’கரப்பான்களிடம்’ பணிந்தது மத்திய பாஜக அரசு! நாடு முழுவதும் கொண்டாட்டம்!

Published On:

| By Mathi

Neet- Dharmendra Pradhan Resigns: Union BJP Govt. Bows to 'Cockroache Janata Party

நீட் (Neet) தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் (Dharmendra Pradhan) ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 6-ந் தேதி காக்ரோச் ஜனதா கட்சி இயக்கத்தினர் (Cockroache Janata Party) போராட்டத்தைத் தொடங்கினர்.

சில நூறு இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் அமர்ந்து தொடங்கிய போராட்டம்தான் இன்று நாடு தழுவிய இளைஞர் எழுச்சியாக இந்தியாவின் GenZ புரட்சியாக வெடித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை காவு கொண்டு நிற்கிறது.

ADVERTISEMENT

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக். லடாக்கைச் சேர்ந்த சோனம் வாங்சுக், கடந்த ஜூன் 28-ந் தேதி, தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கினார்.

ஆனாலும் மத்திய அரசு எதுவும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைய நாடு முழுவதும் பதற்றம் தொற்றிக் கொண்டது. டெல்லி ஜந்தர் மந்தருக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சென்று சோனம் வாங்சுக்கை சந்தித்து ஆதரவு தெரிவிக்க தொடங்கினர். திமுகவின் ஆ.ராசா, நடிகர் பிரகாஷ் ராஜ், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தருக்கு சென்றனர்.

ADVERTISEMENT

கடந்த ஜூலை 18-ந் தேதி ஜந்தர் மந்தரில் இருந்து சோனம் வாங்சுக் வலுகட்டாயமாக அகற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே தாமும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார்.

இதன் பின்னர் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம் அதிதீவிரமானது. நாடு முழுவதும் பேரலையாக மாணவர்களும் இளைஞர்களும் டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி திரளத் தொடங்கினர். மத்திய அரசுக்கு எதிராக போர்க்களமாக டெல்லி ஜந்தர் மந்தர் உருமாறியது.

ADVERTISEMENT

ஜூலை 20-ந் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. அதே நாளில் நாடாளுமன்றம் நோக்கி ஜந்தர் மந்தரில் இருந்து காக்ரோச் ஜனதா கட்சியினர் முற்றுகைப் பேரணியை நடத்தினர். ஆனால் இந்தப் பேரணியை டெல்லி காவல்துறை, துணை ராணுவப் படையினர் மிக கொடூரமான முறையில் ஒடுக்கினர். இதில் எண்ணற்ற மாணவர்கள் பெரும் காயங்களுக்குள்ளாகினர்.

டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த ஒடுக்குமுறை தாக்குதல், நாடு முழுவதும் மாணவர்களை வீதிக்கு வரவைத்தது. டெல்லி கொடூரத்துக்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ஒழிக்க வலியுறுத்தியும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக வெடித்தன.

டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உக்கிரப் போராட்டம் நடத்தினர். இதில் ராகுல் காந்தி மூக்கில் ரத்தம் வடிய காயம்பட்டு கைதானார்.

ஒவ்வொரு நாளும் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் புதிய புதிய போர்க்களங்களாக மாறின. இதனால் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜேபி நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தினர்; நீட் மோசடிகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

மேலும் ஜூலை 23-ந் தேதி நள்ளிரவில் பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், வினாத்தாள் மோசடிகளுக்கு விரைவு நீதிமன்றம்- கடும் தண்டனை விதிக்கும் மசோதா குறித்து மத்திய அமைச்சரவையில் விவாதிப்போம் என வாக்குறுதி அளித்தார்.

கடந்த ஜூலை 24-ந் தேதி அதிகாலையில் மத்திய அரசின் முதல் முயற்சி வெற்றி பெற்றது; சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

ஆனாலும் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம் ஓயவில்லை. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராடுவோம் என அபிஜீத் திப்கே திட்டவட்டமாக அறிவித்தார். நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்தன. பிரதம மோடி வாக்குறுதியளித்த படி வினாத்தாள் மோசடிகளுக்கு கடும் தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளித்தது.

இருப்பினும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாதான் ஒற்றை கோரிக்கை என்கிற குரல் நாடு முழுவதும் வலுத்தது. இதனால் இன்று தர்மேந்திர பிரதான் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதனையடுத்து டெல்லி, சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் போராட்ட களங்களிலும் மாணவர்கள், இளைஞர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share