ராஜன் குறை
ஒரு புகழ்பெற்ற வரலாற்று நிகழ்வு; ஷேக்ஸ்பியரால் நாடகமாக்கப்பட்டது; திரைப்படமாகவும் பலமுறை எடுக்கப்பட்டது. அது என்னவென்றால் ஜூலியஸ் சீசர் கொலையுறும் நிகழ்வு. ரோம் நகரை செனட் என்ற அவையே ஆட்சி செய்த சமயத்தில், பெரும் போர் வீரரான ஜூலியஸ் சீசர் ரோமப் பேரரசராக முடிசூட்டிக்கொள்ள எண்ணுவார். அதனை எதிர்க்கும் செனட் உறுப்பினர்கள் அவரை சூழ்ந்துகொண்டு குறுவாள்களால் குத்திக் கொல்வார்கள்.
இந்திய மக்களாட்சி இப்போது ஜூலியஸ் சீசர் போல எதிரிகளால் சூழப்பட்டுள்ளது. ஒருவர் முதுகில் குத்துகிறார். ஒருவர் வயிற்றில் குத்துகிறார். ஒருவர் நெஞ்சில் குத்துகிறார். குற்றுயிரும் கொலையுயிருமாக மக்களாட்சி தள்ளாடிக் கொண்டுள்ளது எனலாம்.
நாடெங்கும் தேர்தல் ஆணையத்திற்கு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கின்றன. காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற இளைஞர்கள், மாணவர்கள் அமைப்பு காந்தி ஜெயந்தி தினத்தில் மும்பையில் பெரும் போராட்ட த்தை துவங்கப் போவதாக அறிவித்துள்ளது. டில்லியில் பல்வேறு பொதுநல அமைப்புகளை சார்ந்தவர்கள், யோகேந்திர யாதவ், நேஹா போரா உள்ளிட்டவர்கள் ஊர்வலமாக சென்று கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நாடெங்கும் இந்த பிரச்சினை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதல் முறையாக குதிரை பேர இடைத்தேர்தலை உருவாக்கியுள்ளது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம். மக்களாட்சி விழுமியங்களின் அப்பட்டமான சீரழிவு இது என்றால் மிகையாகாது. இந்த இரண்டு பிரச்சினைகளையும் விரிவாக ஆராய்வது நமது அரசியல் தெளிவிற்கு அவசியமானது.

ஞானேஷ்குமாரின் பின்னணி
ஞானேஷ்குமார் 1988-ஆம் ஆண்டில் பணியில் இணைந்த இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரி. ஆக்ராவைச் சேர்ந்த இவர் கேரள ஆட்சிப் பணி பட்டியலில் பணியில் அமர்ந்தவர். இவர் கேரளாவில் பணியாற்றியபோதே முக்கியமான சர்ச்சை ஒன்றில் இவர் பெயர் அடிபட்டுள்ளதாக இணைய தளங்கள் கூறுகின்றன. அதன் பின் இவர் ஒன்றிய அரசில் பாஜக-விற்கு அணுக்கமான பல நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். காஷ்மீர் மாநில அந்தஸ்த்தை நீக்கிய சட்டம், அயோத்தி ராமர் கோயிலுக்கான டிரஸ்ட்டை உருவாக்கிய சட்டம் போன்றவற்றை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஞானேஷ்குமார் அவர் பதவிக் காலத்திலேயே தேர்தல் ஆணையத்தில் பணியாற்றியுள்ளார். அவரது பணிக்காலம் முடிந்த பிறகு சர்ச்சைக்குரிய முறையில் பிப்ரவரி, 2025-ஆம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையாராக பணியமர்த்தப்பட்டார். அந்த சர்ச்சை என்னவென்றால் தலைமை தேர்தல் ஆணையர் எப்படி நியமிக்கப்படவேண்டும் என்ற நியதியை பாஜக புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் மாற்றியமைத்துதான்.
முதலில் இருந்த சட்டம் என்னவென்றால் தலைமை தேர்தல் ஆணையரை பிரதமர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய மூவர் குழு நியமிக்க வேண்டும். இது ஆளும் கட்சி விரும்பியபடி நியமிக்க முடியாது என்ற பாதுகாப்பை வழங்கியது. ஆனால் ஒன்றிய பாஜக அரசு அந்த சட்டத்தை மாற்றி பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கும் வழிமுறையை உருவாக்கியது. இந்த குழுவில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் எதிர்கட்சித் தலைவர் இடம் பெறுவதில் எந்த பொருளும் இல்லை எனலாம்.
