தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 28, 2026 மதுரையில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சென்னையில் இன்று அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “தாய் மாமன் தங்க மோதிர திட்டம் பிற்போக்குத்தனமானது; இது மீண்டும் பெண்களைப் பிற்போக்குத்தனத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு திட்டமாக உள்ளது” என்று கனிமொழி போன்றவர்கள் முன்வைக்கும் குற்றசாட்டு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “இதை முற்போக்கு அல்லது பிற்போக்கு என்று பகுத்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இது பொருளாதார ரீதியாக அந்தக் குடும்பத்திற்குச் செய்யும் ஒரு உதவி.
இன்றைக்கும் கிராமப்புறங்களில் உள்ள பல குடும்பங்களில் ஒரு சிறிய பொட்டுத் தங்கம் கூட இல்லாத சூழல் நிலவுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்துவதற்கான (empower) ஒரு வாய்ப்பை நாம் உருவாக்குகிறோம். ‘பிறக்கும் போதே குழந்தை தங்கத்தோடு பிறந்திருக்கிறது’ என்ற நேர்மறையான கோணத்திலும் இதை நாம் பார்க்கலாம்.
எனவே, அந்தக் குடும்பத்திற்கு ஒரு தங்கம் கிடைக்கிறது என்பதைத் தான் நாம் முதன்மையாகக் கவனிக்க வேண்டும். அது வெறும் பொருளாதார உதவி மட்டுமல்ல, அந்தக் குடும்பத்திற்கான ஒரு மதிப்பிற்குரிய அணிகலனாகவும் அமைகிறது.
இன்றும் எத்தனையோ ஏழை எளிய குடும்பங்கள் ஒரு துளி தங்கத்தைக் கூட நேரில் பார்த்திராத நிலையிலேயே வாழ்கின்றன. அப்படிப்பட்ட குடும்பங்களுக்கு இந்தக் குழந்தையின் மூலம் தங்கம் சென்று சேர்வதை ஒரு வரப்பிரசாதமாகத் தான் நாம் பார்க்க வேண்டும்.” என்றார்.
