டிஜிட்டல் திண்ணை: இடைத்தேர்தல்- கை விரித்த பாமக- கதிகலங்கும் அதிமுக; விசிக போடும் கணக்கு.. திகிலில் தவெக- ஹேப்பி திமுக!

Published On:

| By Minnambalam Desk

By election-PMK-TVK-DMK-AIADMK-VCK

வைஃபை ஆன் செய்ததும், “சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. வேளைவந்தால் விஸ்வரூபம் எடுப்பான்”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. செம்ம வைபில் ஆரம்பிக்கிறீங்க போல..

அப்படிங்களா ப்ரோ.. இப்ப தாராபுரம், மதுராந்தகம் 2 தொகுதிகளில் நடக்க போகிற இடைத்தேர்தல் ஜூரம்தான் எல்லா கட்சிகளுக்குமே இருக்குங்க ப்ரோ..

ADVERTISEMENT

மதுராந்தகம் தொகுதியில வன்னியர்கள், தலித்துகள் வாக்குகள் .. தாராபுரத்தில் கொங்கு கவுண்டர்கள் வாக்குகள் தீர்மானிக்கிற சக்தியா இருக்கு.

இப்ப திமுக கூட்டணியில தேமுதிக, கொமதேக, மநீம இருக்கின்றன. தவெக கூட்டணியில காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருக்கின்றன. அதிமுக கூட்டணியில பாஜக, அமமுக, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இருக்குது..

ADVERTISEMENT

தவெக அரசுக்கு வெளியில இருந்து ஆதரவு தந்தாலும் இந்த இடைத்தேர்தலில் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தனித்தே போட்டியிடுகின்றன.

அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்த பாமக இந்த இடைத்தேர்தல்களில், “எந்த கட்சிக்குமே ஆதரவு இல்லை”ன்னு அறிவிச்சு பரபரப்பை ஏற்படுத்தி இருக்குது..

ADVERTISEMENT

இதை பத்தி பாமக தலைவர் அன்புமணிக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரிச்சப்ப, “2024-க்கு முன்னாடி 13 வருடங்களாக பொதுவாகவே இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதைத் தவிர்க்கிறதுதான் பாமகவின் நிலைப்பாடா இருந்துச்சு. 2010 பென்னாகரம் இடைத்தேர்தலுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடங்கி 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரை பெரும்பாலான இடைத்தேர்தல்களில் பாமக போட்டியிடாமல்தான் இருந்துச்சு. 2024-ல்தான் அந்த நிலைப்பாட்டை மாற்றி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டோம்…

சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில்தான் இருந்தோம்.. ஆனா கூட்டணி தலைவரான எடப்பாடி பழனிசாமி, சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு எங்களுடன் எதுவுமே பேசவில்லை.. எங்களை அழைச்சு கூட்டணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போறது உட்பட எதைப் பற்றியும் பேசவும் இல்லை. எடப்பாடி தான் நினைக்கிறது எல்லாத்தையும் செயல்படுத்தனும்னு நினைக்கிறார்.. அது கரெக்ட்தான்.. அது அவருடைய அதிமுக கட்சிக்குதானே பொருந்தும்.. கூட்டணி கட்சிகளும் அப்படியே இருக்கனும்னு என்ன அவசியம் இருக்குது? இப்ப இடைத்தேர்தல் வந்த உடன்தான் அதிமுக தரப்புல பேசுறாங்க..

அதனாலதான் இந்த இடைத்தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்க வேண்டாம்.. அடுத்து நாடாளுமன்ற தேர்தல்- உள்ளாட்சித் தேர்தல் எல்லாம் வருது.. அந்த தேர்தல்களுக்கு ரெடியாவோம்.. அப்ப யாருடன் கூட்டணின்னு சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்வோம் என்கிற நிலைப்பாட்டில்தான் அன்புமணி இருக்கிறார்.. அதனால இப்ப பொதுவாகவே இருக்க முடிவெடுத்திருக்கிறோம்”ன்னு சொன்னாங்க ப்ரோ..

