கோவை: தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் விழாவில் மின்தடையா? – டான்ஜெட்கோ விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் விழாவில் மின் தடை ஏற்பட்டது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முதல்வர் விஜய் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகள் உள்ள திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் திட்டம் அமலுக்கு வந்தது.

ADVERTISEMENT

அந்த வகையில் கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். அவர் அங்கிருந்து கிளம்பிய நிலையில் பொது சுகாதார துறை அதிகாரிகள் தங்க மோதிரத்தை வழங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீர் மின்வெட்டு ஏற்பட்ட சம்பவம் பேசுபொருளானது.

இதுகுறித்து முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில், “கோவை அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வழங்கும் போது மின்வெட்டு ஏற்பட்டு மருத்துவமனை அதிகாரிகள் மொபைல் டார்ச் லைட் அடித்து மோதிரங்களை வழங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT

தமிழகத்தில் எந்த அளவிற்கு மின்வெட்டு நிலைமை மோசமாகி இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி. மக்கள் நலத்திட்டத்தின் ஒரு துவக்கவிழாவானது அதுவும் உயிர் காக்கும் அரசு மருத்துவமனையில் இருளில் நடந்திருப்பது,தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 4 மாதங்களிலேயே தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றி விட்டது என்பதற்கான அடையாளமே.

ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய மின்சாரத்துறை அமைச்சரோ சமாளிக்கும் விதமாக அற்ப காரணங்களைக் கூறி வருவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

ADVERTISEMENT

அண்மையில் விகடன் இதழில் வெளியான தகவலின் படி, தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக தூத்துக்குடி, வடசென்னை, மேட்டூர் போன்ற அரசுக்குச் சொந்தமான அனல்மின்நிலையங்களில் மின் உற்பத்தியை குறைக்கச் சொல்லியும், தனியாரை ஊக்குவிப்பதற்காக இதுபோன்ற மின்வெட்டு செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது என்ற தகவலும் வெளியாகி இருப்பது தவெக அரசு மக்களுக்கான அரசா அல்லது தனியாருக்கான அரசா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (செப்டம்பர் 29) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “நேற்று கோவை அரசு மருத்துவமனையில் தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்ட விழா நடைபெற்றது.

விழா தொடங்குவதற்கு முன்பாக, மருத்துவமனை வளாகத்தின் மின் விநியோகம் ஜெனரேட்டர் மூலம் பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.

விழா நிறைவடையும் நிலையில் பின்னர், மருத்துவமனை வளாகத்திற்குள் அமைந்துள்ள மின்தடைப்பான் (Breaker) 13:26 மணியளவில் செயல்பட்டு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக சுமார் 40 வினாடிக்குள் EB மின் விநியோகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, மின் விநியோகம் உடனடியாகச் சீரமைக்கப்பட்டது.

மேற்படி 40 விநாடிகள் மட்டுமே மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. இத்தடை விழா நிறைவடைந்த பின்னரே ஏற்பட்டதாகும். மின்வாரியத்தின் விநியோகப் பகுதியில் எவ்வித மின்தடை மற்றும் இடையூறும் ஏற்படவில்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share