தமிழக தேர்தல் ஆணையம் CEO TN தமிழக வெற்றி கழகத்திற்கு 2025 மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக தமிழக வெற்றிக்கழகத்திற்கு அங்கீகரித்துள்ள நட்சத்திர பேச்சாளர் பட்டியலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கராத்தே தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. பின்னர் தமிழக முதல்வர் விஜய் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்குத் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, அதிமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் காலியாகின. மற்ற ஐந்து தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. இதற்கிடையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. தவெக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்வதற்காகத் தவெக சார்பில் ‘நட்சத்திரப் பேச்சாளர்கள்’ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பட்டியலுக்கு எதிராக பாஜக நிர்வாகி கராத்தே தியாகராஜன் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் பிரசாரம் செய்வதற்கான நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலைத் தமிழகத் தேர்தல் அதிகாரி (CEO TN) வெளியிட்டுள்ளார்.
இந்த நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில், தமிழக வெற்றிக் கழகத்தின் நட்சத்திரப் பேச்சாளர்களாகத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுடன் சேர்த்து, காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், விசிக-வைச் சேர்ந்த ரவிக்குமார் MP, வன்னியரசு மற்றும் சிந்தனைச் செல்வன் போன்ற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77-ன் படி, அந்தந்தக் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களை மட்டுமே அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்களாக அறிவிக்க முடியும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டம் இவ்வாறு தெளிவாக இருக்கும்போது, தமிழகத் தேர்தல் அதிகாரி (CEO TN), தவெக அளித்துள்ள 40 பேர் கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் பிற கட்சிகளின் தலைவர்கள் இடம்பெற்றிருப்பதை அங்கீகரித்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.
சட்டப்படி நடக்க வேண்டிய தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகச் செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும், நடைபெறவுள்ள இடைத்தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி, தனது கட்சியைச் சாராதவரை நட்சத்திரப் பேச்சாளராக அறிவித்தபோது சர்ச்சை எழுந்தது. அதன் பிறகு, கட்சியின் உறுப்பினர் அல்லாத ஒருவரை நட்சத்திரப் பேச்சாளராக நியமிக்க முடியாது என்ற நிலை தெளிவுபடுத்தப்பட்டது. எனவே, 2026 மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காகத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலைத் தமிழகத் தேர்தல் ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
