தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் பரப்புரைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, வெற்றி பெற்ற சில நாட்களிலேயே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக ஆளும் கட்சியான தவெகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, தற்போது தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சத்யபாமா தவெக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். இதற்குப் பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா செல்லும் இடங்களில் பொதுமக்கள் அவரைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஆங்காங்கே சத்யபாமாவுக்கு எதிர்ப்பு எழுவது தொடர்கதையாகி உள்ளது.
இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் தவெகவிற்கு வாக்கு சேகரிக்க வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் “சத்யபாமா போட்டியிடும் வரை விசில் சின்னத்திற்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம்” என்கிறார். மேலும், “கௌரி, சித்ராவுக்குச் சீட் கொடுக்காமல், ஏன் அதிமுகவில் இருந்து தாவிய நபருக்குச் சீட் கொடுத்தீர்கள்? நீங்கள் உழைத்ததற்கு என்ன மரியாதை? வேறு கட்சியில் இருந்து வந்தால் அவர்களிடம் பலம் இருக்கிறது என்பதற்காகச் சீட் கொடுத்து விடுவீர்களா? இது என்ன கொள்கை?
என்ன காரணத்தால் சத்யபாமா வேட்பாளராக நிறுத்தப்பட்டார்? சத்தியபாமா காசு வாங்காமல் கூட இருக்கட்டும்; ஆனால் ஏன் கட்சி மாறினார்? உங்களுக்கு என்று ஒரு கொள்கை இருக்க வேண்டாமா? நாளை திமுகவில் இருந்து உதயநிதி ஸ்டாலின் வந்து ‘எனக்கு அப்பா வேண்டாம், நான் தவெகவிற்கு வருகிறேன்’ என்று சொன்னால் உங்கள் தலைவர் சீட் கொடுத்து விடுவாரா?” என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். இச்சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
