VIDEO: ராகுல் பிரதமராக திமுக கூட்டணிதான் வேணும்… பிரவீன் சக்கரவர்த்தியின் சாதிய ஆணவம்… வெடிக்கப் போகும் ‘அந்த’ புத்தகம் – செல்வப்பெருந்தகை பரபர பேட்டி!

Published On:

| By Mathi

Selvaperunthagai-Interview

ராகுல் காந்தி பிரதமராக வேண்டுமென்றால் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இருக்க வேண்டும். திமுகவை விட்டு வெளியேறியது தவறான முடிவு; இதற்காக வருத்தப்படும் காலம் வரும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தியின் ‘Who is he?’ பேச்சை சாதிய ஆணவத்தின் வெளிப்பாடு எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

செல்வப்பெருந்தகை நேர்காணல் முழுமையாக…

கேள்வி: ஒரு பரபரப்பான அரசியல் சூழல்தான் காணப்படுது. அதிலும் காங்கிரஸ்ல அனல் தெறிச்சிட்டு இருக்கு அப்படின்னுதான் சொல்லணும். கிராம கமிட்டிகள் மூலமாக காங்கிரஸை புத்துயிர் பெறச் செய்யணும்னு, நீங்க தலைவரா இருக்கிறப்ப தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டீங்க. அதற்கான உழைப்பையும் போட்டீங்க. ஆனா சட்டுன்னு இன்னைக்கு பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி., “யாருங்க இவரு செல்வப்பெருந்தகை?”ன்னு கேட்கிறாரே சார்?

செல்வப்பெருந்தகை: அது எப்படின்னா, கடந்த காலங்களில் நடந்த வன்கொடுமைகள், கடந்த காலத்துல பார்த்த அசாதாரண சூழ்நிலைகள் எல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்னாடி நாங்கள் பார்த்தது.

ADVERTISEMENT

50 ஆண்டுகளுக்கு முன்னாடி பெரியவங்க எல்லாம் எங்க கிராமத்துல என்ன சொல்லுவாங்கன்னா, “ஏப்பா, அங்க போய் தண்ணி எடுக்கக்கூடாது. ஏன்னா, நீ யாருன்னு கேட்பாங்கப்பா. போகாதீங்க”ன்னுவாங்க.

அந்தக் கோவிலுக்குள்ள போனா, “நீ அந்தக் கோவிலுக்கு போகாதப்பா. நம்ம சாமி இங்க இருக்கு”ன்னுவாங்க. “ஏன் அங்க போனா என்ன தப்பு?”ன்னு சின்ன வயசுல கேட்போம். “இல்லப்பா, நீ யாருன்னு கேட்பாங்கப்பா”ன்னுவாங்க.

ADVERTISEMENT

அந்தத் தெருவுல கூட நடக்க வேண்டாம்ப்பா. “ஏன்?”ன்னு கேட்டா, “நீ யாருடான்னு கேட்பாங்க”ன்னுவாங்க.

அதே மாதிரிதான் பிரவீன் சக்கரவர்த்தி அன்னைக்கு கேட்ட அவருடைய பாடி லாங்குவேஜ். அப்போ தந்தை பெரியார் எடுத்த போராட்டங்களும், புரட்சியாளர் அம்பேத்கர் எடுத்த போராட்டங்களும் இன்னும் நிறைய தேவை இருக்குன்றதுதான் இன்னைக்கு உணர்த்துச்சு. அதனாலதான் நான் அந்த ட்வீட் போட்டேன்.

இது ஆணவ ஆதிக்கத்தினுடைய வெளிப்பாடுதான். என்னைய எப்படி அவர் “யாரு?”ன்னு கேட்க முடியும்?

நான் என்ன காங்கிரஸ்ல வாடகை வீட்டுலயா இருக்கேன்? சொந்த வீட்டுல இருக்கேன். காங்கிரஸ் என்பது எங்க சொந்த வீடு.

எதையோ எதிர்பார்த்து ஒரு பதவியை அடைஞ்சிட்டு, அந்தப் பதவியை பறிச்சிட்டு போனோம்னு நான் வரல. பட்டியலின மக்களுக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் ஒரு குரலா, ஒரு முகமா இந்தக் கட்சியில இருப்போம் அப்படின்னுதான் நாங்க இந்தக் கட்சியில பயணம் பண்றோம்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு அஜெண்டா இருக்கு. ஒரு கட்சியில இருக்கிறதுக்கு என்ன ஒரு நம்பிக்கைன்னா, இந்த கட்சி எங்களுக்கான கட்சி; இந்த கட்சி மக்களுக்கான கட்சி. அப்படித்தான் பயணம் பண்ண முடியும். அப்படி இல்லன்னா பயணம் பண்ண முடியாது.

இந்த நம்பிக்கையைத் தகர்க்கிறதும், சீர்குலைக்கிறதுமான வேலைதான் இன்னைக்கு நடக்குது. இந்த வரலாற்றுப் பிழையை அவர் அன்னைக்கு செஞ்சிருக்காரு. இங்க தமிழ்நாட்டுல மட்டும் இல்ல, இந்தியா முழுவதும் எதிரொலிக்குது.

