மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விடுத்துள்ளார். அதேவேளையில், கடந்த திமுக ஆட்சியின் செயல்பாடுகளை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமைச் செயலகத் திட்டம் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராகப் பேசுவதைவிட தமிழக வெற்றிக் கழகத்துடைய ஒரு தொண்டனாகப் பேசுவதுதான் சந்தோஷமான விஷயம். ஏனென்றால் சட்டமன்றத்தில் பேசினால் ‘புரோட்டோகால், புரோட்டோகால்’ என்று சொல்லி பேச விடமாட்டேங்கிறாங்க. அது என்னவோ தெரியவில்லை. நான் எழுந்து நின்றாலே பேச விடமாட்டேங்கிறாங்க. அடுத்த முறை நம்மை மூச்சுவிடக்கூட விடமாட்டார்கள் என்று நினைக்கிறேன். மூச்சுவிட்டால்கூட கத்த ஆரம்பித்துவிடுவார்கள்.
சட்டமன்றத்தில் மொத்தமாக பேக் பண்ணி அனுப்பிட்டோமா? திராவிட முன்னேற்றக் கழகம் 75 வருடக் கட்சி, பெரிய ஆளுமைகள் என்று எல்லோரும் கிளம்பி வந்தார்கள். ஆனால் கிளம்பி முடிக்கும்போது யாருமே சட்டமன்றத்தில் இல்லை.
நம்ம முதலமைச்சர் வரும்போது சுத்தமாக இருக்கவே மாட்டார்கள். ‘பேசு, பேசு, பேசு’ என்று சொல்லுவார்கள். அவர் அமைதியாகப் பார்த்துக்கொண்டே இருப்பார். புத்தர் மாதிரி அமைதியாகப் பார்த்துக்கொண்டே இருப்பார். பேச ஆரம்பித்த உடனே எழுந்து கத்த ஆரம்பித்துவிட்டு வெளியே போய்விடுவார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்கியது பெண்கள்
நாம் எந்த மாதிரியான சூழ்நிலையிலிருந்து ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்? யார் யாரெல்லாம் தோற்பார்கள் என்று சொன்னார்களோ அவர்கள் எல்லாம் சட்டமன்றத்துக்குள் போய்விட்டோம். இது யாருடைய வெற்றி? தமிழ்நாட்டு மக்களுடைய வெற்றி. குறிப்பாக இந்தக் கட்சியை உருவாக்கியது பெண்கள். தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்கியது பெண்கள்.
தமிழக வெற்றிக் கழகம் எப்படி ஜெயித்தது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இன்னும் ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். 75 வருடக் கட்சி. மு.க.ஸ்டாலின் சார் தேர்தலுக்குப் பிறகு வெளியே வரவே இல்லை. அவர் பேசினால் கல்யாணத்தில்தான் பேசிக்கொண்டிருப்பார். அதற்குப் பிறகு அவருடைய பிள்ளை சட்டமன்றத்துக்கு வந்து முதல் முறையாகப் பேசுகிறார்.
‘நாங்கள் எங்களுக்கு எதிரி யார் என்று தெரியாமலே தேர்தல் பிரச்சாரம் பண்ணிவிட்டோம். அதனால்தான் தமிழக வெற்றிக் கழகத்தைப் பற்றி நாங்கள் பேசவே இல்லை’ என்கிறார்கள்.
அண்ணா உருவாக்கிய கட்சி, கலைஞர் பாதுகாத்த கட்சி. எவ்வளவு பெரிய கட்சி? அதில் ‘நான்காம் கலைஞர்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கலைஞர் என்று சொல்வதற்கே ஒரு அருகதை வேண்டும். அவர் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், கலைஞருடைய திறமைக்குப் பக்கத்தில் வருவதற்கு மு.க.ஸ்டாலினுடைய பிள்ளையாக இருந்தால் மட்டும் போதாது. கீழே இருந்து வர வேண்டும். நம்மைப் போல உழைத்து, கஷ்டப்பட்டு மேலே வர வேண்டும். ஆனால் நேராக வந்து துணை முதலமைச்சராகி, திரும்ப நேராக வந்து எதிர்க்கட்சித் தலைவராகி, உடனே நம்மையெல்லாம் கிண்டல் பண்ணுகிறார்.
‘சட்டமன்ற உறுப்பினர்கள் பெயரெல்லாம் எங்களுக்குத் தெரியவில்லை. அங்கே உட்கார்ந்திருக்கிற அமைச்சர்கள் பெயரெல்லாம் தெரியவில்லை. எங்களுக்கு எதிரி யார் என்றே தெரியாமல் பிரச்சாரம் பண்ணிக்கொண்டிருந்தோம்’ என்கிறார்கள். நான் அவரிடம் கேட்கிறேன். எதிரி யார் என்றே தெரியாமல் அரசியலுக்கு வந்து தேர்தலில் தோற்றுவிட்டு நீங்கள் பெரிய கட்சியா? திமுக பெரிய கட்சியா? ஒரு தேர்தலில் முதலில் எதிரி யார் என்று கண்டுபிடிக்க வேண்டாமா? அந்த எதிரி யார் என்பதுகூட 2026 வரை தெரியவில்லையா?
