மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்ததன் பின்னணி குறித்து புதிய தகவல்கள் நமது மின்னம்பலத்துக்கு கிடைத்துள்ளன.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் தவெக, ஏற்கனவே வெற்றி பெற்ற அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, நாம் தமிழர் கட்சி, சிபிஐ-சிபிஎம் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
தவெக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் கட்சிகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் தேமுதிக, மநீம, கொமதேக இருக்கின்றன.
2026 சட்டசபை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்த பாமக, இந்த இடைத்தேர்தலில் “யாருக்கும் ஆதரவு இல்லை” என அறிவித்துவிட்டது. இது தொடர்பாக நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், “திமுக- பாமக கூட்டணி! ஸ்டாலின்- அன்புமணி பேச்சு- திடீர் திருப்பம்!” என விரிவாக பதிவு செய்துள்ளோம்.



இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசிய போது, “மதுராந்தகம் தொகுதியில் வன்னியர்கள், தலித்துகள் வாக்குகள் கணிசமாக உள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி, தவெக கூட்டணியில் உள்ளது. தற்போதைய நிலையில் வட தமிழ்நாட்டில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு போட்டியாக உள்ள தலித் கட்சி புரட்சி பாரதம் கட்சி. ஆகையால் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக- பாமக-பாஜக கூட்டணி வேட்பாளராக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை வேட்பாளராக நிறுத்தலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அன்புமணி யோசனை தெரிவித்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, அன்புமணி தெரிவித்த இந்த யோசனயை பற்றி கொஞ்சமும் அக்கறை செலுத்தாமல் கண்டுகொள்ளாத போக்கையே வெளிப்படுத்தினார். அத்துடன் இந்த இடைத்தேர்தல் தொடர்பாகவும் அன்புமணியிடம் எடப்பாடி பழனிசாமி எதுவுமே பேசவும் இல்லை. இந்த அதிருப்தியில்தான் அதிமுக கூட்டணியை மட்டுமல்ல இடைத்தேர்தலில் யாருக்குமே ஆதரவு இல்லை என அன்புமணி அறிவித்தார் என தெரிவித்தனர்.
