நாட்டில் 13 கோடி பேரின் வாக்களிக்கும் உரிமையை தடுத்துள்ள ஜனநாயகப் படுகொலைக்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று மு. வீரபாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் இன்று (அக்டோபர் 1) தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “தேர்தலில் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் மிகவும் இயல்பான ஒன்று. ஆனால் ‘எஸ்.ஐ.ஆர்’ (SIR) என்ற பெயரில் இங்கு வாக்குத் திருட்டு நடந்திருக்கிறது. இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. சுமார் 13 கோடி பேரின் வாக்குரிமையைப் பறித்திருக்கிறார்கள். பிரதமரும் உள்துறை அமைச்சரும் இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யப்படும் வரை எங்களது இந்தப் போராட்டம் தொடரும்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய மூன்று கட்சிகளும் பணம் கொடுக்கிறார்கள். வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து, எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என முடிவு செய்கிறார்கள். இந்தத் தேர்தலில் மற்ற கட்சிகளில் யாரும் மக்களைச் சந்திக்கவில்லை; மக்களிடம் அரசியல் பேசவில்லை. வெறுமனே தலைவர்கள் வந்து பேசிவிட்டுச் செல்கிறார்கள். நாங்கள் மட்டுமே மக்களைச் சந்திக்கிறோம்” என்றார்.
அப்போது, “தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் விஜய் கருத்து தெரிவிக்காதது குறித்து…” செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரத்தில் த.வெ.க தலைவர் விஜய் பேச வேண்டும்; தன் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். இங்கு நடைபெற்றிருப்பது ஜனநாயகப் படுகொலை. வாக்குரிமை என்பது அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் உரிமை. டாக்டர் அம்பேத்கர் சொல்வது போல் ஒவ்வொரு வாக்குச்சீட்டும் ‘ரத்தத் திட்டு’. நீண்ட நெடிய வரலாற்றுப் போக்கில் சிந்திய ரத்தத்திற்கு விலையில்லை. ஆனால் 13 கோடி பேரின் வாக்களிக்கும் உரிமையைத் தடுத்திருக்கிறார்கள் என்றால் இது ஜனநாயகப் படுகொலையா இல்லையா? தமிழகத்தைச் சேர்ந்த முதல்வர் விஜய் இதற்குத் தன் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் சார்பில் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்றார்.
மேலும், “பா.ஜ.க-வும் தி.மு.க-வும் உறவாக இருக்கின்றன என்று விஜய் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்; ஆனால், பா.ஜ.க குறித்து எந்த வார்த்தையும் அவர் பேசவில்லை என்று தி.மு.க விமர்சிக்கிறதே?” என்ற கேள்விக்கு, “இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாங்கள் பா.ஜ.க-விற்கு அரசியல் பகையாக இருக்கிறோம். நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்றால், சட்டத்தின் ஆட்சி முறை காப்பாற்றப்பட வேண்டும் என்றால், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் பா.ஜ.க தோற்கடிக்கப்பட வேண்டும். எங்களது முதன்மை அரசியல் பகை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் என்று நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம். இந்தப் பாதையைத் த.வெ.க பின்பற்ற வேண்டும் என விரும்புகிறோம். த.வெ.க தலைவர் விஜய்யும் பா.ஜ.க-வைச் கடுமையாக விமர்சிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.