தேர்தல் முடிவு வந்த பிறகு, சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர் தெரியவில்லை; அமைச்சர்களின் பெயர் தெரியவில்லை என்கிறார்கள். இதுதான் எங்கள் தலைவர், எங்கள் அண்ணன் விஜய்யின் வெற்றி.
முன்பெல்லாம் சட்டமன்ற உறுப்பினராக வேண்டுமென்றால் எப்படி இருக்க வேண்டும்? 30 கோடி ரூபாய் பணம் இருக்க வேண்டும். சாதி பலம், மத பலம் இருக்க வேண்டும். உங்கள் அப்பா எம்.எல்.ஏ.வாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் குடும்ப வாரிசில் அமைச்சர் இருக்க வேண்டும்; முன்னாள் அமைச்சர் இருக்க வேண்டும்; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்க வேண்டும்.
ஆனால் இங்கே ஜெயித்தவர்கள் எல்லாம் சாமானியர்கள். 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள், 50 ஆயிரம், 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி வேலை பார்த்தவர்கள் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
Gen Z கட்சி என்று கிண்டல்
இதைத்தான் 1967-ல் அண்ணா செய்தார். ஆனால் இன்றைக்கு இருக்கிற திமுகவுக்கு அது தெரியவில்லை. ‘Gen Z கட்சி, Gen Z கட்சி’ என்று கிண்டல் செய்தார்கள். 1967-ல் கட்சியை வளர்த்தவர்களும் இளைஞர்கள்தானே? தேர்தல் நேரத்தில் நம்மைப் பார்த்து, ‘இது Gen Z கட்சி, இது Reels கட்சி, இது WhatsApp கட்சி, இது Instagram கட்சி’ என்று கேவலமாகப் பேசினார்கள்.
வெறும் Instagram வைத்தே உங்களை முடித்துவிட்டார்களே! ஒரே முகம் எங்கள் தலைவர். இத்தனைக்கும் அவரை முழுமையாகப் பிரச்சாரம் பண்ணக்கூட விடவில்லை.
இப்போது ஆட்சிக்கு வந்து என்ன மாற்றம் என்று மக்கள் உணர்கிறார்கள். ஊழல் சுத்தமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோம். இது எந்தத் தலைவர் காலத்தில் நடந்திருக்கிறது?
முன்பெல்லாம் ஒரு எம்.எல்.ஏ. என்று வைத்துக்கொள்ளுங்கள், அமைச்சர் என்று வைத்துக்கொள்ளுங்கள்; அந்தக் குடும்பத்துக்கு 12 சதவிகிதம் கட்டிங் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு அமைச்சர் குடும்பம், அமைச்சர் பி.ஏ. குடும்பம், அமைச்சர் மச்சான் குடும்பம் என்று வரிசையாக வரும். இப்போது ஏதாவது இருக்கிறதா?
‘அமைச்சர் பெயர் தெரியவில்லை, சட்டமன்ற உறுப்பினர் பெயர் தெரியவில்லை’ என்று சொல்கிறீர்களே? ஏனென்றால் அவர்கள் மக்களோடு மக்களாக இருக்கிறார்கள். ஊழல் பண்ணி பெரிய கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரி கட்டவில்லை.
ஆனால் முன்பு ஊழல் செய்ததால்தான் சிலருடைய பெயர் எல்லோருக்கும் தெரிந்தது என்று நான் குற்றம்சாட்டுகிறேன். இப்போது இங்கே கூட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? ‘ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் எங்கே கொடுக்கலாம்?’ இதுதான் இவர்களுடைய தேர்தல் அரசியல்.
இடைத்தேர்தல் என்றால் என்ன? ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து ஓட்டை வாங்கிவிட்டுப் போய்விட வேண்டும். ஜெயித்த பிறகு அந்தத் தொகுதியைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் போய்விட வேண்டும்.
ஓட்டுக்குக் காசு கொடுக்க மாட்டோம்
ஆனால் தமிழக மக்களே எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் இங்கிருந்து சத்தியம் செய்கிறோம். மீடியா முன்னால் சொல்கிறோம்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக 2026-ல் ஓட்டுக்குக் காசு கொடுக்காமல், மக்களிடம் அன்பையும் நம்பிக்கையையும் உருவாக்கி எங்களுடைய தலைவர் வெற்றி பெற்றார்.