இப்ப நான் யாருன்னு தெரியும். நான் இன்னைக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். இன்னைக்கும் 5,000 கோடி ரூபாய்க்கு மேல சொத்து இருக்கிற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி டிரஸ்ட்டோட ஆயுள் டிரஸ்ட்டி; லைஃப் டிரஸ்ட்டி.

என்னைப் போய் எப்படி “யாரு?”ன்னு கேட்க முடியும்? நான் முன்னாள் தலைவர் இல்லையா? டீயும் வடையும் சர்மானி ஹோட்டலில் இருந்து வாங்கி சாப்பிட்டு போயிட்டா இருந்தேன்? 24 மணி நேரம் உழைச்சிருக்கேன்ல? கிராம கமிட்டி போட்டிருக்கோம். நீங்களும்தானே அதை அங்கீகாரம் பண்ணீங்க?

நான் பதவியை கொடுக்கும்போது, பதவியேற்பு விழாவுல எல்லா தலைவர்களும் பேசினாங்களே? 5,000 கோடிக்கு மேல உள்ள சொத்தை பிரச்சினையிலிருந்து சட்டரீதியாக மீட்டெடுத்தாருன்னு சொன்னீங்கல்ல?

அப்ப என்னை எப்படி “யாரு?”ன்னு கேட்க முடியும்? அப்படி கேட்கிறீங்கன்னா, இது எதோட முகம்? அப்படின்னுதான் நான் கேட்கிறேன்.

அரசியலில் இருக்கிறதே சமூக விடுதலைக்காகவும் ஏற்றத்தாழ்வை ஒழிப்பதற்காகதான்.. இதெல்லாம் இருக்குதுன்னா, அப்ப தந்தை பெரியார் ஏன் காங்கிரஸில் முரண்பட்டார் அப்படின்னு கடந்த காலத்தில் படிச்சதெல்லாம் வந்து பார்த்தீங்கன்னா, நீடாமங்கலம் பந்தின்னு சொல்லுவாங்க; பாபநாசம் பந்தின்னு சொல்லுவாங்க.

அப்ப பாபநாசத்தில் தலித்துகளுக்குத் தனியாகவும், தலித் அல்லாதவர்களுக்குத் தனியாகவும் பந்தி போட்டு சாப்பாடு போட்டாங்க. அதனால் வெகுண்டு எழுந்தார் பெரியார்னு ஒரு இடத்தில் படிச்சிருக்கேன். நீடாமங்கலத்தில் சாப்பிடும்போதே, ‘நீ எப்படி வந்து சாப்பிடலாம்?’ன்னு அடிச்சாங்களாம். அதுக்கெல்லாம் எனக்கு நினைவு வந்துருச்சு. காங்கிரஸ் கட்சியில் வந்து இப்படியா? அது நான் இருக்கிற கட்சி; நான் தலைவராக இருந்த கட்சி.

நான் அதனால்தான் சொன்னேன்.. நான் இந்தப் பூர்வகுடி. நான் ஆப்கானிஸ்தானில் இருந்து, பாகிஸ்தானில் இருந்து வரல. இந்த மண்ணின் மைந்தன். சுயமரியாதையோடு, சுயமரியாதை இயக்கங்களில் பணியாற்றியவன் அப்படின்னுதான் நான் சொன்னேன்.

கேள்வி: இதையெல்லாம் இப்ப அரசியல் ரீதியாக நீங்கள் எதிர்க்கிறது ஒரு பக்கம். இதையே நீங்கள் சாதி அடையாளத்துக்குள் போய் மறைஞ்சுக்கிற மாதிரி இல்லையா சார்? அதுக்கு அந்த வண்ணம் பூசுற மாதிரி இல்லையா?

செல்வப்பெருந்தகை: நான் சாதி அடையாளத்துக்குள்ளேயே போகலையே..

கேள்வி: பிரவீன் சக்கரவர்த்தி பேசுனது வன்மமா? தனிப்பட்ட வன்மமா? ‘காங்கிரஸுக்கு நான் உழைச்சிருக்கேன்’ அப்படின்னு நீங்கள் பேசினா சரி. ஆனா நீங்கள்.. கார்கே வந்த பிறகு எப்படி கழுவி தீட்டு கழிச்சாங்களோ அதே சாதிய மனப்பான்மையின் நீட்சிதான்னு அந்த சாதியை டச் பண்றீங்களோ?

செல்வப்பெருந்தகை: நான் குறிப்பா கார்கேஜியைப் பத்தி சொல்லல. பாபு ஜெகஜீவன் ராம் காங்கிரஸ் கட்சித் தலைவரா இருந்து, வடமாநிலங்களில் மாலை போடும்போது, அவர் போயிட்டு வந்த உடனே பால் ஊத்தி கழுவினாங்கிற வரலாறும் இருக்கு. புரட்சியாளர் அம்பேத்கர் போன இடமெல்லாம் கழுவினாங்கிற வரலாறும் இருக்கு. இதனுடைய நீட்சிதான் பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த ஆணவமான பேச்சு.

நான் ஒரு பொது வாழ்க்கையில இருக்கேன். சாலையில ஒரு தூய்மைப் பணியாளர் வந்து, “சார், இதெல்லாம் தப்பு”ன்னு என்கிட்ட அவருடைய கருத்தை சொல்றாரு. நான் அவரைப் பார்த்து “நீ யாரு?”ன்னு கேட்டேன்னா, என்னைவிட அயோக்கியன் யாருமே கிடையாது.

