அப்படி என்ன தப்பு பண்ணினேன்.. கண்ணீர்விட்ட தாராபுரம் தவெக வேட்பாளர்

Published On:

| By Pandeeswari Gurusamy

தாராபுரம் வேட்பாளர் சத்யபாமா திமுகவால் நான் மிகவும் பாதிக்கப்பட்டவள். அந்த திமுகவோடு இணைந்து செயல்படுவது பிடிக்காமல்தான் இங்கு வந்தேன் என தெரிவித்துள்ளார்.

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து தமிழக முதல்வ்ர் தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கூட்டத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா பேசுகையில், “நல்ல இயக்கத்தைக் கட்டிக்காத்துக் கொண்டிருக்கும் அண்ணன் அவர்களின் ஆசீர்வாதத்தோடும், இந்த இயக்கத்தின் கோட்டையாக நின்று, தாராபுரம் தொகுதியை வெற்றிக் காணிக்கையாகத் தலைவரின் பாதத்தில் செலுத்துவேன் என்று அயராது உழைத்துக் கொண்டிருக்கும் அண்ணன் செங்கோட்டையன் அவர்களின் ஆசீர்வாதத்தோடும் இங்குப் பொறுப்பு அமைச்சராக இருந்து சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர் அருண்ராஜ் அவர்களுக்கும், இங்கு வருகை தந்துள்ள அமைச்சர் பெருமக்களுக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் எப்படி ஓடி ஓடி வேலை செய்வார்களோ, அதுபோல வேலை செய்யும் அமைச்சர்களை நான் இதுவரை கண்டதில்லை.

சக தோழர்களாக என் மீது ‘அக்கா, அக்கா’ என்ற அன்போடு, ‘அமைச்சர்’ என்ற ஆணவம் இல்லாமல் பழகிக் கொண்டிருக்கும் அமைச்சர் பெருமக்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் இங்குதான் நான் பார்க்க முடிகிறது.

ADVERTISEMENT

மற்றும் இந்தக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராகவும், இந்த கொங்கு மண்டலத்தின் செல்லப் பிள்ளையாகவும் திகழும் அண்ணன் கே.வி.ராமலிங்கம் அவர்களே…

இப்படிப்பட்ட ஒரு நல்ல இயக்கத்தில் இணைந்துள்ள நான், இரண்டே விஷயங்களை மட்டும் கூறி விடைபெறுகிறேன்.

ADVERTISEMENT

என் மீது பழி சுமத்துகிறார்கள். ஒரு பெண் என்று கூடப் பாராமல் என்னை அசிங்கமான வார்த்தைகளால் பேசுகிறார்கள். கடந்த 2 மாதங்களாக நான் அலைபேசியைப் (Mobile) பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்; அந்த அளவுக்கு அசிங்கமாகப் பேசுகிறார்கள்.

நான் அப்படி என்ன தவறு செய்தேன்?

அம்மாவின் உண்மையான உணர்வு எனக்குள் இருந்தது. திமுகவால் நான் மிகவும் பாதிக்கப்பட்டவள். அந்த திமுகவோடு இணைந்து செயல்படுவது பிடிக்காமல்தான் இங்கு வந்தேன்.

நமது தலைவரைப் பொறுத்தவரை, ஒற்றை ரூபாய் காசு கூடக் கொடுக்காமல் ஒரே முறையில் முதலமைச்சரான தூய்மையான தலைவர்.

அப்படிப்பட்ட தலைவர் தவறான காரியத்தைச் செய்திருப்பாரா?

அப்படிச் செய்திருந்தால் என்னை மீண்டும் இந்தப் பகுதியில் வேட்பாளராக அறிவித்திருப்பாரா?

என் மீது தவறு இருந்தால், நான் உங்கள் முன் துணிச்சலாக வந்து நின்று வாக்கு கேட்க முடியுமா?

உங்கள் பதவி சுகத்திற்காக, ஒரு பெண் என்று கூடப் பாராமல் என் மீது அவதூறுகளையும், ஆபாசமான வார்த்தைகளையும் வீசுகிறார்கள்.

நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்று கண்கலங்கினார்.

மேலும் பேசிய அவர் தவறு செய்திருந்தால் உங்கள் முன்னால் தைரியமாக வந்து நின்றிருக்க மாட்டேன்.

இங்கே இருக்கின்ற தாராபுரம் தொகுதியில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அடிமட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை.

இந்த இயக்கத்தில் கூட்டணியாக இணைய வேண்டும் என்று 33 சட்டமன்ற உறுப்பினர்களும் வந்தபோது, நாமும் ஆளுங்கட்சியோடு இருந்தால் என் பகுதி மக்களுக்கு நல்லது செய்யலாமே என்ற எண்ணத்தில்தானே வந்தேன்? நான் வேறு எதையும் நினைக்கவில்லையே!

கடந்த ஐந்து ஆண்டுகளாகப் போராடியும் செய்ய முடியாத காரியங்களை, என் மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இன்று இந்த இடைத்தேர்தலின் மூலமாகத் தொகுதிக்குட்பட்ட அனைத்து அமைச்சர்களும் இங்கு வந்திருக்கிறார்கள்; நமது முதலமைச்சரும் வந்திருக்கிறார்.

இந்தப் பகுதியில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன என்பது முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றுவிட்டது.

இனி இந்தத் தாராபுரம் தொகுதி, இன்னும் ஆறு மாத காலத்தில் சீரும் சிறப்புமாக, வளமான தொகுதியாக மாறப்போவதில் எந்த ஐயமும் இல்லை.

இன்று எதிர்க் கட்சித் தலைவர்களைப் பார்த்துச் சொல்கிறேன்… நீங்கள் என் மீது எவ்வளவு அவதூறுகளைச் சொன்னாலும் சரி, என் பகுதி மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால், அந்த அவதூறுகளை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

என் மக்களுக்காக உழைக்கவே வந்தேன் என்பதை நான் நிரூபித்தே தீருவேன்.” என்றார்.

தவெக வேட்பாளர் சத்யபாமா சென்ற பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிராக மக்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இன்று முதல்வர் முன் கண்ணீர் மல்க பேசினார். அப்போது முதல்வர் விஜய் வேட்பாளர் சத்யபாமாவின் தோளில் தட்டி ஆறுதல் தெரிவித்தார். இச்ச சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share