“ஆதவ் அர்ஜுனா என்ன அரசியல் நிபுணரா? அவர் எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருக்கிறார்? லாட்டரி விற்றுக் கொண்டிருந்த ஒருவர். அவருக்கு என்ன பெயர்? லாட்டரி மாபியா தானே?” என முன்னாள் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் இன்று சென்னை கிளம்பினார். அவரை வழியனுப்பி வைத்த பின்னர், கோவை விமான நிலையத்தில் முன்னாள் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்தார். அப்போது, “அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு ஆளுங்கட்சியினர் மிரட்டப் பார்க்கின்றனர். இந்த மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இது பணங்காட்டு நரி, சலசலப்புகளுக்கு அஞ்சாது. இது போன்ற பொய் வழக்குகளைச் சந்தித்துதான் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இயக்கத்தில் தொடர்கிறோம். அதிமுகவின் வெற்றியைத் தடுக்க இவர்கள் செய்கின்ற முயற்சிகள் அனைத்தும் பொய்த்துப் போகும்” என்றார்.
“5 நிமிடங்கள் விஜய் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து புரோட்டா ஆகிவிட்டார். இது போல் எடப்பாடியார் பேசியிருந்தால் அவரும் இங்கு இருந்திருக்க மாட்டார்” என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்தது குறித்த கேள்விக்கு, “ஆதவ் அர்ஜுனாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அனுபவக் குறைச்சல். பல கட்சிகள் மாறி வந்தவர், இப்போது திடீரென மந்திரி ஆகிவிட்டதால் அவருக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார். அதிமுகவின் பாரம்பரியமும் வரலாறும் மிகவும் பெரியது. 55 ஆண்டை இந்த இயக்கம் எட்டியிருக்கிறது. இந்த இயக்கத்தைத் தொடக்கூட முடியாது. இவர்களின் அனுபவக் குறைச்சலால் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு, “வெற்றி வாய்ப்பு மிகப்பிரகாசமாக இருக்கிறது. ஆதவ் அர்ஜுனா போன்றவர்களின் கோமாளித்தனமான, வேடிக்கையான பேச்சுக்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் சரியான பதிலைக் கொடுக்கும்” எனவும் தெரிவித்தார்.
“அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்” என ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்த கேள்விக்கு, “ஆதவ் அர்ஜுனா என்ன அரசியல் நிபுணரா? அவர் எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருக்கிறார்? லாட்டரி விற்றுக் கொண்டிருந்த ஒருவர். அவர் என்ன இதைச் சொல்வது? அவருக்கு என்ன பெயர்? லாட்டரி மாபியா தானே?” எனத் தெரிவித்தார்.
மின்வெட்டு குறித்த கேள்விக்கு, “தமிழகத்தில் தொடர் மின்வெட்டு மட்டுமல்ல, தொடர் கொலைகளும் நடைபெறுகின்றன. விதவிதமான கொலைகள், கொள்ளைகள் நடைபெறுகின்றன. விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