இந்த புதிய சட்ட த்தின் கீழ் நியமிக்கப்பட்டவர்தான் ஞானேஷ்குமார். எனவே தெளிவாகவே பாஜக-வின் கைப்பாவையாக செயல்படவே அவர் நியமிக்கப்பட்டார் என்று கருத இடமிருக்கிறது. அதற்கேற்றபடியே தேர்தல் ஆணையம் மேலான புகார்கள் பெருகத் துவங்கின. “வோட் சோரி” அதாவது “ஓட்டுத் திருட்டு” என்ற பெயரில் ஏராளமான புகார்கள் காங்கிரஸ் கட்சியால் முன்வைக்கப்படத் துவங்கின.

கர்நாடக மாநில தொகுதி ஒன்றின் வாக்காளர் பட்டியல் விவரங்களை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணைய தளத்திலிருந்தே எடுத்துத் தொகுத்தபோது ஏராளமான குளறுபடிகள் கண்டுபிடிக்கப் பட்டன. பிரேசில் நாட்டு விளம்பர மாடல் ஒருவரின் புகைப்படத்துடன் பல வாக்காளர்கள் பெயர்கள் இருந்தன. ஒருவருக்கே ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகள் இருந்தன. ஒரே விலாசத்தில் நூற்றுக்கணக்கான வாக்குகள் இருந்தன. இப்படியான கோளாறுகள் வெளிப்பட்டபோது தேர்தல் ஆணையம் எந்தவிதமான திருப்திகரமான விளக்கமும் தரவில்லை.
சிறப்புத் தீவிர திருத்தம்
இதன் பிறகு ஞானேஷ்குமாரின் தனிப்பங்களிப்பு துவங்கியது. வாக்காளர் பட்டியலை சரிபார்த்து சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR – Special Intensive Revision) என்ற நடைமுறையை ஒவ்வொரு மாநிலமாக செயல்படுத்தத் துவங்கினார். கிட்டத் தட்ட சென்சஸ் கணக்கெடுப்புக்கு ஒப்பான இந்த செயல்பாட்டை மிகக் குறுகிய காலத்தில் செய்ய திட்டமிட்ட து பெரும் திகைப்பை ஏற்படுத்தியது.மேலும், ஒரு வாக்காளர் இருபதாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சிறப்புத் தீவிரத் திருத்த த்தில் இடம் பெற்றிருந்தாரா என்ற விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன. அப்போது வாக்களிக்காதவர்களின் தாய் தந்தையர் விவரங்கள் கேட்பட்டன. சரியான விவரங்கள் தரப்படவில்லையென்று ஏராளமானவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன.

நாடு முழுவதும் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இதுவரை நீக்கப்பட்டுள்ளன. வரி கட்டும், பாஸ்போர்ட் வைத்திருக்கும் பலருக்கும் வாக்குரிமை நீக்கப்பட்டுள்ள அவலம் நிகழ்ந்துள்ளது. எந்த ஒரு குடிநபரின் வாக்குரிமையும் பறிக்கப்படக்கூடாது என்ற இலட்சியத்திற்குப் பதிலாக எந்த ஒரு தவறான வாக்காளர் பெயரும் பட்டியிலில் இடம்பெற்றுவிடக்கூடாது என்ற இலட்சியம் உருவாக்கப்பட்டு பலரது குடியுரிமையே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு எழுந்தது. ஏராளமான வழக்குகள் போடப்பட்டன. உச்சநீதிமன்றம் பல கண்டனங்களைத் தெரிவித்தாலும், இந்த விபரீத நடைமுறையை தடுத்து நிறுத்தவில்லை.
தவறாகப் பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த விண்ணப்பங்களுக்கு என்னவாயிற்று என்று பலருக்கும் தெரியவில்லை. வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதே புதிராக மாறியுள்ளது.
இவ்வாறு கோடிக்கணக்கான வாக்களர்கள் நீக்கப்பட்டு நடந்த மாநில தேர்தல் முடிவுகள் இன்று ஐயத்திற்கு உரியவையாக பார்க்கப்படுகின்றன. ஏனெனில் பாஜக-வை தீவிரமாக எதிர்த்த மாநில கட்சிகள் எல்லாம் தோல்வியடைந்துள்ளன. மமதா பானர்ஜி, அர்விந்த் கேஜ்ரிவால், மு.க.ஸ்டாலின் போன்ற பிரபல தலைவர்கள் அவர்கள் தொகுதிகளில் தோற்றதற்கு நீக்கப்பட்ட வாக்குகள் காரணமா என்ற கேள்வியை காக்ரோச் ஜனதா கட்சி அபிஜித் தீப்கே எழுப்பியுள்ளார்.