ஒரு இந்திய நாட்டின் பிரஜை என்னை வந்து ஒரு கேள்வி கேட்கிறார்ன்னா பதில் சொல்லணும். ஒரு கருத்து சொல்றாருன்னா, அவருடைய சொந்தக் கருத்தா எடுத்துக்கணும்; இல்ல பொது கருத்தா எடுத்துக்கணும். என்னால உள்வாங்க முடியுதான்னு பார்க்கணும். உள்வாங்க முடியலன்னா இக்னோர் பண்ணிட்டுப் போகணும்.

அன்னைக்கு அவர் என்ன பண்ணியிருக்கணும்னா, “இது என்னுடைய சொந்தக் கருத்து”ன்னு சொல்லியிருக்கலாம். இல்ல, “இது கட்சியோட கருத்து”ன்னு சொல்லியிருக்கலாம். இல்ல, “நான்தான் அத்தாரிட்டி; நான் சொல்றதுதான் கருத்து”ன்னு சொல்லியிருக்கலாம்.ஏன்னா திமிரு? என்ன ஆணவம் அது?

நாங்க எல்லாம் பெரியார் புத்தகத்தைப் படித்து, அம்பேத்கர் புத்தகத்தைப் படித்து வளர்ந்து இன்னைக்கு அரசியல்ல நிற்கிறோமே. என்னைப் போய் எப்படி “நீ யாரு?”ன்னு கேட்ப? இதெல்லாம் தாங்கிட்டு அமைதியா இருப்பாங்களா? இதெல்லாம் சொல்லக் கூடாதுன்னு இருந்தேன்.. இருந்தாலும் இந்த உதாரணத்தை சொல்லித்தான் ஆகனும்..

சாதியை வச்செல்லாம் நான் பேசல. மறைந்த தலைவர் ராமசாமி படையாச்சியுடைய நிகழ்ச்சிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துறேன். பத்திரிகையாளர்கள் என்னை கேள்வி கேட்கிறாங்க. நானா கேட்கல.

பட்டினப்பாக்கத்தைப் பத்தி கேட்கிறாங்க. பட்டினப்பாக்கத்துல உறவுகள் இருக்காங்க, மண்ணின் மைந்தர்கள் இருக்காங்க, பூர்வகுடிகள் இருக்காங்க. அங்க கட்டக்கூடாது; கட்டுறதுக்கு முன்னாடி அவங்களுடைய பிரச்சினை என்னன்னு உட்கார்ந்து பேசணும், கலந்தாய்வு செய்யணும்னு சொல்றேன். அது என்னுடைய கருத்து.

அங்க வேண்டாம்னு சொல்றது என்னுடைய கருத்து. வேண்டும், வேண்டாம்னு சொல்றது அவங்களுடைய கருத்து. பிறகு பிரதமர் வேட்பாளர் பற்றி கேட்கிறாங்க..

நான் காங்கிரஸ்காரன். எந்தக் கூட்டணியில இருந்தாலும், அந்த கூட்டணிக் கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர்னு சொல்லணும். இதுதான் நேர்மையான அரசியல். அப்படி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் எதுக்கு அந்தக் கூட்டணியில இருக்கணும்? இதுல என்ன தவறு இருக்கு?

10 நாளைக்கு, 20 நாளைக்கு முன்னாடி அமைச்சர் சகோதரர் ராஜேஷ் குமார் என்ன பேசினாரு? “ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கவில்லை என்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்”ன்னு சொன்னாரா, சொல்லலையா? அப்போ “Who is he?”ன்னு ஏன் கேட்கல? அப்போ வாயில கிளிப் போட்டுட்டீங்களா? அது என்ன பார்வை? இது என்ன பார்வை? மக்கள் பார்த்துகிட்டுதான் இருக்காங்க..

அமைச்சர் ராஜேஷ் குமார், “அமைச்சர் பதவியை தூக்கி எறிவோம். அமைச்சராக இருக்க மாட்டோம். கூட்டணியிலேயே இருக்க மாட்டோம்; வெளியேறுவோம்”ன்னு சொல்றது சரி என்றால், நான் சொல்றது தவறா? உங்க அளவு கோல் என்ன?

கேள்வி: அதை ஏத்துக்க முடியுது.. நான் சொல்றதை ஏத்துக்க முடியலையான்னு நீங்க கேட்கிறீங்க?

செல்வப்பெருந்தகை: ஆமா.. நானா போய் சொல்லலையேம்மா. பத்திரிகையாளர்கள் கேட்கிறாங்க. ஒரு கட்சிக்காரனா, ஒரு காங்கிரஸ் தொண்டனா என்ன சொல்லுவாங்களோ, தொண்டனாதான் சொன்னேன். எங்கள் தலைவர் ராகுல் காந்தியை யார் பிரதமராக ஏற்றுக்கொள்கிறார்களோ, அந்தக் கட்சியோடு கூட்டணியில இருக்கிறதுதான் தர்மம். அதுதான் நேர்மை. ஏற்று கொள்ளாதவர்களோடு ஏன் இருக்கணும்? அப்படின்னுதான் கேட்கிறேன்.

கேள்வி: பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி. ஆகும்போது நீங்கதானே மாநிலத் தலைவரா இருந்தீங்க?

