தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேட்பாளராக சத்யபாமா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதல்வர் ஜோசப் விஜய் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
அப்போது பேசிய அவர். “”உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்.
வணக்கம்! கொங்குநாட்டுத் தங்கங்களே,
கொங்குநாட்டுச் சிங்கங்களே,
என் சொந்தங்களே, நான் வந்து மதுராந்தகத்தில் சொன்னதைத்தான் இங்கேயும் சொல்கிறேன். ஏனென்றால் அதுதான் என் மனத்திலிருந்து உண்மையாக வருகிற ஒரு விஷயம்.
நான் இங்கு முதலமைச்சராக எல்லாம் வரவில்லை. எப்போதும் போல உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் வீட்டு மகனாக, உங்கள் வீட்டு அண்ணனாக, உங்கள் வீட்டுத் தம்பியாக, உங்கள் விஜய்யாக… எப்போதும் உங்களுடைய ஒரு உறவு என்கிற அந்த உரிமையோடு உங்கள் வீட்டுத் தாய்மாமனாக நான் இங்கு வந்திருக்கிறேன்.
நமது தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே, மாநில அளவில் நாம் கொடுத்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். நமது அரசு பதவியேற்ற நாள் முதல் கொடுத்த வாக்குறுதியான ஊழல், லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகத்தை முழு முனைப்போடு உறுதிப்படுத்தி வருகிறோம்.
அரசு பொறுப்பேற்ற பின் பள்ளி, ஆலயங்களின் அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்பட்டு 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரங்களில் 65 போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைத்து, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகின்றன.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
13 லட்சம் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நெல்லுக்கு ஊக்கத்தொகை எப்போதுமில்லாத வகையில் உயர்த்தப்பட்டு, மொத்தமாகச் சன்னரக நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ.2,750-ஆகவும், பொதுரக நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ.2,600-ஆகவும் உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது.
‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் மகளிர் இலவசமாகப் பயணிக்க ‘வெற்றிப் பயணம்’ திட்டம் மாநிலம் முழுவதும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கும் ‘அன்னபூர்ணி சூப்பர் சிக்ஸ்’ திட்டம் வரும் பொங்கல் முதல் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படவுள்ளது.
குடும்பத்திற்கான ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்’ தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக 70 வயதிற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு வருமான உச்சவரம்பின்றி கட்டணமில்லா இலவச சிகிச்சை வழங்கும் வகையில் ‘முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
630 அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டுச் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
மகளிர் தொழில்முனைவோருக்காக ‘சிங்கப்பெண் கடன் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.1,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புறச் சாலை மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு முதற்கட்டப் பணிகள் துவங்கியுள்ளன.
முதல் 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 1,06,998 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்ற பின் திருப்பூர் மாவட்டத்திற்குச் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் சிலவற்றை இங்கே தெரிவித்துக்கொள்கிறோம்.
திருப்பூர் இந்தியாவின் பின்னலாடைத் தலைநகராகத் திகழ்கிறது. இம்மாவட்டம் 6 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. எனவே, ஜவுளி ஏற்றுமதி பாதிப்படையாமல் இருக்கப் பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 11 சதவீத இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் தொய்வின்றித் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முன்னணி ஜவுளி மற்றும் பின்னலாடை உற்பத்தி மாநிலங்களில் ஒன்றாக விளங்குவதால், தமிழ்நாடு பின்னலாடை வாரியம் தனியாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் 4 உலகளாவிய விற்போர்-வாங்குவோர் சந்திப்பு நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடத்திட அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விதைகளை அவற்றின் தரம் குறையாமல் சேமித்து வைத்துப் பாதுகாத்திடத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் புதிய விதை சேமிப்புக் கிடங்கு அமைக்க அறிவிக்கப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் தளங்கள், தாய்-சேய் நல சேவை மையத்திற்குப் புதிய கட்டிடம், மாணவர்களுக்கான தங்கும் விடுதி, தாய் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகள், அதிநவீன கருவிகள், ஊட்டச்சத்து மறுவாழ்வு மையம் மற்றும் சுவாச மையம் ஆகியவை சுமார் ரூ.72 கோடி ரூபாய் செலவில் அமைக்க அறிவிக்கப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பூங்கா மேம்படுத்த நடவடிக்கையில் உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய நீச்சல் குளம் அமைக்கும் பணி அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் ரூ.30 கோடி செலவில் கோழிப் பண்ணைகளில் நோய்களைக் கண்டறிவதற்கான உயிரியல் பாதுகாப்பு நிலை ஆய்வகம் அமைத்திட அறிவிக்கப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.
இந்த நாடு சுதந்திரமடைந்த பல ஆண்டுகளுக்குப் பின்னும், திருப்பூர் மாநகரை ஒட்டியுள்ள தொகுதியாக இருந்தும், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பது கவனத்திற்கு வந்துள்ளது.
குறிப்பாக, தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் இன்னும் வழங்கப்படாத நிலை உள்ளது.”
“திருப்பூர் மாவட்டப் பாசனக் கால்வாய்கள் தூர்வாராமலும் மேம்படுத்தப்படாமலும் இருப்பதால், விவசாயப் பெருமக்கள் பெருமளவில் போதிய பாசன நீர் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றனர்.
பரம்பிகுளம் – ஆழியாறு பாசனப் பகுதிகளில் விவசாயிகளுக்குத் தடையின்றி நீர் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டிய ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் இன்றுவரை செயல்படுத்த முந்தைய அரசுகளின் காலகட்டங்களில் ஆக்கப்பூர்வமான தொடர் நடவடிக்கைகள் செய்யப்படவில்லை.
இந்தளவும் கூட தாராபுரம், காங்கேயம், குண்டடம் வட்டாரங்களிலும் மூலனூர் மற்றும் பல்லடத்தின் சில ஊராட்சிகளிலும் குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. காவேரி ஆற்றின் நீரினை ஆதாரமாகக் கொண்ட புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் அமைத்திருந்தால், திருப்பூரின் அனைத்து ஊரக மற்றும் நகராட்சி குடியிருப்புகளுக்குக் குடிதண்ணீர் முறையாகக் கிடைத்திருக்கும்.
தாராபுரம் நகராட்சியில் அடிப்படைத் தேவைகளான தெருவிளக்குகள், திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால் போன்ற பல பணிகள் பல ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டு மக்கள் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, எழுச்சியுற்று வாக்களித்து நமது அரசினை அமைத்துள்ளனர். இது மக்களுக்கான அரசு; ஆகவே, மக்களின் அடிப்படைத் தேவைகள் என்ன என்று நாம் புரிந்து வைத்துள்ளோம். உங்களது எண்ணங்கள் நிறைவேற, தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பேராதரவை வழங்கிடக் கேட்டுக்கொள்கிறோம்.
