரச்சினை என்னவென்றால் கதாநாயகர்களாக நடிப்பவர்கள் கதையில் செய்யும் சாகசங்களில் மனதைப் பறிகொடுக்கும் பலவீனமான உளவியல் கொண்ட ரசிகர்கள் அவர்கள் பிம்பத்தினால் பெரிதும் ஈர்க்கப்பட்டு வழிபாட்டு மன நிலைக்கு சென்று விடுவார்கள். ஏன் என்று கேள்வி கேட்க மறந்துவிட்டு, அந்த பாடலுக்கு வாயசைத்த நடிகரை வழிபடத் தொடங்கி விடுவார்கள்.
காலம் காலமாக மானுட வரலாற்றில் நடப்பதுதான் அது. மகான்களும், துறவிகளும், இறைதூதர்களாக கருதப்பட்ட மேலோர்களும் மானுட வாழ்விற்கான நெறிகளைத்தான் உருவாக்குவார்கள். ஆனால் அவர்கள் கூறிய நெறிகள் மறக்கப்பட்டு அவர்களே பிம்பங்களாக, புனித அடையாளங்களாக, சிலைகளாக மாற்றப்பட்டு மக்களால் வழிபடப்படுவார்கள். பூசாரிகள் இடையே புகுந்து தங்கள் ஆதிக்கத்தையும், கொடுங்கோல் மன்னர்கள் ஆதிக்கத்தையும் அந்த இறைபிம்பங்களைக் கொண்டு நிலைநாட்டுவார்கள். புத்தர், ஏசு என பலருக்கும் நடந்தது அதுதான்.
அதே போலத்தான் திரையில் ஏழைப்பங்காளனாக நடித்து, பகுத்தறிவு பேசி திராவிட இயக்க பிரசாரத்தின் அங்கமாக இருந்த எம்.ஜி.ஆர், அவரே வழிபாட்டிற்கு உரிய நாயக பிம்பமாக மாறி கேள்விக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக மாறி ஆட்சி செய்தார். அவருக்குப் பின் வாரிசாக அவருடன் நடித்த அம்மையார் ஜெயலலிதாவையும் விட்டுச் சென்றார். பகுத்தறிவு இயக்கம் பிம்ப வழிபாட்டு இயக்கமாக அவர்களால் மாற்றப்பட்டு சீரழிந்தது. மற்றொருபுறம் கலைஞரும், பெரியாருக்குப் பின் ஆசிரியர் வீரமணியும் மேலும் பல தலைவர்களும் சிந்தனையாளர்களும் திராவிட இயக்க பகுத்தறிவு மரபை பேணிக் காக்க போராடினார்கள். அந்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.
எம்.ஜி.ஆர் குல்லா அணியும் அரசியல் நீக்க நாயக பிம்பம் விஜய்!
திராவிட இயக்கம் தொடக்கம் முதலே தீவிரமாக எதிர்த்து வந்த “இந்து-இந்தி-இந்தியா” என்ற முழக்கத்தை முன்னிறுத்தும் பார்ப்பனீய இந்துத்துவ சக்தி 2014-ஆம் ஆண்டு ஒன்றிய அரசில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. அதிலிருந்து தமிழ்நாட்டில் எப்படியாவது திராவிட இயக்கத்தின் சுவடுகளை அகற்றிவிட்டு ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று துடித்தது. ஜெயலலிதா மறைவிற்குப் பின் அ.இ.அ.தி.மு.க-வை கபளீகரம் செய்ய நினைத்தது. நடிகர் ரஜினிகாந்த்தை பகடைக்காயாக பயன்படுத்த விரும்பியது. அவர் தப்பித்துக் கொண்டார்.

தமிழ்நாட்டின் வரலாற்று ஆன்மாவின் தொடர்ச்சியாக கலைஞர் மறைவிற்குப் பின் மு.க.ஸ்டாலின் கட்சித் தலைமையேற்றார். பாஜக எதிர்ப்பே தன் அரசியல் என முழங்கினார். இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் 2019, 2024 தேர்தல்களில் பாஜக-வை முற்றிலுமாக முறியடித்தார். மாநில சட்டமன்ற தேர்தலில் 2021-ஆம் ஆண்டு பெருவெற்றி பெற்று முதல்வராகி, தமிழ்நாட்டினை அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார்.
என்ன செய்தும் திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாத பாஜக, நடிகர் விஜய் என்ற திரைப்பிம்பத்தை களமிறக்கியது. அரசியல் நீக்கத்தின் உருவகமான உள்ளீடற்ற நாயக பிம்பமாக விஜய் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, மக்களுக்கு இயல்பாகவே இருக்க க் கூடிய போதாமைகளை பயன்படுத்தி மாற்றத்தின் நாயகனாக தன்னை முன்னிறுத்தி வெற்றி பெற்றார். “திராவிடம்” “தமிழ்நாடு” ஆகிய இந்துத்துவம் வெறுக்கும் இரண்டு வார்த்தைகளையும் தவிர்த்து “தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தார் விஜய்.
