திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், குண்டடம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, குண்டடம் காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா போட்டியிடுகிறார். இவர் ஏற்கெனவே அதிமுக சார்பில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று, பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததையடுத்து, தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சத்யபாமாவின் பிரசாரத்தின்போது குண்டடம் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி குண்டடம் அருகே பிரசார வாகனங்கள் சென்றபோது அதிமுக மற்றும் தவெக ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிராகக் கோஷங்களை எழுப்பியதால் பதற்றமான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து போலீஸார் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.
இதன் தொடர்ச்சியாகக் குண்டடம் காவல் துறையினர் இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது நடைபெற்றதாகக் கூறப்படும் பேச்சுவார்த்தையின் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒருவர், “ நாங்க சாலை மறியல் பண்றதுக்கு ரெடி. எல்லாரையும் அரெஸ்ட் பண்ணுங்க” எனக் கூறுகிறார்.
மேலும் ஒருவர் பேசுகையில், “ யாரும் தவறு பண்ணவில்லை. பொதுமக்கள் கேட்கிறார்கள். வேட்பாளர் சத்யபாமாவிற்கு ஓட்டு போட்டவர்கள் கேட்கிறார்கள். கேட்பதற்கு ஜனநாயகத்தில் உரிமை இல்லையா? ஓட்டு கேட்க வர உரிமை இருக்கிறது என்றால், எங்களுக்கு அதுகுறித்து கேட்கும் உரிமையும் இருக்கிறது. போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களை கைது செய்திருந்தால் சட்டப்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அவர்களை இப்போது வரை காணவில்லை. நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இரவில் கைது செய்து எவ்வளவு நேரம் ஆகிவிட்டது? சட்டப்படி என்ன நடவடிக்கை? கொண்டு போய் கோர்ட்டில் ஹேண்ட் ஓவர் பண்ண வேண்டியதுதானே? கோர்ட்டில் ஹேண்ட் ஓவர் பண்ணுங்க சார்” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளக்ஙளில் வைரலாகி வருகிறது.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர் சத்தியபாமா பிரசாரத்திற்குச் செல்லும் பகுதிகளில் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவது தவெகவினருக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
