சென்னை முதல் டெல்லி வரை.. தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா கோரி தீவிரமடைந்த போராட்டம்!

Published On:

| By Mathi

Protest-Gyanesh Kumar

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஞானேஷ்குமாருக்கு எதிராக நேற்று அக்டோபர் 2-ம் தேதி நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

சென்னையில்..

தமிழ்நாட்டின் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஞானேஷ்குமார் பதவி விலக கோரி காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு காக்ரோச் ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வ கார்த்திக் தலைமை வகித்தார்.

ADVERTISEMENT

மும்பையை உலுக்கிய ‘காக்ரோச்’

சிவாஜி பூங்காவில் அபிஜீத் திப்கே தலைமையிலான காக்ரோச் ஜனதா கட்சி (CJP) ‘ஜெயில் பரோ’ போராட்டத்தை நடத்தியது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், எஸ்.ஐ.ஆர். (SIR) நடவடிக்கைகள் தொடர்பாக பொறுப்பேற்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை. போலீஸ் அனுமதி மறுத்த போதும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. நசீருதீன் ஷா, ஷபானா ஆஸ்மி, விஷால் தத்லானி உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.

ஜெய்ப்பூரில் திரண்ட ஆம் ஆத்மி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஞானேஷ்குமாருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இப்போராட்டத்தின் முடிவில் மாநில ஆளுநரிடம் ஞானேஷ்குமாருக்கு எதிராக மனு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதிர்ந்தது கொல்கத்தா

மேற்கு வங்கம் மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் சிபிஎம் தலைமையிலான இடதுசாரி முன்னணி, சமூக அமைப்புகள் இணைந்து ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும், எஸ்.ஐ.ஆர்-ஐ உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. ராணி ராஷ்மோனி அவென்யூவில் தொடங்கி காந்தி சிலை வரை இந்த பேரணி நடத்தப்பட்டது.

குஜராத்தில்..

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், குஜராத் பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஞானேஷ்குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

போர்க்களமான டெல்லி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம் (SFI), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி ஏராளமானோர் ஜந்தர் மந்தர் நோக்கி திரண்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று பேருந்துகளில் ஏற்றினர்.

இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, மூத்த தலைவர் பிருந்தா காரத் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் SFI அகில இந்திய தலைவர் ஆதர்ஷ் எம். சாஜி, பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா, ஐஷி கோஷ், எஸ். ஷில்பா, DYFI தலைவர்கள் ஹிமாக்ன ராஜ் பட்டாச்சார்யா, ஏ.ஏ. ரஹீம், சஞ்சீவ் குமார் உள்ளிட்டோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதே போராட்டத்தில் டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி கட்சியின் சவுரப் பரத்வாஜ், சமூக செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ், ஆர்ஜேடி எம்.பி. மனோஜ் ஜா, AISA தேசிய தலைவர் நேஹா போரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இவர்களில் பலரையும் போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share