இப்போது எழுதி வைத்துக்கொள்ளுங்கள். எங்களுடைய தலைவர் வழியில் இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஓட்டுக்குக் காசு கொடுக்காது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இத்தனை காலம் பாரம்பரியமாக இருந்த இந்தக் கலாச்சாரத்தை உடைப்போம்.
மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைக்க வேண்டும். நல்ல ரோடு கிடைக்க வேண்டும். நல்ல மருத்துவமனை கிடைக்க வேண்டும். ஊழல் இல்லாமல் அரசுடைய ஒவ்வொரு நிர்வாகமும் கிடைக்க வேண்டும்.
இப்போதுகூட நம்முடைய வேட்பாளர் வந்தவுடன், ‘அண்ணா, கொஞ்சம் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது’ என்று சொன்னார். நீர்வளத்துறை அமைச்சரே வந்துவிட்டார். இனிமேல் தண்ணீர் பிரச்சினையைச் சரி செய்வோம். சில ஊர்களில் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரோடு இல்லை. வன்னிய மக்கள் இருக்கக்கூடிய சில இடங்களிலும் ரோடு இல்லை. ரோடு போடுவோம். நல்ல மருத்துவமனை கட்டிக் கொடுப்போம்.
இத்தனை அமைச்சர்கள் வந்தது ஏதோ ஓட்டுக் கேட்டுவிட்டுப் போவதற்காக அல்ல. ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் கொடுத்து பழைய அமைச்சர்கள் மாதிரி ஓட்டை வாங்கிவிட்டுப் போக முடியாது.
இந்த அன்பையும் நம்பிக்கையையும் எங்கள் அண்ணன் விஜய் அண்ணனிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது. அவர்கள் 5,000 ரூபாய் கொடுத்தாலும் 10,000 ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள். கடந்த முறை எப்படி வாங்கிவிட்டு, அந்தப் பணத்தில் டிரஸ் வாங்கிக்கொண்டு வந்து நமக்கு ஓட்டு போட்டீர்களோ அதேபோல செய்யுங்கள் என்று சொல்கிறேன்.
காலையிலேயே வந்து வரிசையில் நின்று ஓட்டு போடுங்கள். 100 சதவிகிதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும். மதுராந்தகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சென்னையில் வேலை பார்த்தாலும், தேர்தல் அன்று ஒரு நாள் இங்கே இருக்க வேண்டும். நம்முடைய அண்ணன் விஜய் அண்ணனுக்காக ஒரு நாள் இங்கே இருந்து வாக்களிக்க வேண்டும்.
நாம் ஒரு ரூபாய் செலவு பண்ணாமல் மக்களுடைய அன்பையும் நம்பிக்கையையும் பெற்று வெற்றி பெற்றோம். இப்போது நம்முடைய வேட்பாளரைப் பார்த்து, ‘தமிழக வெற்றிக் கழகத்திடம் பணம் வாங்கிக்கொண்டு ராஜினாமா செய்துவிட்டார்’ என்று எடப்பாடி அவர்கள் சொல்கிறார்.
எடப்பாடிக்கு சவால்
234 தொகுதிகளில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் நாமினேஷன் செய்தார்கள். எடப்பாடி தொகுதியில் மட்டும் நம்முடைய வேட்பாளர் எஸ்கேப். துணை வேட்பாளராக அவருடைய மனைவி போட்டிருந்தார்; அவரும் எஸ்கேப்.
எடப்பாடி தொகுதியில் மட்டும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஏன் எஸ்கேப் ஆனார்? அதனால் யாருக்கு ஆதாயம்? எடப்பாடிக்குத்தான்.
எடப்பாடி தொகுதியில் நம்முடைய ஒரு தம்பி விசில் சின்னத்தில் நின்றிருந்தால் அன்றைக்கே எடப்பாடி அவுட் ஆகியிருப்பார்.
இதையெல்லாம் செய்துவிட்டு நம்மைப் பார்த்து சொல்கிறார். கடைசி நேரத்தில் டிவி சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்கள் என்று நம்முடைய தலைவர் சொன்னார். முதல் ஐந்து சுற்றுகளில் அந்த வேட்பாளர்தான் முன்னிலையில் இருந்தார். இதுதான் நம்முடைய தலைவரின் வலிமை. பிரச்சாரத்தின் வலிமை.
இப்போது மதுராந்தகத்துக்கு அவர் இரண்டு நாட்கள் வருவார். இரண்டே நாட்கள்தான். எடப்பாடி அவர்களே, நீங்கள் வாருங்கள். உங்களை வரவேற்கிறோம். எடப்பாடியிலேயே உங்களை முடித்திருக்க வேண்டியது. தப்பித்துவிட்டீர்கள். வேண்டுமென்றால் எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் நில்லுங்கள். எங்கள் அண்ணன் ஒரு வேட்பாளரை நிறுத்துவார். ஒரு கல்லூரி முடித்த தங்கச்சியை நிறுத்தினாலே போதும். என் தங்கச்சி பிரச்சாரம் செய்தால் எடப்பாடி தொகுதியில் ஜெயிப்போம்.
