முதல்வர் ரொம்ப நேரம் நிற்கிறார், மக்கள் வெயிலில் நிற்கிறார்கள். சீக்கிரம் பேச்சை முடிக்கும்படி தான் தாராபுரம் வேட்பாளர் சத்யபாமாவிடம் கூறினேன் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
தாராபுரத்தில் நேற்று தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது சத்யபாமா பேசிக் கொண்டிருக்கையில் பின்னால் நின்று கொண்டிருந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு, ஒரு அழைப்பு வந்தது.
அதை பேசி முடித்ததும் சத்யபாமா அருகில் வந்த அமைச்சர் ராஜ்மோகன் காதில் எதையோ சொல்லிவிட்டு நகர்ந்து நின்றார்.
அவர் அவ்வாறு சொன்ன சில நொடிகளில் சத்யபாமா அழ தொடங்கினார். உடனே அருகில் நின்றிருந்த முதல்வர் விஜய் அவர் அருகில் வந்து தேற்றினார்.
இது தொடர்பான வீடியோ நேற்று இணையதளங்களில் வைரலானது. திமுக எம்பி கனிமொழியும் விமர்சித்திருந்தார். அதிமுக ஐடி விங் பக்கத்தில், இந்த நிகழ்வை விமர்சித்து குறும்படம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த சூழலில் சத்யபாமா காதில் பேசியது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
தாராபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அமைச்சர் அருண்ராஜ் பேசியபோதே இதே மாதிரி ஆர்கனைசர்ஸ் போன் பண்ணி, ‘ரொம்ப நேரமா சிஎம் நிக்கிறாரு, மேக் இட் ஃபாஸ்ட்’ன்னாங்க. அருண்ராஜிடம் இதை நான் சொன்னேன்.
‘நான் உயரம் குறைவாக இருந்ததால் அப்போது வெளியில் தெரியவில்லை. சத்யபாமா அக்கா பேசும்போதும் ரொம்ப நேரமா CM நின்னுகிட்டே இருக்காரு, மக்கள் வெகு நேரமா காத்திருக்காங்க. அதனால கொஞ்சம் மேக் இட் ஃபாஸ்ட்’ – அப்படித்தான் என்னிடம் சொன்னார்கள். அதைத்தான் அவரிடமும் சொன்னேன்.
இப்படி ஆதாரமில்லாத அபாண்டமான குற்றச்சாட்டை சொல்கிறார்கள். என் தாயின் மீது ஆணையாக சொல்றேன்… ரொம்ப நேரமா CM நிக்கிறாரு, மக்கள் கொளுத்துற வெயில்ல நின்னுகிட்டு இருக்காங்க, அந்த கூடாரத்துக்கும் வெளியே நிறைய பேர் நிக்கிறாங்க. அதனால ‘மேக் இட் ஃபாஸ்ட், சீக்கிரம் பண்ணுங்க, சீக்கிரம் பண்ணுங்க’னுதான் சொல்லிக்கிட்டு இருந்தாங்களே தவிர, இப்படி அரசியல் காரணத்திற்காக, அடிப்படை ஆதாரமில்லாமல் சொல்வதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
8 மணி நேரத்துக்கு மேல பல இடங்களில் டிராவல் பண்ணி நின்னுகிட்டு, மக்கள் அன்பில் வீசிய பொருட்கள் எல்லாம் பிடித்து அவர்களுக்கு முகம் சுளிக்காமல் புன்னகை சிந்தி, எல்லோரையும் மகிழ்வித்து மேடையேறிய அந்த மனிதர்… அப்படி அங்க தொப்பையா நனைந்து அவர் வரும்பொழுதே, வேனுக்கு வரும்போதே அவர் உடம்பெல்லாம் நனைந்து அப்படித்தான் வந்திருந்தாரு. மறுபடியும் வேகமாக முகத்தைத் துடைத்துட்டு மேலே ஏறி நின்றுகொண்டிருந்தார்.
முதலமைச்சர் வெகுநேரமா நின்றுகொண்டிருந்தார், அவருக்காக பார்க்க வந்த மக்கள் வெகுநேரமாக நின்றுகொண்டிருக்கிறார்கள். வழக்கமா நடக்கிறதுதான். எங்கள் அண்ணன் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சியிலும் இதே மாதிரி ஆர்கனைசர்ஸ் வந்து என்கிட்ட சொல்லி இருக்காங்க, நான் தொகுப்பாளரா இருந்தப்ப.
சகோதரர் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போதும் இதே மாதிரி வந்து சொல்லி இருக்காங்க. ‘டெபுட்டி CM வந்துட்டாரு, மீதி பேர்லாம் கம்மியா பேசுங்க, சீக்கிரம் பண்ணுங்க’னு.
கலைஞர் நூற்றாண்டு விழாவில் நான்தான் தலைமைத் தொகுப்பாளர். அத்தனை ஆயிரம் பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலும் அப்ப இதே மாதிரிதான் – ‘ரஜினி சார் வந்துட்டாரு, கமல் சார் வந்துட்டாரு, கொஞ்சம் மத்தவங்களை கம்மியா பேச சொல்லுங்க’னு சொன்னப்ப இதே மாதிரி அங்கிருந்து கன்சோல்ல இருந்து எனக்கு போன் பண்ணி சொல்லுவாங்க. வாக்கீ டாக்கில்தான் அதெல்லாம் சொல்லுவாங்க. உடனே நான் வந்து அவங்ககிட்டகொஞ்சம் சீக்கிரம் பண்ணுங்க, நேரம் குறைவாக இருக்கு’னு சொல்லுவேன்.
இந்த அடிப்படை உண்மை இது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக ஒரு பெண்ணுடைய கண்ணீரை, அந்த அம்மா வலியில பேசுறாங்க. ஆனால் அரசியல் காரணத்துக்காக… ஒரு ஐடி விங் அப்படி சொன்னா பரவாயில்லை, ஒரு பெரிய தலைவர் இப்படி சொல்லலாமா?
எனவே உண்மை இதுதான். மக்களும் தலைவரும் காத்திருக்கிறார்கள், நின்றுகொண்டிருக்கிறார்கள், வேகமாக பேச சொன்னாங்களே தவிர வேற எதுவும் கிடையாது” என்று பதிலளித்தார்.