செல்வப்பெருந்தகை: நான்தான் B-Form கொடுத்தேன். அப்ப கேட்கணும்ல, “Who is he? Who are you?”ன்னு. இதுதான் நிறைய பேருக்கு புரிதல் இல்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்னாடி என்ன மனநிலையில இருந்தாங்களோ, அதே மனநிலை இருக்கு.

இப்ப எல்லாம் People are very, very clever. People are very, very intelligent. ஏமாத்தவே முடியாது. நான் தப்பு பண்ணாலும் ஏமாத்த முடியாது; அவர்கள் தப்பு பண்ணாலும் ஏமாத்த முடியாது. மக்கள் எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்காங்க.

கேள்வி: “ராகுல் காந்தியோட நான் பேசிட்டுத்தான் வந்தேன்; கூட்டணி நல்ல பலமா இருக்கு”ன்னும் பிரவீன் சக்கரவர்த்தி சொல்கிறாரே?

செல்வப்பெருந்தகை: அவருடைய பாடி லாங்குவேஜ்லாம் பார்த்தேன். ராகுல் காந்திகிட்ட யார் வேணாலும் பேசலாம். அவர் எளிமையான தலைவர். பாதையோரத்துல இருக்கிறவங்ககூட போய் மணிக்கணக்குல பேசிட்டு இருக்காரு. அவரும் அங்கேயே உட்கார்ந்து பேசுறாரு. செருப்பு தைக்கிறவரோட உட்கார்ந்து செருப்பு தைச்சுட்டு இருக்காரு.

நான் பார்த்தா, என்னவோ இவருடைய பள்ளித் தோழர் மாதிரியும், இவருடைய பணியாள் மாதிரியும் பாடி லாங்குவேஜ் இருக்கு. “நான் நேத்து நைட்டெல்லாம் பேசிட்டு இருந்தேன்”ன்னு… பேசு. யார் வேணாம்னா? எல்லாமே பேசலாம். ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் பேசுறாங்க அவர்கிட்ட. நீ ஆயிரத்துல ஒருத்தராதான் இருக்க முடியும். What is the importance? என்ன மெசேஜ் சொல்ல வர்றீங்க? என்ன அரசியல் பண்ணப் போறீங்க?

கேள்வி: இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கும்போது தலைமை கண்டுக்க மாட்டேங்குதே ஏன் சார்? தேர்தலுக்கு முன்னாடியும் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எல்லாம் பேசினாங்க…

செல்வப்பெருந்தகை: அதையெல்லாம் இப்ப பேச வேண்டாம்னு நினைக்கிறேன். புத்தகங்கள் எல்லாம் தொகுத்துட்டேன். இன்னும் ஒரு மாதத்துல அந்தப் புத்தகங்கள் எல்லாம் வரப்போகுது.

அரசியல்ல இருக்கிறதே ஒரு சுயமரியாதையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்; சுயமரியாதையோட இருக்கணும். மக்களுடைய ஏற்றத்துக்கு, அவங்களுடைய சுயமரியாதைக்காக, அவங்களுடைய வாழ்வாதாரத்துக்காக அரசியல்ல அவங்களுடைய முகமா, குரலா இருக்கணும். அது இல்லன்னும்போது மிகப்பெரிய கேள்வி எழுது. அதுக்கு என்னுடைய புத்தகம் மிகப்பெரிய விடையை கொடுக்கும்.

கேள்வி: புத்தகம் வெளிவரும்போது நிறைய விவகாரங்கள் வெடிக்குமா?

செல்வப்பெருந்தகை: நான் உண்மையைத்தான் எழுதுறேன். இது மிகப்பெரிய ஆலோசனையாக கூட இருக்கலாம். எங்களுடைய தலைவர்களுக்கு மிகப்பெரிய ஆலோசனையாக இருக்கலாம்.

ரெண்டு செக்டாரா இருக்கக்கூடாது. ஒரு கீழ்த்தட்டு, மேல்தட்டுன்னு இருக்கக்கூடாது. கீழ் தட்டுல என்ன நடக்குதுன்றது மேல்தட்டுக்கு தெரியணும். மேல்தட்டுல என்ன நடக்குதுன்றது கீழ்த்தட்டுக்கு தெரியணும். “நான் ஏன் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா பண்ணேன்னு ஆய்வே பண்ணல” ஒரு ஆய்வே பண்ணலையே. “இவர் ஏன் ராஜினாமா பண்ணாரு?”ன்னு.

எல்லோரும் பதவியைத் தேடி ஓடும்போது, “எனக்கு இந்தப் பதவி வேணாங்க; என்னை விட்டுருங்க”ன்னு ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு வர்றான் என்றால், ஏன் இவர் ராஜினாமா பண்றாருன்னு ஆய்வு பண்ணணுமா, பண்ணக்கூடாதா? இனிவரும் காலத்தில் ஆய்வு பண்ணனும்னு சொல்றேன்.

கேள்வி: நீங்க இதிலிருந்து விலகினா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு கொஞ்சம் ரிலீஃபா இருக்கும்னு மேலிடமே நினைச்சிருக்குமோ?

செல்வப்பெருந்தகை: அப்படியெல்லாம் சொல்லல. எங்கள் தலைமை என்ன சொல்லுச்சுன்னா, “மூன்று ஆண்டுகள் குறைந்தபட்சம் இருக்கு. இரண்டு ஆண்டுகள்தானே ஆகியிருக்கு. இருக்கலாமே?”ன்னு கேட்டாங்க.

