தமிழகத்தில் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது என்பது முதல்வர் விஜய் சொல்லும் தூய சக்தி என்கிற அந்த அடையாளத்தை அழித்தொழிக்கக்கூடிய காரியம் என சிபிஎம் கடுமையாக விமர்சித்துள்ளது.
தமிழகத்தில் ஆளும் த.வெ.க. தலைமையிலான ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இணையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் நடக்கும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. அதேபோல் புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிடுகிறது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் அ.மு. சலீமை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இன்று (அக்டோபர் 2) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய பெ. சண்முகம், “இங்கே எப்படின்னு தெரியவில்லை, தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அநேகமாகச் செயல்படவில்லை.
ஏனென்றால், எந்தவொரு தேர்தல் ஆணைய அதிகாரிகளையும் நாங்கள் தொகுதியில் பார்க்கவில்லை. அவர்களுடைய வாகனங்களைக்கூடப் பார்க்கவில்லை.
வழக்கமாக இடைத்தேர்தலில்தான் அதிகமான பணப்புழக்கம் என்பது நடைபெறும், விதிமீறல் என்பது நடைபெறும்.
ஆனால் அப்படி நடைபெறும் என்று தெரிந்தே, தேர்தல் ஆணைய அதிகாரிகள் யாருமே களத்திலே இல்லாமல், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூடத் தெரியாத நிலைமைதான் தமிழகத்திலே இரண்டு தொகுதிகளிலும், தாராபுரம், மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் இருந்து கொண்டிருக்கிறது.
ஆகவே இத்தகைய மோசடி, வாக்குகளுக்காகப் பணம் கொடுப்பது போன்ற தேர்தல் விதிமுறைகளுக்கு விரோதமாகச் செயல்படக்கூடிய நிலைமை இருக்கிறபோது, தலையிட்டுத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் செயலற்ற தன்மையில் இருக்கிறது.
ஆகவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தவெக, திமுக அணி, அதிமுக-பாஜக அணி ஆகிய மூன்று அணியைச் சேர்ந்தவர்களும் அபரிமிதமான பணத்தை நேரடியாக வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் பணி என்பது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த பணம் கொடுக்கிறார்கள் என்பதை மக்கள்தான் சொல்கிறார்கள். பணம் கொடுக்காமல் ஓட்டு கேட்கிற ஒரே கட்சி நமது இடதுசாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்.
அதனால்தான் மக்கள் வந்து ‘அவர்கள் எல்லாம் கொடுக்கிறார்கள், நீங்கள் மட்டும் கொடுக்காமல் இப்படி வெறும் நோட்டீஸை மட்டுமே கொடுத்துவிட்டுப் போகிறீர்களே’ என்று ரொம்ப வருத்தமாக மக்கள் எல்லாம் எங்களிடம் கேட்கிறார்கள்.
அதற்கான வாய்ப்பே இல்லை, நாங்கள் அப்படி கொடுக்கவும் மாட்டோம். கொடுப்பதற்கான வாய்ப்பும் கிடையாது. இரண்டாவது ஓட்டை விற்பனை செய்வது என்பது ரொம்ப ரொம்ப தவறானது என்கிற முறையில் தான் மக்கள் மத்தியிலே நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் மற்ற மூன்று அணிகளுமே வெளிப்படையாக, எந்தவிதமான தயக்கமோ, அச்சமோ அல்லது தேர்தல் விதிமுறைகள் நம் மீது பாயுமே, சட்டம் பாயுமே என்கிற கொஞ்சம் கூட அச்சமில்லாமல் அவர்கள் இந்தப் பண விநியோகத்தில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஊழல் குற்றச்சாட்டு ஒன்றும் நான் சொல்லவில்லை. தேர்தலில் வாக்குகளுக்குப் பணம் கொடுக்கிறார்கள். ‘தூய சக்தி நாங்கள்தான், தமிழ்நாட்டிலேயே தூய சக்தி நாங்கள்தான்’ என்று தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அவர் சொல்லுகிற அந்த வாக்குமூலத்திற்கு நேர் எதிராக இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது என்பது அவர்களுடைய தூய சக்தி என்கிற அந்த அடையாளத்தை அழித்தொழிக்கக்கூடிய காரியமாக இருக்கிறது. அதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.” என்றார்.