நம்முடைய அக்காவைப் பார்த்திருப்பீர்கள். தங்கத்தைப் பார்த்திருப்பீர்கள், வைரத்தைப் பார்த்திருப்பீர்கள்; மரகதத்தை மறக்கவே முடியாது. அவருக்கு அந்தப் பெயரை வைத்தது புரட்சித் தலைவி அம்மா. அவரைக் கண்டெடுத்ததும் புரட்சித் தலைவி அம்மாதான்.
ஆனால் இன்று அதிமுகவில் அவருக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் யார்? புரட்சித் தலைவி அம்மாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்று நான் சொல்கிறேன். நம்முடைய அக்கா ஏன் ராஜினாமா செய்தார் என்பதை நாம் பதிவு பண்ணியிருக்கிறோம். அது மக்கள் கேட்க வேண்டிய நியாயமான கேள்வி. மக்கள் நமக்கு ஓட்டுப் போட்டார்கள். மக்களிடம் உண்மையாகப் பேச வேண்டும். மக்கள் கேட்கிற கேள்விக்கு நாம் நேருக்கு நேர் பதில் சொல்ல வேண்டும்.
‘தமிழக வெற்றிக் கழகத்தில் பணம் வாங்கிக்கொண்டு ராஜினாமா செய்தார்கள்’ என்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தில் அவ்வளவு காசு இருக்கிறதா? என்னிடம் காசு இல்லைப்பா. என்னைப் பற்றி ‘5,000 கோடி இருக்கிறது, 10,000 கோடி இருக்கிறது’ என்று ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள்.
என் குடும்பம் வேறு, நான் வேறு. நான் தொழிலையே விட்டுவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துவிட்டேன். கட்சிக்காக நான் முதலில் செலவே பண்ணவில்லை. பூத்துக்குக் காசு கொடுத்திருக்கிறோமா? மக்களுக்கு ஓட்டுக்குக் காசு கொடுத்திருக்கிறோமா? இது ஒரு பொய்யான பிம்பம்.
திமுகவும் அதிமுகவும் சேர்ந்து…
தேர்தல் முடிந்துவிட்டது. 108 தொகுதிகளில் நமக்கு முடிவு வந்துவிட்டது. மெஜாரிட்டி இல்லை. அதன்பிறகு அதிமுகவில் ஜெயித்த எம்.எல்.ஏ.க்களை எல்லாம் கூட்டிக்கொண்டு போய் என்ன பேசினார்கள்? ஒரு லெட்டர் கேட்டிருக்கிறார்கள். அந்த லெட்டரைக் காட்டினார்கள்.
எடப்பாடி அவர்கள் கேட்டதாகக் கூறப்படும் அந்தக் கடிதத்தின் format என்ன? ‘நான் உங்களை சட்டமன்றத் தலைவராகவும் முதலமைச்சர் வேட்பாளராகவும் ஆதரிக்கிறேன்’ என்று ஒரு லெட்டரில் கையெழுத்து வாங்குகிறார்கள். யாரிடமிருந்து? அதிமுக எம்.எல்.ஏ.க்களிடமிருந்து.
அப்படி ஒரு முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி அவர்களை எப்படி உருவாக்க முடியும்? அப்படியென்றால் அதிமுகவும் திமுகவும் சேர்கிறது.
திமுகவும் அதிமுகவும் சேர்ந்து எடப்பாடி அவர்களை முதலமைச்சராக்குவதற்குப் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று நான் சொல்கிறேன்.
இதை நான் மட்டும் சொல்லவில்லை. மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா காலத்தில் வளர்ந்தவர்கள் வாழ்க்கை முழுவதும் திமுகவை எதிரியாகப் பார்த்தவர்கள். அப்படிப்பட்ட ஒரு கட்சி திமுகவுடன் சேரும் நிலை வந்திருக்கிறது என்று நான் குற்றம்சாட்டுகிறேன்.