அதற்கான சாத்தியம் எப்படி உருவாகியது? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற திரைப்பிம்ப தலைமையின் தொடர்ச்சி அ.இ.அ.தி.மு.க-வில் அறுபட்டு போனது. எடப்பாடி பழனிசாமியால் திராவிட இயக்க பகுத்தறிவுக் கொள்கைகளையும் பேச முடியவில்லை; மக்களை ஈர்க்கும் ஆளுமையாகவும் இல்லை. அதனால் பாஜக-வின் துணையுடன் ஆட்சி செய்பவராகவே விளங்கினார். அது அவரை தேர்தல் வெற்றிகளுக்கு இட்டுச்செல்லவில்லை. அவர் செல்வாக்கு குறையத் துவங்கியது.
அந்த நேரத்தில் தன்னுடைய திரைக்கதாநாயக பிம்பத்தை முதலீடு செய்ய விஜயைத் தூண்டியது பாஜக. திரைப்படங்களில் பிறர் இயக்கியே நடித்து பழக்கப்பட்ட விஜய்க்கு சிறிதும் அரசியல் பயிற்சியோ ஆர்வமோ இல்லை. தன்னையே ஒரு கதாநாயக பிம்பமாகப் பார்க்கும் தற்காதல் மட்டுமே அவருக்கு இருந்தது. அதனால் அவரை இயக்க பல ஆலோசகர்கள் நியமிக்கப் பட்டார்கள். அவர்கள் சொற்படி நடப்பதும், அவர்கள் எழுதிக் கொடுப்பதை படிப்பதுமாக ஒரு பொம்மைத் தலைவராக விஜய் உருவானார்.
கரூரில் அவர் கூட்டக்காட்சி அரசியல் மோகத்திற்காக சேர்க்கப்பட்டு, நாள் முழுவதும் காக்க வைக்கப்பட்ட கூட்டத்தில் நெரிசலில் பலர் மூர்ச்சையடைந்து விழுந்து மிதிபட்டு இறந்த கொடூரம் அரங்கேறியது. உடனே அஞ்சி நடுங்கி விஜயும், அவர் மொத்த கட்சியும் வளைக்குள் சென்று பதுங்கும் உயிரிகள் போல பதுங்கிக் கொண்டனர். தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே விஜயை நேரடியாகக் குற்றம் சாட்டாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்டன. ஆனாலும் விசாரணை, வழக்கு எல்லாம் விஜயை பயமுறுத்தின. வழக்கு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சிபிஐக்கு மாற்றப்பட்ட தால் பாஜக அவரை காப்பாற்றியது.
தி.மு.க-வை வீழ்த்த நினைத்த பார்ப்பனீய, இந்துத்துவ சக்திகளெல்லாம் ஒன்று சேர்ந்து மீண்டும் விஜயை தூக்கி நிறுத்தின. அவரும் செல் ஃபோன் மூலமான பொய் பிரசாரத்தில் சிறப்பாகச் செயல்பட்டு மக்களை ஈர்ப்பதில் வெற்றி பெற்றார். முழுமையான வெற்றி கிடைக்காவிட்டாலும், வட தமிழ்நாட்டில், சென்னையில் அவர் கணிசமான வாக்குகளைப் பெற்றார். முற்றிலும் எதிர்பாராத வகையில் 108 தொகுதிகளில் வென்றார். அந்த வெற்றி நிச்சயம் விரிவாக ஆராயப்பட வேண்டியது என்பதில் ஐயமில்லை.
ஆனால் அரசியல் உள்ளீடற்ற திரைபிம்பமாகவே விஜய் ஆட்சி செய்யத் தொடங்கியதுதான் அவலம். அதிலும் அவருக்கு பெரும்பான்மை இல்லாததால் அவரை ஆதரிக்க ராகுல் காந்தியும், திருமாவளவனும் முன்வந்ததும், அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்று இப்போது அரசியல் கூட்டணி அமைத்திருப்பதும் ஒரு அரசியல் சிக்கலை உருவாக்கியுள்ளன. அகில இந்திய அளவில் தி.மு.க, காங்கிரஸ் பிரிந்தது இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்த பாஜக-விற்கு பெரிதும் உதவியுள்ளது.

வாக்குரிமை பறிப்பு மோசடியும், தேர்தல் குளறுபடிகளும்!
