தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு 48 மணி நேர ‘கெடு’ வைத்த காக்ரோச் ஜனதா!

Published On:

| By Mathi

CEC Gyanesh Kumar

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும்; இல்லையெனில் நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்கி டெல்லியில் ‘Jantar Mantar 2.0’ போராட்டம் நடத்துவோம் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party – CJP) எச்சரித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) உள்ளிட்ட தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் தொடர்பாக, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை பதிவுகளில் ஆட்சேபனைகளை எழுப்பியதாக The Indian Express விசாரணை செய்தி வெளியிட்டது.

ADVERTISEMENT

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்; அவரை கைது செய்ய வேண்டும்; தமிழ்நாடு-மகாராஷ்டிரா- மேற்கு வங்க மாநிலங்களுக்கு மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. டெல்லியில் போராட்டங்களும் வெடித்துள்ளன.

மீண்டும் காக்ரோச் ஜனதா கட்சி

இந்த நிலையில் காக்ரோச் ஜனதா கட்சியும் இந்த விவகாரத்தில் களமிறங்கி உள்ளது. டெல்லியில் நேற்று செப்டம்பர் 24-ம் தேதி சந்தித்த காக்ரோச் ஜனதா கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் திப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் தேர்தல் ஆணையம் தொடர்பாக மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ADVERTISEMENT

ஞானேஷ்குமார் பதவி விலக கெடு

முதல் கோரிக்கையாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும். SIR தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும். சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டது யார் என்பது கண்டறியப்பட வேண்டும். 48 மணி நேரத்துக்குள் ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம். ஞானேஷ்குமார் பதவி விலக மறுத்தால் டெல்லியில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.

தேர்தல்களை நிறுத்துக- விசாரணை ஆணையம் அமைத்திடுக

2-வது கோரிக்கையாக, வரவிருக்கும் தேர்தல்களை நிறுத்திவைக்க வேண்டும்; SIR நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்;

ADVERTISEMENT

SIR தொடர்பான முடிவுகள் எவ்வாறு எடுக்கப்பட்டன, அந்த முடிவுகளை எடுத்த மற்றும் செயல்படுத்திய அதிகாரிகள் யார் என்பது குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். SIR தொடர்பான அனைத்து கோப்புகள் மற்றும் ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் அல்லது நீதித்துறை கண்காணிப்பிலான விசாரணையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

SIR கோப்புகளை உச்ச நீதிமன்றம் சீல் வைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் கோப்புகள் தொடர்பாக ‘தீ விபத்து’ என்று யாரும் காரணம் கூற முடியாது.

2023 சட்டத்தை ரத்து செய்திடுக

3-வது கோரிக்கையாக, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான 2023 சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.

தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி தாங்கள் பதிவு செய்த ஆட்சேபனைகள் குறித்து பொதுவெளியில் விளக்கம் அளிக்க வேண்டும். அவர்களின் ஆட்சேபனை குறிப்புகள், அதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதில்களை பகிரங்கப்படுத்த வேண்டும்.

இந்த 3 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு தழுவிய கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு போராட்டங்களை முன்னெடுப்பதாக காக்ரோச் ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

கையெழுத்து இயக்கம்

இந்த 3 கோரிக்கைகளை முன்வைத்து “Electoral Integrity” என்ற பெயரில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் ஆன்லைன் இயக்கத்தையும் காக்ரோச் ஜனதா கட்சி தொடங்கியுள்ளது.

“உங்கள் வாக்குதான் உங்கள் குரல். வாக்களிக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் நம்பிக்கை வைக்கக்கூடிய தேர்தல் நடைமுறை இருக்க வேண்டும்” என்ற கருத்தை முன்வைத்து இந்தக் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு கோரப்பட்டுள்ளது.

அன்று ஜந்தர் மந்தர் போராட்டம்… தர்மேந்திர பிரதான் ராஜினாமா

இதற்கு முன்னர் காக்ரோச் ஜனதா கட்சி, NEET-UG வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரத்தை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தை நடத்தியது. மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பது அந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. போராட்டம் நீடித்த நிலையில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற இயக்கமாக இது விரிவடைந்தது.

இந்தப் போராட்டம் 36 நாட்கள் நீடித்த நிலையில், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதுடன், NEET விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளையும் காக்ரோச் ஜனதா கட்சி முன்வைத்தது.

இந்த பின்னணியில் கடந்த ஜூலை 25-ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்; அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இதைத் தனது முக்கிய கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றியாக காக்ரோச் ஜனதா கட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share