தவெகவுடன் இணைந்த அதிமுக வாக்கு வங்கி
புரட்சித் தலைவி அம்மா இருந்தவரை கட்சி சிங்கம் மாதிரி இருந்தது. டெல்லியில் இருந்து பிரதமரே போயஸ் கார்டனுக்கு வருவார். இப்போது இவர்கள் டெல்லிக்கு ஓடுகிறார்கள். இதுதான் இன்றைக்கு இருக்கிற அதிமுக. உண்மையான அதிமுக எங்கே இருக்கிறது தெரியுமா? மதுரையில் நம்முடைய தலைவர் மாநாடு நடத்தியபோது எம்.ஜி.ஆரையும் அண்ணாவையும் அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு பேசினார். அங்கேதான் உண்மையான அதிமுகவின் தொண்டர்களை தமிழக வெற்றிக் கழகம் ஈர்த்தது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் விசுவாசிகளும் புரட்சித் தலைவி அம்மாவின் விசுவாசிகளும், ‘திமுகவை எதிர்க்க சரியான தலைவர் விஜய்தான்; சரியான கட்சி தமிழக வெற்றிக் கழகம்தான்’ என்று உணர்ந்ததால்தான் நமக்கு வெற்றி கிடைத்தது என்று நான் சொல்கிறேன்.
2026-ல் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஓட்டுப் போட்டார்கள். அதனால்தான் 35 சதவிகிதத்தை நாம் எட்ட முடிந்தது. அதிமுகவுடைய வாக்கு வங்கி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்தது என்பதுதான் என்னுடைய கருத்து. இப்போது சட்டமன்றத்தில் பாருங்கள். ஏதாவது பிரச்சினை என்றால் திமுகவும் அதிமுகவும் ஒன்றாகிவிடுகிறார்கள்.
இனிமேல் அதை அதிமுக என்று சொல்லக்கூடாது; ‘எடப்பாடி அதிமுக’ என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையான அதிமுக முடிந்துவிட்டது என்று நான் சொல்கிறேன். எம்.ஜி.ஆர். அவர்களுடைய ஆசியும், புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய ஆசியும் விசில் சின்னத்துக்குத்தான் இருக்கிறது என்று நம்புகிறோம்.
கம்யூனிஸ்ட்களுக்கு கேள்வி
ஏன் திமுகவை எதிர்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இங்கே இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் தோழர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். கடந்த ஆட்சியில் ஊழல் நடந்ததா, இல்லையா? டாஸ்மாக்கில் ஊழல் நடந்ததா, இல்லையா? அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்ததா, இல்லையா? ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்ததா, இல்லையா? நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் நடந்ததா, இல்லையா? பொதுப்பணித்துறையில் நடந்ததா, இல்லையா?
டெண்டர்களில் குடும்பத்துக்கு 10 சதவிகிதம், அமைச்சருக்கு 8 சதவிகிதம், அதிகாரிகளுக்கு 7 சதவிகிதம் என்று மொத்தம் 26, 27 சதவிகிதம் ஊழல் நடந்ததாக நான் குற்றம்சாட்டுகிறேன்.
இப்போது அதை நாம் சரி செய்திருக்கிறோம். நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர்கள் குறைந்த மதிப்பீட்டில் முடிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாமே Open Online-ல் இருக்கிறது. அதில் மிச்சமாகும் பணம் எங்கே போகும்? அரசாங்கத்தின் கஜானாவுக்குப் போகும். ஒவ்வொரு துறையிலும் இப்படிப் பணம் மிச்சமானால்தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
அரசியலுக்கு வந்து பணம் சம்பாதித்து பெரிய கல்லூரி கட்ட வேண்டும், பெரிய வீடு கட்ட வேண்டும் என்று இல்லாமல், ‘எனக்கு எதுவுமே வேண்டாம்’ என்று ஒரு முதலமைச்சர் நிற்கிறார். இதுதான் எங்கள் அண்ணன் விஜய் அண்ணன்; இதுதான் மாற்றம்.
சமூகநீதிக் கொள்கை, மதச்சார்பற்ற கொள்கையில் எங்கள் தலைவர் உறுதியாக இருக்கிறார். அவர் நினைத்திருந்தால் அதிமுகவின் ஆதரவைப் பெற்று, அவர்களுக்கு 15 அமைச்சர்கள் கொடுத்து முதலமைச்சராக இருந்திருக்கலாம். ஆனால் ஏன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்தார்? தமிழ்நாட்டு மக்களின் கொள்கையை உள்வாங்கி மதச்சார்பற்ற கொள்கையிலும் சமூகநீதிக் கொள்கையிலும் உறுதியாக இருப்பதால்தான்.
கூட்டணி இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது என்று நான் அப்போதே சொன்னேன். கொளத்தூரில் தோற்பார்கள் என்றும் சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்களுடைய குடும்பம் வில்லிவாக்கத்தில் உட்கார்ந்து எனக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது. அந்தக் குடும்பம் கொளத்தூரில் பிரச்சாரம் செய்திருந்தால் ஒருவேளை ஜெயித்திருக்கலாம். என்னுடைய வெற்றியைவிட ஆதவ் அர்ஜூனாவைத் தோற்கடிப்பதுதான் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது என்று நான் சொல்கிறேன்.