ஆணையத்தில் வீசிய புயல் – பிரச்சினை வெடித்தெழக் காரணம்
தலைமைத் தேர்தல் ஆணையர் என்பவர் தன்னிச்சையாகச் செயல்படக்கூடாது என்பதற்காகத்தான் மூன்று ஆணையர்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. எல்லா முடிவுகளும் மூவரும் கலந்தாலோசித்து பெரும்பான்மை வாக்கு அடிப்படையில்தான் எடுக்கப்பட வேண்டும் என்பதே விதி. பல சமயங்களில் ஆணையர்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பது வெளிப்பட்டுள்ளது. பல ஆணையர்கள் பதவி விலகி உள்ளார்கள்.
இப்போது ஒரு புதிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்துவும், விவேக் ஜோஷியும் 14 முக்கிய சந்தர்ப்பங்களில் ஒன்றுபட்டு எதிர்ப்புத் தெரிவித்தும், ஞானேஷ்குமார் அதைப் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை அவர்கள் இருவரும் அமைச்சரவை செயலருக்குக் கடிதமாக எழுதியுள்ளார்கள். இந்த பிரச்சினை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியாகி பெரும் புயலாக மாறியுள்ளது.
பெரும்பான்மை இல்லாமல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பான முடிவுகளை ஞானேஷ்குமார் எடுத்தார் என்றால் அந்த நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பானவை என்றாகின்றன. அதன் அடிப்படையில் நடந்த மாநில தேர்தல்களும் கூட முறையான தேர்தல்கள் அல்ல என்று கூறவேண்டி வருகிறது. அதனால்தான் இப்போது எதிர்கட்சிகளும், காக்ரோச் ஜனதா கட்சியும் போராட்டங்களை அறிவித்துள்ளன. ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் சீர்திருத்தப் பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
எதற்காகப் போராட வேண்டும்?
நிச்சயம் ஞானேஷ்குமார் என்ற தனிமனிதருக்கு எதிராக மட்டும் போராட்டம் நடக்கப்போவதில்லை. இந்திய தேர்தல்கள் ஐயங்களுக்கு அப்பாற்பட்டவையாக மாற்றப்படவேண்டும் என்பதே முக்கியமான கோரிக்கையாக இருக்க வேண்டும். மூன்று முக்கிய அம்சங்களில் போராடுபவர்கள் கவனத்தைக் குவிக்க வேண்டும்.
- வாக்காளர் பட்டியல் முழுவதும் தேடப்படக்கூடிய தரவுகளாக (searchable database) பொதுமன்றத்தில் வைக்கப்பட வேண்டும். மக்களாட்சியின் உயிர்மூச்சான வாக்குரிமை பகிரங்கமான யாரும் சரிபார்க்கக் கூடிய தரவாக இருப்பது அவசியம்.
- வாக்காளர் பட்டியலில் விடுபட்டு விண்ணப்பித்தவர்கள் அனைவரது பெயர்களும், காரணங்களும் தேடப்படக்கூடிய தரவுகளாக தனிப்பட்டியலாக பொதுமன்றத்தில் பகிரப்பட வேண்டும்.
- தேர்தலுக்குப் பின் விவிபாட் ஒப்புகை சீட்டுகள் முழுவதும் எண்ணப்பட்டு, அந்தந்த மின்னணு வாக்கு இயந்திரங்களுடன் சரிபார்க்கப்பட்ட பிறகே முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். அல்லது முந்தைய வாக்குச்சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும்.
இந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாமல் இந்திய மக்களாட்சி பிழைத்திருப்பது கடினம். வாக்களர் பட்டியலிலும், மின்னணு இயந்திரங்களிலும் மோசடிகள் நடக்கின்றன என்ற சாத்தியம், ஐயம் மக்களாட்சியைக் கொன்று விடும். இவையே மக்களாட்சியின் உயிர்மூச்சு ஆகும்.

தமிழ்நாட்டின் பேரக் குதிரை இடைத்தேர்தல்
நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டங்கள் உருக்கொள்ளும் நேரத்தில், தமிழ்நாட்டில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் கவனம் குவிந்துள்ளது. இந்த இரண்டு இடைத்தேர்தல்களும் மிக மோசமான மக்களாட்சி விழுமியங்களை சிதைக்கும் முன்னுதாரணங்கள் என்றால் மிகையாகாது.
