சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தால் டெங்கு காய்ச்சலால் 3 மாணவர்கள் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அளித்த விளக்கம்: 20 வயதுடைய அண்ணா பல்கலைக்கழக மாணவர் (விடுதி மாணவர்), 17.09.2026 அன்று 4 நாட்களாக நீடித்த அதிக காய்ச்சல் காரணமாக கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக அவர் கீழ்ப்பாக்கம் KMC மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான சிறந்த மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்பு அளிக்கப்பட்ட போதிலும், 18.09.2026 அன்று அவர் உயிரிழந்தார்.
மருத்துவ ரீதியாக தெரிவிக்கப்பட்ட நோயறிதல் ஸ்க்ரப் டைஃபஸ் (Scrub Typhus) ஆகும். டெங்கு தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் வேறு எந்த உயிரிழப்பும் இதுவரை பதிவாகவில்லை.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஏற்பட்ட ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) காரணமான மாணவர் உயிரிழப்பைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) சார்பில் பின்வரும் பொது சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன:
- அண்ணா பல்கலை கழக வளாகத்தில், துப்புரவுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
- டெங்கு நோய் பரப்பக்கூடிய கொசு உற்பத்தி மூலங்களை அகற்றும் பணிகள் 100 கொசு ஒழிப்பு பணியாளர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு, ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவுப் பணியாளர்கள் மூலம் வளாகத்தில் உள்ள புதர்கள் மற்றும் தேவையற்ற/ மழைநீர் தேங்க கூடிய பொருள்களை உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) ஏற்படுத்தக்கூடிய உண்ணிகளை (Chiggers) கட்டுப்படுத்த குளிர் புகைமூட்டுதல் (Cold Fogging) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- வாகனத்தில் பொருத்தப்பட்ட புகைமூட்டுதல் (Vehicle-mounted Fogging) பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ், 3 மருத்துவக் குழுக்களால் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
- மருத்துவ முகாம்களில் மாணவர்களுக்கு காய்ச்சல் மேலாண்மை தொடர்பான சுகாதாரக் கல்வி மற்றும் விழிப்புணர்வு (IEC) வழங்கப்பட உள்ளது.
- காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைக்கிணங்க , உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை தொடங்குமாறு அண்ணா பல்கலைக்கழக வளாக சுகாதார மைய மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இரத்த மாதிரிகளை GCC திருவான்மியூர் ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் GCC பணியாளர்கள் மூலம் செய்யப்பட்டுள்ளன.
- தலைமை கொசு கட்டுப்பாட்டு அலுவலர், மண்டலம் 13 உதவி சுகாதார அலுவலர் (ACHO), சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அரசின் அறிவுறுத்தல்களின்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்கள் வளாகத்தை நேரில் பார்வையிட்டு, தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அவற்றை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