இந்த நிலையில்தான் நாடெங்கும் 13 கோடி மக்களின் வாக்குரிமையை சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பறித்தது தேசிய அளவில் பெரும் போராட்டம் வெடிக்கக் காரணமாகியுள்ளது. இந்த வாக்குரிமை பறிப்பிற்கு முக்கிய காரணம் பழைய வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் தொடர்பான ஆவணங்களை கொடுக்கச் சொல்லி வாக்காளர்களை கட்டாயப் படுத்தியதுதான்.
அதாவது ஒருவர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தாலும், அதில் குறிப்பிட்ட விலாசத்தில் வசித்தாலும், பழைய ஆவணங்கள், அவர்கள் பெற்றோர் தொடர்பான ஆவணங்களைக் கேட்டுத் தரவில்லையென்றால் அவர்களை பட்டியலில் இருந்து நீக்குவது. இது தொடர்பான ஏராளமான வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றன; முறைகேடுகள் விரிவாகச் சுட்டிக் காட்டப்பட்டன. ஆனால் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை மென்மையாகக் கண்டித்துவிட்டு அதன் செயல்பாட்டை அனுமதித்துவிட்டது.
இதனால் மெல்ல மெல்ல கொதிநிலை ஏறிப்போயிருந்தபோதுதான், இரண்டு தேர்தல் ஆணையர்கள் தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்று கூறியிருந்த ரகசியம் வெளிப்பட்டு பெருநெருப்பு பற்றியது. ஏற்கனவே நீட் தேர்வு மோசடிக்கு எதிராக போராட்டம் நட த்தி வென்ற காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற இளைஞர் அமைப்பும், இட துசாரி மாணவர் கூட்டமைப்புகளும் மீண்டும் தேர்தல் ஆணையருக்கு எதிராக களமிறங்கியுள்ளன.

நஸ்ருதீன் ஷா, ஷபானா ஆஸ்மி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள், உதவ் தாக்கரே, ராஜ் தாக்கரே உள்ளிட்ட பல எதிர்கட்சி தலைவர்கள், கபில் சிபில், பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் போன்ற செயல்பாட்டாளர்கள் எல்லோரும் போராட்ட த்தில் இணைந்துள்ளார்கள். தலைநகர் டில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியை யாரும் நெருங்கவிடாமல் தடுப்புகள் அமைத்து தினசரி போராட்டக்காரர்களை கைது செய்து வருகிறது காவல்துறை. போராட்டத்தின் வேகம் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.
தேர்தல் ஆணையம் இரண்டுவிதமான பிரச்சினைகளில் சிக்கியுள்ளது. ஒன்று வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கானவர்களை நீக்கியது, அந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது, வாக்காளர் பட்டியல் கணிணி நிரல்களை ஒரு சிலரே கையாள்வது போன்ற பல தீவிரமான குற்றச்சாட்டுகளை சந்திக்கிறது. இரண்டாவது கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகவே பலரும் கூறிவரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடிகள்.
உச்சநீதிமன்றம் விவிபாட் எனப்படும் வாக்காளர் ஒப்புகைச் சீட்டுகளையும், மின்னணு இயந்திரங்கள் காட்டும் எண்ணிக்கையையும் பத்து சதவீதமாவது ஒப்பிட்டு சரிபாக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த சரிபார்ப்பு திருப்திகரமாக நடப்பதில்லை. முரண்பாடுகள் தோன்றினால் அதற்கு விளக்கங்கள் அளிக்கப்படுவதில்லை. மின்னணு வாக்கு இயந்திர உற்பத்தியிலிருந்து, அவை தேர்தல் முடிந்ததும் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுவது, விவிபாட் சீட்டுகளுடன் சரிபார்ப்பது என ஏராளமான அம்சங்கள் ஐயத்திற்கு உரியவையாகவே விளங்கி வருகின்றன.
இப்போது SIR நடந்த பிறகான தேர்தல்களில் எல்லாம் பாஜக-வை எதிர்த்த முக்கிய தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக மேற்கு வங்க தேர்தல் மிக மோசமாக களவாடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது மிகுந்த ஐயங்களை உருவாக்குவதாக உள்ளது. அவர் பண்பட்ட அரசியல்வாதியாக தன் தோல்வியை ஏற்றுக்கொண்டாலும், பின்னர் வாக்கு எண்ணிக்கை சரிபார்ப்பில் பலவிதமான ஐயங்கள் தோன்றி, வழக்கு போடப்பட்டுள்ளது.
கார்கே கண்டனமும், விஜய் மெளனமும்!
தமிழ்நாட்டில் பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக் தாகூர் போன்ற சில தலைவர்கள் செய்த சதியால் காங்கிரஸ் தேர்தலுக்குப் பின் விஜயுடன் கூட்டணி அமைத்தாலும், விஜய் காங்கிரஸின் எந்த போராட்ட த்திற்கும் ஆதரவளிப்பதில்லை. பாஜக-வை எந்தக் காரணம் கொண்டும் ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேசுவதில்லை. ஆனாலும் சென்ற வாரம் தமிழ்நாட்டு இந்தியா கூட்டணி கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டுள்ளார். பேருக்கு தலை காட்டுகிறாரே தவிர, ஒருபோதும் அவர்கள் பாஜக-வை எதிர்க்க முன்வரமாட்டார்கள் என்பது வெளிப்படையானது.
