நீட் விவகாரம் தொடர்பாக ஜூலை 23-ந் தேதி நள்ளிரவு 11.52 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி திடீரென 3 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும் இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரியும் நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பல்வேறு துறைசார் அறிஞர்கள், சமூக ஆர்வலர்களும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஓரணியில் இணைந்துள்ளனர்.
நீட் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் காவல்துறையினர் ஒடுக்குமுறையை ஏவிவிடுவது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 23-ந் தேதி நள்ளிரவு 11.52 மணிக்கு 2.56 நிமிடங்கள் கொண்ட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.
வீடியோ பதிவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது: நண்பர்களே, (நீட்) வினாத்தாள் கசிவு என்பது சாதாரண விஷயம் அல்ல என்பதை நான் அறிவேன். இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் மிகவும் வேதனை அளிக்கக் கூடியது என்பதையும் அறிவேன்.
நீட் வினாத்தாள் கசிவு குற்றவாளிகள்
(நீட்) வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் ஒரே ஒரு வருடத்தைக் கூட வீணடித்துவிடக் கூடாது என்கிற மிக முக்கியமான பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதனால்தான் மறுதேர்வுகளை (நீட் மறுதேர்வு) உடனடியாக நடத்த வேண்டியது அவசியமானதாகவும் இருந்தது.
நீட் மறுதேர்வு
மத்திய அரசு தனது முழுமையான சக்தியையும் ஒருங்கிணைத்து பயன்படுத்தி மிகவும் குறுகிய காலத்தில் 22 லட்சம் மாணவர்களை நீட் மறு தேர்வு எழுத வைத்தோம். 5, 6 நாட்களுக்கு முன்னர் ஜூலை 19-ந் தேதி நீட் மறுதேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டன. நாடு முழுவதும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பற்றிய மகிழ்ச்சியான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நாங்கள் இதில் முழுமையான நிம்மதி, திருப்தி அடையவில்லை என்று சொல்ல வேண்டும்.
விரைவு நீதிமன்றங்களுக்கு உத்தரவு
அதனால்தான் (நீட்) வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான உத்தரவுகளை இன்று (ஜூலை 23) சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வழங்கி இருக்கிறேன். இது தொடர்பான துறைகளும் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி இந்த நள்ளிரவிலேயே விரைவு நீதிமன்றங்களுக்கான வரைவை என்னிடம் கொடுத்துவிட்டன.
இன்று அமைச்சரவை கூட்டம்
விரைவு நீதிமன்றம், குற்றவாளிகளுக்கான கடுமையான தண்டனைகள் தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 24) நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு இறுதி வடிவம் தரப்படும்.
மசோதா விரைவில் தாக்கல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 2-வது வாரம் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. அப்போதே மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் முயற்சி செய்வோம்.