“இல்லங்க, என்னால தொடர்வதற்கு வாய்ப்பில்லை”ன்னு சொன்னேன்.

ஒருமுறை கையில போய் கொடுத்துட்டு வந்தேன். இன்னொரு முறை பெங்களூர்ல போய் கொடுத்தேன். மூன்றாவது முறை மெயில் அனுப்ப சொன்னாங்க; மெயில் அனுப்பினேன்.

“எதுக்காக? என்ன அவசரம்?”ன்னு கேட்டாரு எங்க தலைவர்.

நான் சொன்னேன், “இங்க இருந்துட்டு என்னால சிலதை பேச முடியாது.”

இங்க இருந்துட்டு நட்பு ரீதியா பல ஆண்டுகளாக பயணம் செய்த திராவிட முன்னேற்றக் கழகத்தை தாக்கிப் பேசணும், அட்டாக் பண்ணிப் பேசணும். அப்படி கிடையாது. வாழ்கன்னு சொல்லிட்டோம். அவர்களுடைய திட்டங்களை எல்லாம் இந்தியாவிலேயே, உலகத்திலேயும் திட்டங்கள்னு சொல்லிட்டோம். சொல்லிட்டோம்னா உண்மையைச் சொல்லணும்.

அப்ப இன்னைக்கு வந்து, “இல்லங்க, அது சரியில்லைங்க”ன்னு என்னுடைய நாக்கை மாற்றிப் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை.

இப்ப பேசணும்னு விரும்புவாங்க. அது என்னால இயலாது. நான் ராஜினாமா பண்றேன். ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு என்னை விடுதலை கொடுங்கன்னு வந்துட்டேன்.

கேள்வி: நீங்க பேசுறதைப் பார்க்கும்போது காங்கிரஸ்ல இருந்தே விலகுற முடிவுக்கு வந்துட்டீங்களா?

செல்வப்பெருந்தகை: அப்படியெல்லாம் இல்ல. காங்கிரஸ்ல ஒரு தொண்டனாதான் இன்னைக்கு வரைக்கும் இருக்கேன்.

நான் ராஜினாமா பண்ண உடனே ரெண்டு பெர்சப்ஷன் கிரியேட் பண்ணாங்க. ஒன்னு, திமுகவுக்கு போயிடுவாரு. இன்னொன்னு, பாஜகவுக்கு போயிடுவாரு. பாஜகவிடம் பேசிட்டு வந்துட்டாருன்னு சொன்னாங்க..

திமுக என்பதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் என்ற ஒரு ஆளுமை எங்களுடைய குடும்பம். அந்தக் குடும்பத்துல நான் ஒருத்தன். அதுல மாற்றுக் கருத்தே கிடையாது.

நான் மட்டும் இல்ல. தமிழ்நாட்டில் இந்த மண்ணை நேசிப்பவர்கள், சமூக விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள், அந்த வாரிசுகள் எல்லோரும் அந்தக் குடும்பத்தை எங்களுடைய குடும்பமாதான் பார்ப்பாங்க. அதனால நான் அந்தக் குடும்பத்தை என்னுடைய குடும்பமாதான் பார்க்கிறேன்.

நான் எப்படி அவங்களை தாக்கிப் பேச முடியும்? நான் எப்படி அவங்களை அட்டாக் பண்ண முடியும்?

அந்தத் தலைவர் பதவியிலிருந்து அதை பண்ணித்தான் ஆகணும்னு ஒரு கம்பல்ஷன் கொடுக்கிறாங்க. “இவரு பேசினாரு, நீங்க அட்டாக் பண்ணுங்க; அவரு பேசினாரு, நீங்க அட்டாக் பண்ணுங்க”ன்னா… நாம எடுத்த முடிவு சரியா? தவறான்னு போகலை.. அது தலைமை எடுத்த முடிவு. எந்த ஒரு சோல்ஜரும் கமாண்டன்ட் சொன்னா செயல்படுத்தித்தான் ஆகணும்.தலைமை சொல்லுச்சு மாத்தணும்னாங்க மாத்திட்டாங்க. ஆனால் என் உள்மனசு.. செல்வப்பெருந்தகை என்ற தனி மனிதனுக்கு அந்த முடிவுல விருப்பம் கிடையாது. என்னுடைய கருத்தைக் கேட்டாங்க. ரொம்பத் தெளிவா சொன்னேன். “இந்த முடிவை எடுத்தால் நாம் வருத்தப்படுவோம்” என்று சொன்னேன்.

நாம் வருத்தப்படப் போகிறோம். இந்த முடிவை எடுத்தால், திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியே வந்தால், நாம் வருத்தப்பட வேண்டிய காலங்கள் வரும் என்று சொன்னேன்.

நான் தீர்க்கதரிசி கிடையாது. நான் ஜோசியம் பார்க்கிறவன் கிடையாது. எனக்கு அஸ்ட்ராலஜியெல்லாம் பெருசா தெரியாது. ஆனா நான் சொல்றேன், இந்த முடிவு தவறான முடிவு. இந்த முடிவு எடுத்தால் நாம் வருத்தப்படுவோம்ன்னு சொன்னேன். இது என் கருத்து.