உதயநிதி பிரச்சாரம் செய்தார். அவருடைய மனைவி உள்ளிட்ட அனைவரும் வந்து பிரச்சாரம் செய்தார்கள். எங்கள் அண்ணன் கடைசி இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்தார். பேசக்கூட இல்லை. கை தூக்கிவிட்டுச் சென்றார். அவர் பேசாமலேயே சென்னையில் 16 தொகுதிகளிலும் முடிவு என்ன ஆனது என்று பார்த்தீர்கள்.
இப்போது மதுராந்தகம் பக்கத்தில் பணம் கொடுக்கலாம் என்று யாராவது நினைத்தால், எங்கள் பசங்களிடம் 5 லட்சம், 10 லட்சம் கொடுத்து பேச நினைத்தால், பணத்தை வாங்கி போலீஸிடம் ஒப்படைத்துவிடுங்கள். கலெக்டர், எஸ்.பி.யிடம் யார் யாரெல்லாம் பணம் வைத்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் தகவல் கொடுப்போம்.
நாம் பணத்தை வைத்து அரசியல் பண்ணப்போவதில்லை. மக்களே சொல்கிறார்கள்: ‘எனக்குக் காசு வேண்டாம்; தண்ணீர் கொடு. காசு வேண்டாம்; ரோடு கொடு. காசு வேண்டாம்; நல்ல கல்வியைக் கொடு.’
சாதி அரசியல் வேண்டாம்
இந்தச் சாதியை வைத்து இனிமேல் பிரித்துக்கொண்டிருக்க முடியாது. எங்களுக்கு வன்னிய அம்மாவும் தலித் அம்மாவும் முதலியார் அம்மாவும் எல்லோரும் அம்மாதான். எங்களுக்கு அம்மா என்றால் அம்மாதான். வன்னிய அம்மா, தலித் அம்மா, ரெட்டியார் அம்மா, முதலியார் அம்மா என்று சாதிப் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்க மாட்டோம்.
நமக்குள் ஒரே enemy என்ன தெரியுமா? வறுமை. ஏழ்மை. அதை ஒழிக்க வேண்டுமென்றால் ஊழல் ஒழிய வேண்டும். தலித் குடும்பத்தில் இருக்கிற குழந்தையும் நன்றாகப் படிக்க வேண்டும். வன்னியர் குடும்பத்தில் இருக்கிற குழந்தையும் நன்றாகப் படிக்க வேண்டும். நமக்குள் சண்டை வரக்கூடாது. எல்லோரும் சேர்ந்து முன்னேற வேண்டும். எல்லோரும் சேர்ந்து படிக்க வேண்டும். தலித் சகோதரர்களாக இருந்தாலும், வன்னிய சகோதரர்களாக இருந்தாலும், அனைத்து சாதிகளிலும் இருக்கக்கூடிய ஏழ்மை ஒழிய வேண்டும். எல்லாப் பெண்களும் படிக்க வேண்டும். எல்லோரும் வேலைக்குப் போக வேண்டும். எல்லோரும் நல்ல கான்கிரீட் வீட்டுக்கு வர வேண்டும். நம்முடைய குழந்தை அரசு பள்ளிக்குச் சென்றால் நல்ல பள்ளி இருக்க வேண்டும்; நல்ல தண்ணீர் இருக்க வேண்டும்; நல்ல விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும்; விளையாட்டில் முன்னேற வேண்டும்.
இங்கே இருக்கக்கூடிய அமைச்சர்கள் என்ன சாதி என்பது எங்களுக்குத் தெரியாது. எங்களுடன் இருக்கிறவர்கள் என்ன சாதி என்பதும் தெரியாது.
எங்கள் அண்ணன் 8 தலித் அமைச்சர்களை உருவாக்கியிருக்கிறார். 18 எம்.எல்.ஏ.க்கள் வன்னியர்கள் என்று கேட்கும்போதுதான் எங்களுக்கே தெரிய வருகிறது. இந்தக் கலாச்சாரம் வேண்டாம். எல்லோரும் சேர்ந்து முன்னேற வேண்டும்.
எல்லார் வீட்டு அம்மாவும் அம்மாதான். தன்னுடைய குழந்தை கல்வியில், வேலையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிற ஒவ்வொரு தாயின் கனவும் நிறைவேற வேண்டும். ‘இவர்கள் முன்னேற வேண்டும்; அவர்கள் முன்னேறக்கூடாது; இவர்கள் இந்தக் கோயிலுக்குள் வரக்கூடாது’ என்ற நிலை இல்லாமல், இன்னும் ஐந்து, பத்து வருடங்களில் எல்லோரும் சமம் என்ற சமூகத்தை உருவாக்க வேண்டும். நம்முடைய அண்ணனுக்கு சாதி இல்லை; மதம் இல்லை. மக்களைச் சூழ்ச்சி செய்து பிரிக்கும் எண்ணம் இல்லை.