தமிழ்நாட்டில் மே மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் நடிகர் விஜய் போட்டியிட்ட கூடுதல் தொகுதியை கழித்தால் 107 இடங்களில் வென்றது எனலாம். இது பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு 11 இடங்கள் குறைவானதாகும். இருந்தாலும் ஆளுனர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதால் தி.மு.க கூட்டணியில் வென்ற கட்சிகள் (காங்கிரஸ் 5, விசிக, முஸ்லீம் லீக், வ.கம்யூனிஸ்டு, இ.கம்யூனிஸ்ட் தலா 2) அந்த 11 தொகுதிகளின் ஆதரவை வழங்கி நடிகர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க உதவின.
விஜய் அதில் திருப்தியடைவில்லை. அவரது நோக்கம் அ.இ.அ.தி.மு.க-விலிருந்து பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களை தவெக-வில் இணைய வைத்து அந்த கட்சியை கபளீகரம் செய்வதுதான். அப்படி செய்துவிட்டால் அவர் வெளிப்படையாக பாஜக-வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்பதும் முக்கியமான சாத்தியம்.
அதில் என்ன பிரச்சினையென்றால் அ.இ.அ.தி.மு.க மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் 47 பேரில் அவரால் 25 பேரைத்தான் தன் பக்கம் இழுக்க முடிந்தது. கட்சி தாவல் தடை சட்டத்தின்படி மூன்றில் இரண்டு பங்கு, 32 பேர் கட்சி மாறினால்தான் அவர்கள் பதவியை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதனால் கட்சி கொறடா உத்திரவை மீறி தவெக-விற்கு வாக்களித்தவர்கள் பலர் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு மீண்டும் கட்சியில் இணைந்துவிட்டனர். ஆனால் முதலில் 4 பேர், பின்னர் இரண்டு பேர் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்து விட்டனர்.
அந்த ஆறு தொகுதிகள், நடிகர் விஜயின் இரண்டாவது தொகுதி ஆகியவை காலியாக உள்ளதால் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதில் பல தொகுதிகளில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற காரணம் காட்டி தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் இப்போது இடைத்தேர்தல்கள் நடக்கின்றன.
இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளனர். இப்போது அந்த கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், நடிகர் விஜய் முதல்வராகியுள்ள நிலையில் அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்து வெற்றிபெற வைக்க வேண்டும். அல்லது கட்சியில் வேறு முக்கியமான நிர்வாகிகள் யாருமிருந்தால் அவர்களுக்கும் வாய்ப்பளிக்கலாம்.

ஆனால் தவெக, அந்த தொகுதிகளில் யார் அ.இ.அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு வென்று, பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தார்களோ அவர்களையே தவெக வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. அதாவது அவர்கள் அ.இ.அ.தி.மு.க சார்பாக வெற்றிபெற்று நான்கு மாதங்கள் கூட நிறையாத நிலையில் மீண்டும் தவெக சார்பாக போட்டியிடுகிறார்கள்.
இந்திய மக்களாட்சி வரலாற்றில் இவ்வளவு குறுகிய கால அவகாசத்தில், மூன்றே மாதத்தில், கட்சி மாறி மீண்டும் அதே தொகுதியில் யாரும் போட்டியிட்டிருப்பார்களா என்பது ஐயமே. தாராபுரத்தில் சத்தியபாமாவும், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும் கட்சி மாறுவதற்காக ஒரு இடைத்தேர்தல் நடத்தி மக்கள் அவர்களுக்கே மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு, நடிகர் விஜய்க்கு இதில் எந்த வெட்கமும் இல்லை. அவர்களாக எங்கள் கட்சிக்கு வந்தார்கள், சேர்த்துக்கொண்டோம், மீண்டும் போட்டியிட வைக்கிறோம் என்று கொக்கரிக்கிறார்கள். நாங்கள் பணம் கொடுத்து வாங்கவில்லை, அவர்களாக வந்தார்கள் என்பதால் குதிரை பேரம் கிடையாது என்று கூறுகிறார்கள். நான்கு மாதத்திற்கு முன் போட்டியிட்ட போது தவெக-வை விமர்சித்துதானே அவர்கள் வாக்கு சேகரித்திருப்பார்கள். இப்போது எப்படி அந்த கட்சி சார்பாக வாக்கு சேகரிக்கிறார்கள் என்ற கூச்சமே யாருக்கும் இல்லாமல் போனது அதிர்ச்சியளிக்கிறது.