நான் மாநிலத் தலைவரா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ன முடிவு எடுக்குதோ அதுக்கு நாங்க கட்டுப்படுறோம். முடிவு எடுத்துட்டாங்க. 4-ந் தேதி தேதி இரவே எடுத்துட்டாங்க. 5-ந் தேதி இம்ப்ளிமெண்ட் பண்றதுக்கான வேலைகள் எல்லாம் நடந்துருச்சு. ஆனா ஒரு விஷயத்துல நான் தெளிவா இருந்தேன்.

இந்தப் பாவகரமான செயலுக்கு நான் உடன்பாடு இல்லை. நான் கையெழுத்து போட மாட்டேன். நான் கையெழுத்து போடல. கிரிஷ் சோடங்கர் கையெழுத்து போட்டாரு; கொடுத்துட்டாரு.

கேள்வி: “பாவகரமான செயல்”ன்னு சொல்றீங்க. ஆனா இன்னைக்கு காங்கிரஸ்காரர்களே புளகாங்கிதம் அடையறாங்களே? இரண்டு அமைச்சர் பதவி கிடைச்சிருக்கு; அமைச்சரவையில இருக்கோம்; அங்கீகாரம் கிடைச்சிருக்குன்னு சொல்றாங்களே?

செல்வப்பெருந்தகை: அவங்க பார்வைக்கும் என்னுடைய பார்வைக்கும் வித்தியாசம் என்னன்னா.. ரெண்டு அமைச்சர், ஒரு ராஜ்யசபாதான் அவங்களுடைய பார்வை; அவங்களுடைய இலக்கு.

என்னுடைய இலக்கு இந்தியா முழுவதும் தலைவர் ராகுல் காந்தி ஆள வேண்டும். இந்தியாவிற்கு அவர் பிரதமராக வேண்டும். இந்தியாவிற்கு அவர் பிரதமராக வரவேண்டும் என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில இருக்கணும்.

இன்னைக்கு அவங்க 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்காங்க. 40-க்கு 40 வெற்றி பெற்றிருக்காங்க. இந்தியாவிலேயே ஒரே ஒரு மாநிலம் 40-க்கு 40, 100 சதவிகிதம்னு சொல்லக்கூடிய நிலையை தமிழ்நாடு அடைஞ்சிருக்கு. என்ன காரணம்.. ஒரு நல்லாட்சி புரிந்த திமுக தலைவர்.. பிரதமர் வேட்பாளர் என்ற தலைவர் ராகுல் காந்தியை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு. எல்லோரும் சேர்ந்தாங்க.. இந்த காம்பினேஷன் எந்த காலத்துல கிடைக்கும்? 40-ல் வெற்றி பெறக் கூடிய காலம் எப்போ வரும்?

இதெல்லாம்தான் என்னுடைய பார்வை. சிலருடைய பார்வை வேற. “ரெண்டு அமைச்சர் கிடைச்சா போதும்; ஒரு ராஜ்யசபா உறுப்பினர் கிடைச்சா போதும்” … அவங்க இலக்கு அதுதான்.

என்னுடைய இலக்கு அது கிடையாது. என் இலக்கு தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும்.

கேள்வி: சரி, வார்த்தைக்கு வார்த்தை சொல்றீங்க. “ராகுல் காந்தி அவர்கள் பிரதமராக வேண்டும்; இதுதான் என்னுடைய இலக்கு”ங்கிறீங்க. அதே ராகுல் காந்தி அவர்கள்தான் விஜய் அவர்கள் பொறுப்பேற்கும்போது, சிஎம் ஆகும்போது முன்னாடி வந்து நின்னாரு. இத்தனைக்கும் சொல்லப்போனால், குரூப் போட்டோவில் அவர் இருக்கணும்னே இல்லை. அவரும் குரூப் போட்டோவில் இருக்கிறார். அமைச்சர்கள், முதல்வர் உட்கார்ந்திருக்கிற அந்த குரூப் போட்டோவில் இந்த மாதிரி நாங்க பார்த்தது இல்லை. அப்போ, இவ்வளவு தூரம் அவர் இருக்கிறார். நீங்க இங்க ஆசைப்படுறீங்க. அவரோட இலக்கே வேற மாதிரி, ராகுல் காந்தி அவர்களோட இலக்கே வேற மாதிரி இருக்கு..

செல்வப்பெருந்தகை: எங்க குடும்பத்தில் என்னுடைய மகள் இருக்கிறார். என்னுடைய அண்ணன் மகன்கள் இருக்காங்க. அக்கா மகன், மகள்கள் இருக்காங்க. நான் ஒரு முடிவு எடுக்கிறேன்னா, எல்லோரும் அதில் மகிழ்ச்சியாக இருப்பாங்கன்னு கிடையாது. சில வருத்தங்கள் இருக்கும்.

இப்ப சில முடிவுகள் எடுக்கும்போது என்னுடைய மகள் வந்து, “டாடி, இது தப்பான முடிவு எடுத்துட்டோமோ?”ன்னு சொல்லுவார். வேற உறவினர் விஷயத்திலோ, தொழில் ரீதியான நண்பர்கள் பற்றிப் பேசும்போதோ சொல்லுவார். அவர் சொல்றது சில நேரங்களில் கரெக்டாக இருக்கும். நான் எடுத்த முடிவு சில நேரங்களில் தவறாக இருக்கும்.