பழிவாங்குகிற அரசியல் இல்லை
ஜெயித்த பிறகு திமுக, அதிமுக என்று பார்க்கக்கூடாது. எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் நம்முடைய அரசியல். சட்டமன்றத்தில் நம்முடைய முதலமைச்சரை எதிர்த்துப் போராட்டம் நடத்திய ஒரு எம்.எல்.ஏ.வால் எழுந்திருக்க முடியாதபோது, நம்முடைய அண்ணன் அவருக்குக் கை கொடுத்து எழுப்புகிறார். அதுதான் எங்களுடைய அரசியல்.
பழிவாங்குகிற அரசியல் எங்களுடையது கிடையாது. மிரட்டுகிற அரசியல் கிடையாது. எப்படி முன்னேற்றுவது? நாம் சொன்ன வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவது? விவசாயிகளுடைய பிரச்சினையை எப்படித் தீர்ப்பது? என்பதுதான் எங்களுடைய எண்ணம்.
விவசாயிகளுக்காக கடன் தள்ளுபடி செய்திருக்கிறோம். இன்னும் செய்வதற்குக் கொஞ்சம் நேரம் கேட்கிறோம். நமக்கு மூன்று மாதம்தான் ஆகியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் நேரம் கொடுங்கள். கண்டிப்பாகச் செய்வோம். முன்பு விவசாயிகள் அமைச்சர்களையே பார்க்க முடியாது. இப்போது அமைச்சர்கள் விவசாய சங்கங்களைச் சந்திக்கிறார்கள். அவர்களிடம் கொஞ்சம் நேரம் கேட்கிறோம்.
புதிய தலைமை செயலக விவகாரம்
அதேபோல புதிய தலைமைச் செயலகம் தொடர்பாகவும் பேசுகிறார்கள். ஒரு திட்டம் என்றால் முதலில் DPR – Detailed Project Report தயாரிக்கப்படும். அதன் பிறகுதான் அதைச் செய்யலாமா, வேண்டாமா என்று முதலமைச்சர் முடிவு செய்வார். மீனவ சகோதரர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்தையும் கேட்க வேண்டும். மக்களைப் பாதிக்கும் வகையில் எதையும் செய்யக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
பெண்களைக் கொச்சையாகப் பேசுவதை நிறுத்துங்க..
இப்படி ஒவ்வொரு பிரச்சினையிலும் மக்களோடு பேசித்தான் முடிவு எடுக்க வேண்டும். அதேபோல பெண்களைப் பற்றி பேசும்போது மரியாதையாகப் பேச வேண்டும். ஒரு அரசியல் கேள்வி கேட்டால் அதற்கு அரசியல் பதில் சொல்லுங்கள். ஒருவருடைய அம்மாவைப் பற்றி ஏன் பேச வேண்டும்?
எங்களுடைய சகோதரர், அமைச்சர் நிர்மல் குமாரைப் பார்த்தே அவரது அம்மாவைப் பற்றிக் கேள்வி கேட்கிறார்கள் என்றால், பெண்களை எந்த மனநிலையில் பார்க்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பெண்களைக் கொச்சைப்படுத்துவது, கேவலமாகப் பேசுவது, அசிங்கமாகப் பேசுவது போன்ற கலாச்சாரத்தை நிறுத்த வேண்டும்.
நம்முடைய முதலமைச்சர் என்ன சொன்னார்? சமூக வலைதளத்தில் பெண்களைத் தவறாகப் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் பெண்களைப் பற்றி அருவருப்பாகப் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுதான் message.
‘நான் எம்.ஜி.ஆர். காலத்திலும் பேசினேன்; ஜெயலலிதா காலத்திலும் பேசினேன்; மு.க.ஸ்டாலின் காலத்திலும் பேசினேன்’ என்று சொல்வதால் பெண்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் பேச முடியாது. இது விஜய் அண்ணன் ஆட்சி. பெண்களைப் பற்றிக் கொச்சையாகப் பேசுகிற கலாச்சாரத்தை முதலில் தூக்கி எறிய வேண்டும். கைது செய்து பல மணி நேரம் அழைத்துச் சென்று காவல் நிலையத்துக்குக் கொண்டு போன பிறகு, பத்து நிமிடம்கூட விசாரணை இல்லை என்று சொல்கிறார்கள். ‘போங்க, கையெழுத்துப் போட்டுக் கிளம்புங்க’ என்பதோடு முடிந்தது.
