“ஆதவ் அர்ஜுனா கம்யூனிஸ்ட் வரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டும்!” – சிபிஐ சுளீர் பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

ஆதவ் அர்ஜுனா கம்யூனிஸ்டுகளின் நூற்றாண்டு கால வரலாற்றைப் படிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்திக்கு, ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், “திமுக நிறைய ஊழல் செய்திருக்கிறது; அது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தெரியுமா?” என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு:

ADVERTISEMENT

“அது மிக மிகத் தவறானது, பிழையானது! எங்கள் நூற்றாண்டு கால அரசியல் வாழ்வில் ஒருநாளும் நாங்கள் கையூட்டு பெற்றதுமில்லை; கையூட்டை வேடிக்கை பார்த்ததுமில்லை. எனவே, சகோதரர் ஆதவ் அர்ஜுனா நேரம் கிடைக்கும்போது கம்யூனிஸ்ட் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

‘நீங்கள் படித்துக் கொஞ்சம் முதல்வருக்கும் சொல்ல வேண்டும்’ என்று கரம்கூப்பி கேட்டுக்கொள்கிறேன். இந்த நூறாண்டு கால வரலாற்றில், கையூட்டுக்காகக் கம்யூனிஸ்டுகள் அல்லது கம்யூனிசத் தலைவர்கள் எந்தவொரு நீதிமன்றத்திலும் தண்டிக்கப்பட்டதில்லை.

ADVERTISEMENT

இந்தியாவில் சிறிதும் பெரிதுமாக 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீதிமன்றங்களும், பல லட்சக்கணக்கான காவல் நிலையங்களும் உள்ளன. இந்த 100 ஆண்டுகளில் ஒரு கம்யூனிசத் தலைவர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு பதிவாகவில்லை; ஊழலுக்காக இந்தியாவில் இருக்கும் ஒரு நீதிமன்றம் கூட கம்யூனிசத் தலைவர்களைத் தண்டித்ததில்லை.

இந்த நல்ல செய்தி, நாம் பெரிதும் மதிக்கும் விவிலியத்தில் (பைபிள்) கூட இல்லை; நமது புராணங்களிலும் இதிகாசங்களிலும்கூட இல்லை. இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் விவிலியத்தில்கூட இல்லாத மகத்தான சாதனையைக் கம்யூனிஸ்டுகள் இந்த நூறாண்டுகளில் படைத்துள்ளோம். நேரம் கிடைக்கும்போது சகோதரர் ஆதவ் அர்ஜுனாவும் அவரது சகாக்களும் கம்யூனிஸ்ட் வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share