என்னுடைய பார்வையில், பிரதமரா? ஒரு ராஜ்யசபா உறுப்பினரா? என்றால் எனக்கு பிரதமர்தான் முக்கியமாகத் தெரிந்தது. இந்த இரண்டு ஆண்டுகள் ராஜ்யசபா உறுப்பினர் என்பது பெருசாகத் தெரியல. ஆனால் அவர்களுக்கு அந்த ராஜ்யசபா உறுப்பினர் பதவியை அடையணும்னு பெருசாக இருந்துச்சு. என்னுடைய பார்வைக்கும் அவங்க பார்வைக்கும் அதுதான் வித்தியாசம்.

கேள்வி: ஆனா, இந்த நேர்காணல் வெளிவரும்போது பார்க்கிறவங்க உங்களைப் பார்த்து, “திமுகக்காரரா? இல்லை, இவர் காங்கிரஸ்காரரா? நல்லவரா, கெட்டவரா?”ங்கிற மாதிரி கேட்டால் என்ன?

செல்வப்பெருந்தகை: காங்கிரஸ்காரன்தான். காங்கிரஸ்காரன்தான். அதில் என்ன மாற்றுக் கருத்து இருக்கு? அன்னை சோனியா காந்தியை “மிகப்பெரிய தியாகத் திருவிளக்கு” என்று கலைஞர் போற்றியிருக்கிறார்.

சோனியா காந்தியே ஒரு கூட்டத்துல சொல்லியிருக்காங்க. தமிழ்நாட்டுல முத்தமிழறிஞர் கலைஞரையும், பீகார்ல லாலு பிரசாத் யாதவையும் நாம் மறக்கவே கூடாது. கஷ்டமான காலங்கள்ல நமக்குக் கூட இருந்த தலைவர்கள். கம்யூனிஸ்ட் தலைவர்கள் சொல்லியிருக்காங்க. அவர்களுடைய பார்வைதான் என்னுடைய பார்வையும். கஷ்டமான காலத்துல நம்மகூட இருந்தாங்க. அப்புறம் எப்படி அவங்களை ஓவர் நைட்ல மறந்துட முடியும்? தூக்கி வெளியே போட்டுட முடியும்?

அரசியலுக்காக இன்னைக்கு காங்கிரஸ் – திமுக உறவுல பிளவு ஏற்பட்டிருக்குன்னா, இது எவ்வளவு காலம் இருக்கும்? கடைசி வரைக்கும் இருக்கும்னு யாராவது சொல்ல முடியுமா?

நாவடக்கம் கொஞ்சம் வேணும்ல? அரசியலை அரசியலாதானே பார்க்கணும்? எது வேணாலும் பேச முடியுமா?

கேள்வி: ஆனா அந்த ஒரு தொலைநோக்கு பார்வை இன்னைக்கு மாநில காங்கிரஸ் கமிட்டிக்கும் இருக்குதா? அகில இந்திய தலைமைக்கும் இருக்குதுன்னு நினைக்கிறீங்களா?

செல்வப்பெருந்தகை: அது எனக்கு தெரியாது.. என் கருத்தைதான் சொல்ல முடியும்.

கேள்வி: பிரதமர் வேட்பாளர் விவகாரத்திலேயே மாணிக்கம் தாகூர் அவர்கள், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… எல்லாம் முடிஞ்சு போன கதைங்க” அப்படின்னுட்டாரு. ஒரு கூட்டணியும் அவங்க “மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி”ங்கிற பேரில் அமைத்து, பிரஸ் மீட்டும் கொடுத்துட்டாங்க.

செல்வப்பெருந்தகை: நான் சொல்றேன், ஒரு ஒப்பீடு. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அன்னை சோனியா காந்தியையும், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற ராகுல் காந்தி அவர்களையும் அழைத்து, அண்ணன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன சொன்னாரு? பிரகடனப்படுத்தினார்.

“பிரதமர் வேட்பாளர் திரு. ராகுல் காந்திதான். நான் பிரகடனப்படுத்துகிறேன்”னாரு. எந்த மாநிலத்திலிருந்து? தமிழ்நாட்டிலிருந்து. அன்னைக்கு 40 தொகுதியில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்ற மாநிலம். 2024-ல் 40-ம் வெற்றி பெற்றோம்.

அந்த மாநிலத்திலிருந்து ஒரு வாய்ஸ். அது சாதாரண வாய்ஸ் இல்ல. அது கன்னியாகுமரியில் ஆரம்பிச்சு காஷ்மீர் வரைக்கும் போச்சு.

அப்ப இருந்த தலைவர்கள்.. நான் பேரை சொல்ல விரும்பல.. எல்லோரும் வருத்தப்பட்டாங்களாம். “எதுக்கு அவசரப்பட்டு நீங்க அறிவிச்சீங்க?”ன்னு. அவர் அவசரப்படல. தேவை அப்படின்னு அந்தக் குடும்பத்தை நேசிச்சாரு; தலைவர் ராகுல் காந்தியை நேசிச்சாரு. என்கிட்ட சொல்லியிருக்காரு, “நான் அறிவிச்சிட்டேன். நிறைய எதிர்ப்பு வந்தாலும் பரவாயில்லை” அப்படின்னு.

