உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ; 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி மாவட்டம் கடமலைக்குண்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மலைக்கிராம மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மதுரை சென்றுள்ள முதல்வர் விஜய் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்திக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
தேனி மாவட்டத்தில் மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு உள்ளிட்ட 9 ஊராட்சிகளைச் சேர்ந்த 98 கிராமங்களில் பல தலைமுறைகளாக வசித்து விவசாயம்செய்து வரும் 4,601 குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு விவசாயிகளிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வன விவசாயிகளின்குடும்பங்களைச் சேர்ந்த 118 அரசு ஊழியர்கள் சம்பந்தப் பட்ட நிலங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்றும்,தவறினால் ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி கிராம மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வரும் 29ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. உச்ச நீதிமன்ற விசாரணையில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்.
தவறான தகவல்களை அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்து தங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தலைமுறை தலைமுறையாக வாழும் தங்களுக்கு 2006 வன உரிமை சட்டத்தின் படி பட்டா வழங்கிட வேண்டும் என்றும் கூறி இன்று 3 ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்
இந்தப் போராட்டம் வெற்றியடையா பட்சத்தில் தொடர்ச்சியாக இந்த காத்திருப்பு போராட்டத்தை தொடர போவதாக தெரிவித்து தற்போது பெண்கள் ஆண்கள் உள்ளிட் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ், “தேனி மாவட்ட மலைக்கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கண்டித்து கடமலைகுண்டில் தொடரும் போராட்டம் – மதுரைக்கு திட்டங்களை தொடங்கி வைக்க சென்றுள்ள முதலமைச்சர், அருகில் உள்ள கடமலைக்குண்டில் வாழ்வாதாரத்திற்காக போராடும் மலைக்கிராம மக்களை நேரில் சந்திக்காமல் தவிர்ப்பது அவர்களுக்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துர் – மேகமலை புலிகள் காப்பகம் அறிவிப்பால் தேனி மாவட்டம் வருசநாடு, மேகமலை பகுதியில் உள்ள தும்முக்குண்டு, காந்திகிராமம், வண்டியூர், பொம்மிராஜபுரம் என 98-க்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலைக்கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில், தமிழக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்து தங்களின் நிலம், வீடு, தொழில் ஆகியவற்றோடு வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமுறை தலைமுறையாக அங்கு வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மதுரைக்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகை தந்துள்ள முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயண தூரத்தில் மட்டுமே உள்ள மலைக்கிராம மக்கள் போராட்டம் நடத்தும் கடமலைக்குண்டுவுக்கு சென்று அவர்களை சந்திக்காமல் தவிர்த்திருப்பது, நாளை உச்சநீதிமன்றத்தில் வரவுள்ள வழக்கின் விசாரணையில் அரசு தங்களை கைவிட்டுவிடுமோ ? என்ற பதற்றமும் அச்சமும் அம்மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
தமிழ்நாடு தான் என் வீடு, 8 கோடி தமிழக மக்கள் தான் என் சொந்தம், மக்களுக்கு நன்றி கடன் செலுத்தவே தான் அரசியலுக்கு வந்ததாக வீரவசனம் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் மலைகிராம மக்களுக்கு செய்யும் நன்றி கடன் இது தானா? என போராடும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, மலைக்கிராம மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் மதுரை சென்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அங்கிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ள கடமலைக்குண்டுவுக்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திடுவதோடு, நாளை வரவுள்ள வழக்கில் அம்மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலான வாதங்களை எடுத்துரைக்கவேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.”
