சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
2006 முதல் 2016 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம் ஆர் கே பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் இருந்து, எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த விசாரித்த நீதிமன்றம், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மீண்டும் தாக்கல் செய்த மனுவை கடலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த இரண்டாவது விடுவிப்பு மனு இன்று (செப்டம்பர் 22) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி லட்சுமிநாராயணன், லஞ்ச ஒழிப்புத் துறையால் 2011-ல் பதிவு செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் வழக்கிலிருந்து, திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அவரது மனைவி பி. செந்தமிழ்ச்செல்வி மற்றும் மகன் பி. கதிரவன் ஆகியோரை விடுவிக்க மறுத்துவிட்டார். அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
