திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பி. சத்தியபாமா மேற்கொண்ட வாக்கு சேகரிப்பின்போது, பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மதுராந்தகம் மரகதம் குமாரவேல், தாராபுரம் சத்தியபாமா உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து முதல்வர் விஜய் ராஜினாமா செய்த 7 தொகுதிகள் தமிழகத்தில் காலியாக உள்ளன. இதில் 5 தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களாக, அதிமுகவில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா இருவரும் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று சத்தியபாமா, வெருவேடம்பாளையம், நந்தம்பாளையம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்று ‘விசில்’ சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் சத்தியபாமாவின் பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் உப்பாறு அணைக்குத் தண்ணீர் கொண்டு வருவதைச் சத்தியபாமா தலையிட்டுத் தனது சொந்த அரசியல் லாபத்திற்காக நிறுத்தி வைத்ததாகக் குற்றம்சாட்டினர். மேலும் சத்தியபாமாவுக்கு எதிராகவும், அவரது அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பியதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், பிரச்சாரத்தின்போது எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களில் சிலர், “கடந்த தேர்தலில் எங்களுக்கு வாக்குறுதிகள் அளித்து வாக்குகளைப் பெற்ற நிலையில், வெற்றி பெற்ற பின்னர் குறுகிய காலத்திலேயே பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணைந்தது ஏமாற்றம் அளிக்கிறது” எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.
மேலும், “சத்தியபாமாவை எதிர்ப்போம்; மீண்டும் ஓட்டு கேட்டு வரக் கூடாது” என்பன உள்ளிட்ட கோஷங்களையும் அவர்கள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. தகவல் அறிந்து தாராபுரம் மற்றும் குண்டடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது சத்தியபாமாவின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தேர்தல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
