இடைத்தேர்தல் 2026: விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள் – சிபிஎம்

Published On:

| By Pandeeswari Gurusamy

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றால், அது அவசியமானதுதான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற பதவியை உடனடியாக ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த மரகதம் குமாரவேல், சத்தியபாமா இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சில இடங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று சி.பி.எம். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, த.வெ.க. வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

“த.வெ.க. வேட்பாளர்கள் பரப்புரைக்கு செல்லும் இடங்களில் மக்களால் விரட்டியடிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க. சார்பில் உடனடியாக மீண்டும் போட்டியிடுகின்றனர். இவர்கள் ராஜினாமா செய்யாமல் எம்.எல்.ஏ-வாகவே தொடர்ந்து இருந்திருக்கலாம்.

ஆனால், எம்.எல்.ஏ பதவியை 20 நாட்களில் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால், அவர்கள் செல்லும் இடங்களில் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் வெறுப்பிலிருந்து வேட்பாளர்களைப் பாதுகாக்கவே காவல்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே அச்சுறுத்தல் இருக்கும்பட்சத்தில் பாதுகாப்பு வழங்குவது சரிதான். ” என்றார்.

ADVERTISEMENT

மேலும், “ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் அரசு இருக்கிறது. ஊழல் முறைகேடு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்துள்ளது.

தன்னுடைய மேஜையில் கோப்புகள் இருப்பதாகவும், அதை எப்போது வேண்டுமானாலும் திறப்போம்’ என்றும் முதலமைச்சர் சொல்லிக் கொண்டிருக்கிறார். புதிய ஆட்சி அமைந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அவர்களிடம் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் முறைகேடுகள் நடந்தது நிரூபிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share