பாமகவை பாராட்டிய ஆதவ் அர்ஜூனா – தவெக – விசிக கூட்டணியில் விரிசல்? – திருமா விளக்கம்!

Published On:

| By Kavi

தவெக – விசிக உறவில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படக்கூடியவர்களுக்கு நாம் இரையாகிவிடக்கூடாது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் முதல்முறையாக தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று முதல்வராகியுள்ளார். 108 இடங்களை பிடித்த அவரது தமிழக வெற்றி கழக கட்சிக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள், இடதுசாரிகள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

ADVERTISEMENT

இதில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அமைச்சரவையிலும், தவெக கூட்டணியிலும் இடம்பெற்றுள்ளன.

இந்த சூழலில் தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கலாம் என்றும், அக்கட்சிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.

ADVERTISEMENT

ஆனால் இதை பாமக எம்எல்ஏவான சௌமியா அன்புமணி வதந்தி என்று மறுத்துள்ளார்.

அதேசமயம் நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பாமகவை பாராட்டி பேசி இருந்தார்.

ADVERTISEMENT

அதாவது, பாமக இல்லை என்றால் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்காது. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியிலேயே அதிமுக வெற்றி பெற்றிருக்காது என்று பாமகவை தூக்கி பேசி இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசி வீடியோ வெளியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,

“பாஜகவும் பாமகவும் இருக்குற அணியில் விடுதலைச் சிறுத்தைகள் ஒருபோதும் இடம்பெறாது என்று நாம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சொல்லி வருகிறோம்.

அந்த நிலைப்பாட்டை ஒரு வாய்ப்பாக கருதி, தவெக கூட்டணியில் பாமக இடம்பெறப்போகிறது என்கிற வதந்தியை திட்டமிட்டு பரப்புகிறார்கள்.

அதனால் தான் அவர்கள் அதிமுகவுக்கு வழங்க வேண்டிய ஆதரவைக் கூட வழங்காமல் நடுநிலை வகிப்பதாக கூறியிருக்கிறார்கள். உண்மையில் அவர்கள்தவெகவுக்கு ஆதரவு தர இருக்கிறார்கள், அதன் மூலம் இடைத்தேர்தல் முடிந்ததும் பாமக தவெகவோடு கைகோர்க்கும், அமைச்சரவையிலும் இடம்பெறும் என்றெல்லாம், துணை முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகளை பரப்புகிறார்கள்.

அவர்களுடைய நோக்கம் என்னவென்றால், பாமக தவெக கூட்டணியில் இடம்பெறும் என்ற செய்தி பரப்பப்பட்டால், விடுதலைச் சிறுத்தைகள் பின்வாங்குவார்கள், தேர்தல் களத்தில் ஆர்வம் காட்டமாட்டார்கள், தவெக  வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க மாட்டார்கள்.

இதன் மூலம் தவெகவுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவு முழுமையாக போய் சேராமல் தடுக்க வேண்டும். இத்தகைய ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகளை தவெகவுக்கு முழுமையாக பரிமாற்றமடைய விடாமல் தடுத்துவிட முடியும் என்று கணக்கு போட்டு இந்த வதந்தியை திட்டமிட்டு பரப்புகிறார்கள்.

இயக்கத் தோழர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் ஆட்சியமைப்பதற்கு முன்பே இதுபோன்ற வதந்தி உருவானது. தவெக பாமகவோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆனால் தவெக தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெறுவதில் தான் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்போதும் இப்படி ஒரு செய்தி பரவியது.

அவர்களுடைய நோக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தவெகவில் இணையவிடாமல் தடுப்பது, திமுகவுடனும் தொடரவிடாமல் தடுப்பது, எந்த அணியிலும் இடம்பெறவிடாமல் தடுத்து தனிமைப்படுத்துவது என்கிற உள்நோக்கத்தோடு தான் அத்தகைய வதந்திகளை திட்டமிட்டு பரப்பினார்கள், இப்போது பரப்புகிறார்கள்.

தவெகவுக்கும் பாமகவுக்கும் இடையே உள்ள உறவு எத்தகையது என்பது நமக்கு தெரியாது. அதைப்பற்றி நாம் ஒருபோதும் சிந்தித்ததில்லை. அதுகுறித்து நாம் எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை.

ஏனென்றால் நாம் ஏற்கனவே ஒரு முடிவை எடுத்திருக்கிறோம், அதை நடைமுறைப்படுத்தி வருகிறோம், அந்த நிலைப்பாட்டில் உறுதியாகவும் இருக்கிறோம். இது எல்லோருக்கும் தெரியும், அனைவரும் அறிந்த அரசியல் உண்மை.

ஆகவே நமக்கு எந்த ஊசலாட்டமும் இல்லை. இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம். எனவே இதுபோன்ற வதந்திகள் எப்போது வந்தாலும், எந்த சூழலில் வந்தாலும், எந்த மூலையிலிருந்து வந்தாலும் அதனை நாம் பொருட்படுத்த தேவையில்லை.

தவெகவோடு நாம் கொண்டிருக்கிற இந்த அரசியல் உறவு திடீரென ஏற்பட்ட உறவு என்றால் கூட, இது ஒரு வரலாற்று கட்டாயமாக மாறியிருக்கிறது, காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.

எனவே இந்த உறவில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படக்கூடியவர்களுக்கு நாம் இரையாகிவிடக்கூடாது. மிக கவனத்தோடும், மிகுந்த எச்சரிக்கையோடும் அரசியல் களத்தில் நாம் காய்களை நகர்த்த வேண்டியிருக்கிறது.

எனவே என் உயிரினும் மேலான விடுதலைச் சிறுத்தைகளே, மதுராந்தகம் தொகுதியில் எந்த சுணக்கமும் இல்லாமல், தொய்வும் இல்லாமல், தேக்கமும் இல்லாமல், தயக்கமும் இல்லாமல் திறம்பட தேர்தல் பணியாற்றிட வேண்டும், வாக்குகளை திரட்டிட வேண்டும்” என்று கூறியுள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share