சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து ஒரு வாரமாக நடந்து வருகிறது.
நேற்று நடந்த போராட்டத்தில் நடிகை சனம் ஷெட்டி கலந்துகொண்டார். அவர் நான் ஜனநாயகன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டுதான் வந்திருக்கிறேன் என்றார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, மாணவர்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து சனம் ஷெட்டியிடம் இருந்து மைக் வாங்கப்பட்டது.
இந்தசூழலில் நேற்று என்ன நடந்தது என காக்ரோச் ஜனதா கட்சியை சேர்ந்த இப்ராஹீம் இன்று (ஜூலை 25) கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர், ”இங்கு யார் வேண்டுமானாலும் வரட்டும், என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. நாம் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும்.
ஆனால் அவர் போய் வெளியே என்ன பேட்டி கொடுத்திருக்கிறார் என்றால், இங்கு வந்து பேசவே கூடாது, அதான் நாம் வெளியே அனுப்பினோம் என்ற ஒரு கருத்தை பதிவு செய்கிறார். அப்படியான எந்த எண்ணமும் இல்லை.
மைக்கை கொடுங்கள் நாங்கள் உங்களுக்கு எஜுகேட் செய்கிறோம் என்றோம். அவர் விஜய் ரசிகராகவே இருக்கட்டும்… தவெகவில் இருப்பவர்களை நாம் வரச் சொல்லி, ஆதரவு கொடுங்கள் என்றுதான் சொல்கிறோம்.
அவர் சொன்னது மாதிரியான எந்த எண்ணமும், அப்படி ஒரு சம்பவமும் இங்கு நடக்கவில்லை.
மைக்கை வாங்கி உங்களுக்குச் சொல்றோம், தெளிவுபடுத்துறோம் என்றுதான் சொன்னோம். அவரவர் கருத்தை கொண்டு போக வேண்டும் என்பதுதான் ஆரோக்கியமான விஷயம். கம்யூனிச சித்தாந்தமும் அதைத்தான் சொல்கிறது.
காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தொடங்கும்போதே அம்பேத்கரை வைத்துதான் இறங்கினார். ஒரு விஷயத்தை செய்யும் போது சிந்தித்து செயல்பட வேண்டும். எல்லோருடைய கருத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நிறைய தோழர்கள் இரவு பகலாக இங்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு நேரம் தூங்கினார்கள் என்று கூட தெரியவில்லை. ஒரு நல்ல விஷயத்துக்காக நாமெல்லாம் இங்கு இருக்கும் போது, எல்லோரும் அட்ஜெஸ்ட் செய்து ஆரோக்கியமாக போக வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம்” என்று கூறினார்.