தி.மு.க கடந்த மூன்று தேர்தல்களாக காங்கிரஸின் முக்கிய ஆதரவு சக்தியாக, இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக விளங்கியபோதும், 2026 தேர்தலில் விஜய் வென்றவுடன் தன்னை முதுகில் குத்திவிட்டு சென்ற காங்கிரஸுடன் இந்தியா கூட்டணியில் தொடர்வதில்லை என்று நியாயமாகவே முடிவு செய்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில்தான் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று தீவிரமான ஒரு குரலை வெளிப்படுத்தியுள்ளார். அவர் சட்ட விரோதமாக SIR நடந்து வாக்காளர்களை நீக்கிய பிறகு நடந்த தேர்தல்கள் எல்லாமே சட்ட விரோதமானவை; அவற்றின் மூலம் அமைந்த அரசுகளும் சட்ட விரோதமானவை என்று கூறியுள்ளார். அப்படியானால் தமிழ்நாட்டில் நடந்த தேர்தலும், விஜய் அரசும் சட்ட விரோதமானவை என்றுதான் பொருள்படும். அந்த அரசுகள் அனைத்தும் கலைக்கப்பட வேண்டும். நீக்கப்பட்ட வாக்காளர்களை சேர்த்து மறுதேர்தல் நட த்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸை நம்பாமல், அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்தில் வாங்குவதில் தீவிரமாக உள்ள விஜய் கார்கேயின் முழக்கத்திற்கு என்ன பதில் சொல்வார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. தமிழ்நாட்டில் நடந்த SIR மட்டும் நியாயமானது என்று சொல்ல இயலாது. இங்கே அதிகம் வழக்குகள் பதிவாகவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் முறையற்ற நீக்கங்களே நடக்கவில்லை என்று கூறமுடியாது.
அகில இந்திய அரசியல் நீக்க சக்தியாக மாறுவாரா விஜய்?
விஜயின் மெளனத்திற்கு மற்றொரு பரிமாணமும் உள்ளது. அதுதான் அவர் குறித்து இந்தியா முழுவதும் நடைபெறும் சமூக ஊடக பொய் பிரசாரம். அவர் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று முன்னிறுத்தப்படும் அவலம். இது எதனால் நடக்கிறது என்பது சிந்திக்கத் தக்கது.
காக்ரோச் ஜனதா பார்ட்டி, இட துசாரி மாணவர் அமைப்புகளின் எழுச்சி வட நாட்டில் ஜென் ஸீ எழுச்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ அரசியல் நீக்கம் செய்யப்பட்ட, கதாநாயக தற்காதல் வலையில் சிக்கிய ஒரு ஜென் ஸீ உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது. அப்போது விஜய் பிம்பத்தை வட நாட்டிலும் பரப்பினால், அது அரசியல் மயப்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு மாற்றாக ஒரு அறியாமைக் கூட்ட த்தை உருவாக்க உதவலாம் என்று நினைக்க வாய்ப்புள்ளது.
இந்த சாத்தியத்தை சுட்டும் விதமாக ஒரு செய்தி சென்ற வாரம் வெளியாகியது. அது என்னவென்றால் டில்லியில் ஒரு இளம்பெண் சாலையில் படுத்துக்கொண்டு மறியல் செய்கிறார். காரணம் கேட்டால் தளபதி விஜய் வந்து தன்னை கட்டியணைத்தால்தான் எழுந்திருப்பேன் என்று கூறுகிறார். இங்கே அவர் யார் என்ன என்பது பிரச்சினையில்லை. இந்த செய்தி எப்படி இன்ஸ்டாகிராம், யூடியூப் வாட்ஸ் அப் என சமூக ஊடகங்களில் பரப்பப் படுகிறது என்பதுதான் முக்கியமாகிறது.
ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கையில்லை என்று பகுத்தறிவைப் பாடிய எம்.ஜி.ஆர் பிம்பம் இன்று ஒரு தொப்பியாக மாறியது போல, கதாநாயக பிம்ப மாயை மூலம் இளைஞர்களின் புரட்சிக் கனலை அணைக்கலாமா என்று ஆதிக்க சக்திகள் சிந்தித்தால் வியப்பதற்கில்லை. அந்தக் கனவு தமிழ்நாட்டு இடைத்தேர்தல்களிலும், வட நாட்டிலும் முறியடிக்கப்படுவது இந்திய மக்களாட்சியைக் காக்க இன்றியமையாதது.
