தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ள இந்தியா கூட்டணி, அக்டோபர் 2 முதல் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தவும், அக்டோபர் 6-ஆம் தேதி டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடவும் முடிவு செய்துள்ளது.
டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று (செப்டம்பர் 30) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில்
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
- சோனியா காந்தி
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
- காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்
- ஜெய்ராம் ரமேஷ்
- திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, – ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்
- தேசியவாத காங்கிரஸ் சுப்ரியா சுலே
- சமாஜ்வாதி கட்சி ராம்கோபால் யாதவ், ஹரேந்திர மாலிக், மவுலானா மொஹிபுல்லா நத்வி
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.ஏ.பேபி, ஜான் பிரிட்டாஸ்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா, பி.சந்தோஷ் குமார்
- சிபிஐ (எம்எல்) தீபங்கர் பட்டாச்சார்யா
- ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஒமர் அப்துல்லா
- மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெகபூபா முப்தி
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சாதிக் அலி ஷிஹாப் தங்கல்
- கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே.மணி
- புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் என்.கே.பிரேமச்சந்திரன்
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் ஜார்க்கண்ட் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து இன்று விரிவாக விவாதித்தோம். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.
வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு முன்பு இருந்த வாக்காளர் பட்டியலையே வரக்கூடிய தேர்தல்களில் பயன்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்படும் பெயர்கள், நீக்கப்படும் பெயர்கள் மற்றும் செய்யப்படும் திருத்தங்கள் அனைத்தையும் தொகுதி வாரியாகவும், வாக்குச்சாவடி வாரியாகவும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயரை நீக்குவதற்கு முன்பு அவருக்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும். பெயர் நீக்கப்படுவதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். அதற்கு எதிராக முறையிடுவதற்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும்.
புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான நடைமுறைகளையும் எளிமைப்படுத்த வேண்டும்.
மீண்டும் வாக்குச் சீட்டு முறைதான்..
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். வாக்கு மக்களுடையது; மக்கள் அளிக்கும் தீர்ப்பும் அவர்களுடையதுதான்.
அடுத்தடுத்த போராட்டங்கள்
அக்டோபர் 2 முதல் 8-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மாவட்ட அளவில் ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ பேரணிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளையும் இதில் இணைக்க இருக்கிறோம்.
தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி
அக்டோபர் 6-ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக செல்ல உள்ளனர். அதைத் தொடர்ந்து அக்டோபர் 2-வது வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்க உள்ளோம். நாடு முழுவதும் 5 பெரிய பொதுக் கூட்டங்களையும் நடத்த முடிவு செய்துள்ளோம். அதற்கான இடங்கள் மற்றும் தேதிகள் பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
