மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார். எனினும் எங்களது இரண்டு கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் இருப்பதாக காக்ரோச் ஜனதா கட்சி கூறியுள்ளது.
‘நீட்’ நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு , ஆள்மாறாட்டம் மற்றும் மதிப்பெண் குளறுபடிகள் ஆகியவற்றை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்று அறிவித்தனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் தீயாய் பரவியது.
தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினருடன் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்கள், தர்மேந்திர பிரதான் ராஜினாமா விவகாரத்தில் இன்று மதியத்துக்குள் முடிவெடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இந்தசூழலில் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை இன்று (ஜூலை 25) பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார்.
அதில், நாட்டின் இளைஞர்களின் விருப்பம், உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகள் மீது நான் ஆழ்ந்த மரியாதை வைத்திருக்கிறேன். இளைய தலைமுறையின் கனவுகளை நனவாக்குவது நமது அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் தார்மீக உறுதியாக உள்ளது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ் நாட்டிற்குச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்காக அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2026 மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் சில முறைகேடுகள் கண்டறியப்பட்டன. மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது. தேர்வை ரத்து செய்து, மறுதேர்வுக்கான தேதியையும் அறிவித்தது. மேலும், அடுத்த ஆண்டு முதல் இத்தேர்வை கணினி வழித் தேர்வாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கான தேர்வைச் சீராக நடத்துவதே நமது முதன்மை நோக்கமாக இருந்தது.
மேலும் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள், குறிப்பாக மாவட்ட நிர்வாகங்கள் முக்கியப் பங்காற்றின. அத்துடன் மாணவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் ஜூன் 21 அன்று மறுத்தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
முதல் நாளில் இருந்தே இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன், இந்தச் சூழ்நிலையிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்கவில்லை.
தேர்வு மாஃபியாக்களால் எந்தவொரு திறமையான மாணவனின் எதிர்காலமும் பாழாகக் கூடாது, எந்தவொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
இந்தசூழலில் சிலர் மாணவர்களைத் தவறாக வழிநடத்தித் தடையை ஏற்படுத்த முயன்றனர், இது என் மனதை மிகவும் வேதனைப்படுத்தியது.
கடந்த 10 நாட்களாக நடந்த நிகழ்வுகளைக் கண்டு எனது மனம் மிகவும் துயரமடைந்துள்ளது. இது எனது தனிப்பட்ட கௌரவம் சார்ந்த விஷயம் அல்ல.
இந்தியாவின் இளைஞர் சக்தியே இந்த நாட்டின் உண்மையான பலமாகும்.
ஜந்தர் மந்தர் மற்றும் நாடு முழுவதும் உருவான சூழ்நிலையைத் தேச விரோத சக்திகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.
நமது குழந்தைகள் தங்களது நேரத்தைப் படிப்பில் செலவிட வேண்டும், தொழிலில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு, எனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய CJP அமைப்பின் நிறுவனர் அபிஜீத், ”நாங்கள் சாதித்துவிட்டோம்.. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார்” என்று மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்துள்ளார்.
அதேசமயம், எங்களது இரண்டு கோரிக்கைகள் நிலுவையில் இருப்பதாக காக்ரோச் ஜனதா கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதாவது, ”தற்கொலை செய்துகொண்ட அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும் தலா 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் போராட்டம் முடிவுக்கு வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
