தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தாராபுரத்தில் வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, முதல்வரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யை விமர்சித்து பேசினார்.
அவர் கூறுகையில், “இன்று மற்றும் பலர் என்று அதிமுகவை விமர்சிக்கிறார். இப்படி மற்றும் பலர் என அழுத்தி சொல்வதால் தற்போது இதனை சொல்கிறேன். நான் முதலமைச்சராக இருந்தபோது ஒரு படத்தின் ரிலீஸுக்காக எனது வீட்டுக்கு வந்து மூன்று மணி நேரமாக உட்கார்ந்திருந்தவர் விஜய்.
படத்திற்கான டிக்கெட்டுகளை எல்லாம் விற்று விட்டோம். ரிலீசில் பிரச்சனை… மத்திய அரசிடம் பேசி முடித்து தர வேண்டும் என்று காத்திருந்தார்.
சரி நான் முடித்து தருகிறேன் நீங்கள் கிளம்புங்கள் என்று சொன்ன போதும் கூட, இல்லை நீங்கள் முடித்துக் கொடுங்கள் என்று எனது வீட்டிலேயே அமர்ந்திருந்தார்.
அதன் பிறகு அந்த விவகாரத்தை முடித்துக் கொடுத்தேன். அந்த நன்றி அவருக்கு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், ”ஒரு முதலமைச்சர் என்றால் 234 தொகுதிகளுக்கும் பொதுவானவர். தேர்தல் நடக்கிற சமயத்தில் தான் வெவ்வேறு எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
தேர்தல் முடிந்த பிறகு இந்த நாட்டினுடைய முதலமைச்சர் என்றால் அனைவருக்கும் பொதுவானவர் அப்படித்தானே?.
ஆக எதிர்க்கட்சிக்கு ஒரு முதலமைச்சர், ஆளும் கட்சிக்கு ஒரு முதலமைச்சர் என்று இல்லை. ஒரே முதலமைச்சர் தான் இந்த நாட்டை ஆள முடியும். ஆனால் அந்த எண்ணத்தில் அவர் செயல்படுகிறாரா?
அவர் ஆட்சியை பாதுகாக்க வேண்டும். அதற்காக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளரை ராஜினாமா செய்ய வைத்து தனது கட்சியில் இணைத்துக் கொண்டார். இது நியாயமா.
இதுதான் தூய சக்தியா… திருட்டு சக்தி.
கிராமத்தில் ஆட்டை திருடினால் திருடன் என்று சொல்கிறோம். மாட்டை திருடினாலும் திருடன் என்று சொல்கிறோம்.. கோழியை திருடினால் திருடன் என்ற சொல்கிறோம். எம்எல்ஏ-வை திருடினால் என்ன சொல்வது.
அதிமுக சார்பில் வெற்றி பெற்ற நம்முடைய எம்எல்ஏ என்ற முதலீடு திருடப்பட்டு விட்டது. அந்த திருட்டு பொருளை மீண்டும் மீட்டுத் தருவார்களா?” என்று வாக்கு சேகரித்தார்.