அரசியல்வாதிகள் கட்சி மாறுவது புதிதல்ல. ஆனால் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில் ஒரு கட்சி ஒன்னொரு கட்சியிலிருந்து உறுப்பினர்களை ஈர்ப்பது குதிரை பேரம் எனப்படும். பதவிக்காக, பிற வசதிகளுக்காக அவர்கள் கட்சி மாறுகிறார்கள் என்பது வெளிப்படையானது. இவ்வாறு செய்தால் அரசியலில் நிலையற்ற தன்மை ஏற்படும் என்பதற்காகத்தான் கட்சி தாவல் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
விளைவுதான் செயலின் நோக்கத்தை தீர்மானிக்கிறது
இரண்டு நண்பர்கள் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். ஒருவன் கோபத்தில் கார்க் பாலை அல்லது கனமான டேபிள் வையிட்டை மற்றவன் மீது எறிகிறான். எதிர்பாராமல் அது அவன் மண்டையில் பட்டு, மண்டை உடைந்து, இரத்தப்பெருக்கு அதிகமாகி இறந்துவிடுகிறான். எறிந்த நண்பன் நான் அவனைக் கொல்ல நினைக்கவில்லை என்றுதான் சொல்வான். ஆனாலும், அவன் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. தூக்கு தண்டனை கொடுக்க மாட்டார்கள்; ஆனால் மேன்ஸ்லாட்டர் என்று சொல்லி ஐந்து முதல் பத்தாண்டுகள் தண்டனை கொடுப்பார்கள்.
தமிழக வெற்றிக் கழகம் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் தங்களை ஆதரிக்க வேண்டும் என விரும்புகிறது. ஆனால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களை அதனால் ஈர்க்க முடியவில்லை. அதனால் அவர்களை பதவி விலகச் சொல்லி கட்சியில் சேர்த்துக்கொண்டு, மீண்டும் அவர்களே காலியான தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வாய்ப்பளிக்கிறது.
தொகுதி மக்களுக்கு உள்ள சுயமரியாதை காரணமாக கட்சி மாறிய வேட்பாளர்களுக்குக் கணிசமான எதிர்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும் கூட ஆளும் கட்சி என்பதால் அவர்கள் எப்படியோ வெற்றி பெறுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவர்கள் நாலே மாதங்களில் கட்சியும் மாறி, சட்டமன்ற உறுப்பினர்களாகவும் தொடர்வார்கள்.
இதன் விளைவு என்ன? கட்சித் தாவல் தடைச் சட்ட த்தின் நோக்கம் முறியடிக்கப் படுகிறது. அதன் விளைவாக அ.இ.அ.தி.மு.க-விலிருந்து மேலும் 20 பேர் பதவி விலகி தவெகவில் சேரலாம். அவர்களும் தேர்தலில் போட்டியிட்டு தவெக உறுப்பினர்களாக ஆகிவிடலாம் என்று நினைக்கலாம். இது ஒட்டுமொத்தமாக கட்சி தாவல் தடைச் சட்ட த்தை பொருளற்றதாக மாற்றிவிடும்.
நடைமுறையில் உள்ள ஒரு சட்ட த்தை பொருளற்றதாக மாற்றும் எந்த செயல்பாடும் சட்ட விரோதமானதுதான். சென்னை உயர்நீதிமன்றம் இந்த செயல்பாட்டைக் கடுமையாக க் கண்டித்தாலும், சட்டப்படி தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டது. ஆனால் எதிர்கட்சிகளும் சரி. சிவில் சமூக ஆர்வலர்களும் சரி, தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் உச்சநீதிமன்றத்தை அவசியம் நாட வேண்டும்.
ஒரு கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றவர்கள் பதவி விலகி மாற்றுக் கட்சியில் சேர்ந்தால் அந்த சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடியும்வரை அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற குதிரை பேர தேர்தல்கள் ஒரு புதிய வழக்கமாக மாறிவிடும்.
நடிகர் விஜய் போன்ற அரசியலுக்கு எதிரான தற்காதல் சக்திகள் மக்களாட்சியின் முதுகில் குத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. தாராபுரம், மதுராந்தகம் மக்கள் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும்; அது மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்திற்கும், ஒன்றிய அரசிற்கும் புதிய சட்டமியற்ற அறிவுறுத்த வேண்டும். மக்களாட்சியை நம்பும் அனைவரும் அதற்காகக் குரல் கொடுக்க வேண்டும்.
