டெல்லியில் நடந்த நகர்வு… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வர் விஜய்க்கு திருமா வலியுறுத்தல்!

Published On:

| By Kavi

மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை முறியடிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக முதல்வர்டி.கே. சிவகுமார் காவிரியின் குறிக்கே மேகதாதுவில் அணைகட்ட தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி, டெல்லியில் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலைச் சந்தித்துள்ளார். அப்போது மேகதாது உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்த்திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதியளிப்பது ஆகியவற்றை விரைவுப்படுத்த வேண்டுமென கோரியுள்ளார்.

மேகதாது சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர்த் திட்டத்திற்குரிய புதிய விரிவான திட்ட அறிக்கையை (DPR) ஒப்படைத்து, அதன் இணக்க அறிக்கையின் மதிப்பீட்டை விரைவுப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் விசிக தலைவர் திருமாவளவன், கர்நாடாகவின் முயற்சியை முறியடிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நேற்றிரவு (செப்டம்பர் 30) அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கர்நாடக முதலமைச்சரின் இந்த நடவடிக்கைகள், தமிழ்நாட்டின் நீர் உரிமைக்கு எதிராக மேகதாது அணையைக் கட்டி முடித்திட வேண்டும் என்கிற தீவிரத்தன்மையினை வெளிப்படுத்துகிறது.

ADVERTISEMENT

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் ஆகியவற்றை புறந்தள்ளிவிட்டு, தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரை வழங்காமல் கர்நாடக ஆட்சியாளர்கள் காலம் காலமாய் வஞ்சிப்பது தொடர்கிறது.

அத்துடன், ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்திலிருக்கும் எந்த ஒரு அரசாக இருந்தாலும் இதற்கான தீர்வைத் தேடாமல் இவற்றை வேடிக்கை பார்ப்பதிலும், தமிழ்நாட்டிற்கான உரிமையை நீர்த்துப்போகச் செய்வதிலும் கவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேகதாது அணையைக் கட்டும்நிலை உருவானால் தமிழ்நாட்டின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக மாறும். நெல் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படும். டெல்டா மண்டலம் பாலைவனமாகும். தமிழினத்தின் வாழ்வாதாரம் பாழகும். ஆகவே, கர்நாடக அரசின் இம்முயற்சிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உள்ளது.

இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இது தொடர்பாக விவாதித்து மேகதாது அணை கட்டும் முயற்சியை முறியடிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share