அதன் message என்ன? பெண்களைப் பற்றிக் குறைவாகப் பேசாதீர்கள். உங்கள் அம்மாவிடம் எப்படி பேசுவீர்களோ அப்படிப் பேசுங்கள். உங்கள் தங்கையிடம் எப்படி பேசுவீர்களோ அப்படிப் பேசுங்கள். உங்கள் மனைவியிடம் எப்படி பேசுவீர்களோ அப்படிப் பேசுங்கள். பெண்களைக் கொச்சையாகப் பேசுவதை நிறுத்துங்கள். பெண்கள் பாதுகாப்பாகட்டும், ஊழல் ஒழிப்பாகட்டும், கடந்த 10, 15 வருடங்களாக இருக்கிற ஒவ்வொரு பிரச்சினையையும் நம்முடைய முதலமைச்சர் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
நம்முடைய அக்காவை ஜெயிக்க வைக்க வேண்டிய கடமை உங்களிடம் இருக்கிறது. பூத் பூத்தாகச் செல்லுங்கள். WhatsApp குழுக்களை உருவாக்குங்கள். எல்லோரிடமும் பிரச்சாரம் செய்யுங்கள். எல்லோரும் பிரச்சாரம் பண்ணிவிட்டுப் போவார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பிரச்சாரம் பண்ணுவார். ஆனால் கடைசி இரண்டு நாட்களில் நம்முடைய தலைவர் வருவார். காட்டுயானை வந்து அடித்துவிட்டுப் போவது போல மொத்தமாகப் பிரச்சாரத்தை முடித்துவிட்டுப் போவார். அதுதான் நம்முடைய தலைவரின் பிரச்சார வலிமை. நமக்கு மிகப்பெரிய தலைவர் இருக்கிறார். அதனால் தினமும் மைக்கைப் பிடித்துக்கொண்டு எல்லோருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நான்கூட இப்போது பேசுவதைக் குறைத்துவிட்டேன்.
25 மேயர் பதவிகளையும் கைப்பற்றுவோம்
ஏன் தெரியுமா? தேர்தல் வரும்போது ஜெயித்துக்கொண்டே போக வேண்டும். அதுதான் பதில். வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும். இந்த இரண்டு இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று, அடுத்து உள்ளாட்சித் தேர்தலில் 25 மேயர் பதவிகளையும் நாம் ஜெயிக்க வேண்டும்.
‘நாங்கள்தான் பெரிய பண்ணையார்’ என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் வீட்டில் உட்கார வேண்டும். நம்முடைய எளிமையான பசங்க சட்டமன்றத்துக்குப் போக வேண்டும். நம்முடைய எளிமையான பசங்க மேயராக வேண்டும். நம்முடைய எளிமையான பசங்க பேரூராட்சித் தலைவராக வேண்டும்.
எல்லா எளிமையானவர்களும் அரசியலில் பதவிக்கு வர வேண்டும். இதுதான் அரசியல். இந்த அரசியலுக்கு இந்தத் தேர்தலுடைய வெற்றி முக்கியம். மதுராந்தகமும் தாராபுரமும் முக்கியம். அதனால் அடுத்த 10 நாட்கள் நான் உங்களுடன்தான் இருக்கப் போகிறேன். நான் இங்கேதான் சுற்றிக்கொண்டிருப்பேன். எங்கே பார்த்தாலும் இங்கேதான் இருப்பேன்.
சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணி வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு ஒரு சாம்பார், இரண்டு காய் போதும். நானும் சமைக்கிறேன்; ஒன்றும் பிரச்சினை இல்லை. நாம் நடந்தே ஒவ்வொரு பகுதிக்கும் போவோம்.
இது ஆதவ் அர்ஜூனாவோ, ஆனந்தன் அண்ணனோ மட்டும் செய்யக்கூடிய வேலை கிடையாது. பூத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் சேர்ந்து இந்த வெற்றியை தமிழக மக்களுக்கும் நம்முடைய அண்ணன் கையிலும் கொடுக்க வேண்டும். ‘அண்ணா, நாங்கள் ஜெயித்துவிட்டோம்’ என்பதுதான் நம்முடைய message ஆக இருக்க வேண்டும்.
நாங்கள் வரும்போது, ‘அண்ணே, இவர் என்னுடைய WhatsApp-ல் போட்டோ போடவில்லை; இந்த poster-ல் என்னுடைய போட்டோ போடவில்லை; இவர் இந்தச் சாதிக்காரர்’ என்றெல்லாம் சொல்லாதீர்கள். நாங்கள் எந்தச் சாதியையும் பார்க்க மாட்டோம். அதையெல்லாம் மறந்துவிடுங்கள்.
நமக்குள் சகோதர உணர்வு இருக்கட்டும். மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம். சாதியைத் தூக்கிப் போட்டு, மதத்தைத் தூக்கிப் போட்டு, பணத்தைத் தூக்கிப் போட்டு, நாம் முன்பு எப்படி ஜெயித்தோமோ அதேபோல இங்கேயும் நம்முடைய சகோதரிக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுப்போம். இவ்வாறு ஆதவ் அர்ஜூனா பேசினார்