ஆனா, அந்த 5, 6 ஆண்டுகள் அதை கண்டினியூஸாக கொண்டு போனாங்க பாருங்க. ஒரு பக்கம், “பிரதமர் ஆக்க வேண்டும்; அவர்தான் பிரதமர் வேட்பாளர்” என்று ஒரு பார்வை. இன்னொரு பக்கம் ஆர்எஸ்எஸ், பாஜக எதிர்ப்பு. இது சாதாரண எதிர்ப்பு இல்ல. இந்த எதிர்ப்புக்காக அவங்க பண்ண தியாகங்கள் கொஞ்சம் நஞ்சம் கிடையாது.

திமுக அமைச்சர்கள் ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள். எல்லார் மேலயும் வழக்கு. எல்லார் மேலயும் அமலாக்கத் துறையுடைய சோதனை. இதையெல்லாம் தாக்குப் பிடித்துக்கொண்டு, எந்தவித சமாதானமும் ஆகாமல் அந்த எதிர்ப்பு அரசியலைப் பண்ணார் பாருங்க. அதுதான் எங்களைப் போன்றவர்களையெல்லாம் கவர்ந்திருக்கு. இன்னைக்கு எந்தவித சமாதானமும் கிடையாது.

“இந்தியத் திருநாட்டைக் கட்டி எழுப்பப் போறாரு பிரதமர்”ன்னு எந்த இடத்திலயுமே அவர் சொல்லல.

கேள்வி: அதை குறிப்பிட்டுச் சொல்றீங்க. இன்னைக்கு கூட்டணியில் இருக்கக்கூடிய திருமா அவர்கள் சொல்றாங்க, “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்த்த அளவுக்குக்கூட திமுக பாஜகவை எதிர்க்கவில்லை”ங்கிறார்.

செல்வப்பெருந்தகை: இல்ல, அவருடைய பேச்சு அது. ஆனா இன்னைக்கு இந்தியாவிலேயே தலைவர் ராகுல் காந்திக்குப் பிறகு கடுமையாக ஆர்எஸ்எஸ் ஐடியாலஜியை பாஜகவை எதிர்த்தவர் அண்ணன் மு.க.ஸ்டாலின்தான்.

கேள்வி: நீங்க ட்வீட்டில் கூட அதைக் குறிப்பிட்டிருந்தீங்க சார். பாஜகவைப் பற்றி விமர்சித்தாலோ, அமித் ஷா அவர்களைப் பற்றி விமர்சித்தாலோ, உடனே அங்க சட்டப்பேரவையில் இந்த மாதிரி அடுத்த கட்டத்துக்குப் போயிடுறாங்க. அதை அப்படியே அவாய்ட் பண்றாங்க.

செல்வப்பெருந்தகை: அவாய்ட் பண்ணாக்கூட பரவாயில்லை; அவைக் குறிப்பிலிருந்து நீக்குங்கன்னு சொல்றாங்க.

கேள்வி: இதையெல்லாம் பார்த்துக்கிட்டு பொறுமையாகத்தானே சார் காங்கிரஸ் இருக்கு? திருமா அவர்களுடைய விசிக… ஐயூஎம்எல் எல்லாரும், எம்.எல்.ஏ.க்கள் எல்லாரும் இருக்காங்களே சார்? எப்படி சார்? இது அரசியல் சூழல் இல்ல.

செல்வப்பெருந்தகை: இது அவருடைய அரசியலுடைய பாதை. அதை அப்படி அவங்க போயிட்டாங்க. நான் யாரையும் குறை சொல்ல விரும்பல. அவங்கவங்க மக்கள்தான் இதுக்கு சாட்சியாக நின்னு பார்த்துட்டு இருக்காங்க.

கேள்வி: அதைவிட காங்கிரஸ் சார். உங்களுடைய நேர் எதிரி பாஜக?

செல்வப்பெருந்தகை: நான் உண்மையிலேயே நேற்று ஒரு நண்பர்கிட்ட ஒரு வாரமா சொல்லிட்டு இருக்கேன். என்னவோ தெரியல, மக்கள் ரொம்ப நன்மையைச் செஞ்சாங்க. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பைக் கொடுக்கல. ஒருவேளை வெற்றி வாய்ப்பு கொடுத்து, நான் போயிட்டு அங்க அஞ்சுல ஒண்ணா உட்கார்ந்திருந்தேன்னா என்ன நடந்திருக்கும்?

என்ன நடந்திருக்கும்? டெய்லி கச்சேரிதான் நடந்திருக்கும்.. சட்டமன்றத்தில். டெய்லி வெளிநடப்புதான். டெய்லி தகராறுதான் நடந்திருக்கும்.

ஏன்னா, நீட் பற்றி கூட்டணியில் இருக்கிற தவெக பேசுறாங்க. “நீட் கொண்டு வந்தது நீங்கதானே?”ங்கிறாங்க. யாரைச் சொல்றாங்க? திமுகவைச் சொல்றாங்க. திமுகவா பிரதமரா இருந்தாங்க? திமுகவா வந்து ஒன்றிய சுகாதாரத் துறையு கேபினட் அமைச்சரா இருந்தாங்க? (தொடரும்)

Selvaperunthagai Interview | ஸ்டாலின் தலைமையில் 3-வது அணி... காங்கிரஸ்க்கு ஆப்பு ? | DMK | VCK | TVK
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share