அதே நேரத்துல, ”திமுக- தவெக- அதிமுக தரப்புல பாமககிட்ட பேசுனாங்களா?”ன்னு நாம கேட்டோம். அதுக்கு, “ஆமாங்க சார்.. எல்லா கட்சியில இருந்தும் எங்ககிட்ட பேசுனாங்க.. எல்லா கட்சிகளும் ஆதரவு கேட்டதை பத்தியும் ஆலோசனை நடத்துனோம்.. திமுகவைப் பொறுத்தவரைக்கும், “சட்டசபை தேர்தலப்பவே கூட்டணிக்கு பேசுனோம்.. ஆனா அப்ப எங்க கூட விசிக இருந்ததால எந்த முடிவும் எடுக்க முடியலை.. இப்ப விசிகதான் ஆளும் தவெக பக்கம் போயிடுச்சு.. நீங்க வாங்க.. நாம கூட்டணியா தொடர்ந்து பயணிக்கலாம்”ன்னு கூப்பிட்டாங்க..

அதிமுகவும், ”சட்டசபை தேர்தல் மாதிரியே கூட்டணியில தொடருவோம்”ன்னு கூப்பிட்டாங்க.

தவெக தரப்புல பேசும் போது, “எங்க கூட விசிக இருக்கிறதால எங்க கூட்டணிக்கு நீங்க வரமுடியலை.. இருந்தாலும் இந்த இடைத்தேர்தல்களை நீங்க புறக்கணிச்சுடுங்க.. போக போக நாம பார்த்துக்கலாம்”ன்னு சொன்னாங்க.. இருந்தாலும் நாங்க இப்போதைக்கு யாருக்குமே ஆதரவு இல்லைன்னுதான் முடிவெடுத்திருக்கிறோம்”ன்னும் சொன்னாங்க..

சரிங்க ப்ரோ.. பாமகவோட இந்த முடிவால மற்ற கட்சி லீடர்ஸ் என்ன நினைக்கிறாங்க?

ஆமாங்க ப்ரோ.. ஒவ்வொரு கட்சியாக சொல்றேன்.. அதிமுகவில எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சர்க்கிளில் பேசுனப்ப, “பாமகவோட இந்த முடிவு எங்களுக்கு ரொம்பவே அப்செட்தான். சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் உட்பட வட தமிழ்நாட்டுல அதிமுக கணிசமான இடங்களில் ஜெயிக்க பாமக ஓட்டுகளும் ஒரு காரணம்தான்.. நாங்க இல்லைன்னு சொல்லலை..

இப்ப ஆளும் கட்சி தவெக சொல்லிதான் யாருக்குமே ஆதரவு இல்லைன்னு பாமக முடிவெடுத்திருக்குன்னு நினைக்கிறோம்.

ஏன்னா, 2024 பார்லிமெண்ட் எலக்‌ஷனப்ப எங்க கூட கூட்டணிக்கு பாமக ரெடியாகி இருந்தது.. நாங்களும் பேசி முடிச்சுட்டோம்.. அப்ப ஆளும் கட்சி திமுக. திமுகவோட சபரீசன் அன்புமணிகிட்ட பேசினார்.. பாமகவும் அதிமுகவும் கூட்டணி அமைச்சா வட தமிழ்நாட்டுல திமுகவுக்கு சவாலாக இருக்கும்.. அதனால நீங்க பாஜக பக்கம் போங்கன்னு அன்புமணிகிட்ட சபரீசன் சொன்னார்..

இன்னொரு பக்கம் பாஜகவும் பாமகவை நெருக்குச்சு.. அதனால பாஜக கூட்டணிக்கு போயிருச்சு பாமக. இப்பவும் ஆளும் தவெக கொடுத்த நெருக்கடியால்தான் பாமக இந்த முடிவை எடுத்திருக்கும்னு நினைக்கிறோம்”ன்னு சொல்றாங்க ப்ரோ.

திமுக தரப்புல ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களிடம் பேசுனப்ப, “மதுராந்தகம் தொகுதியில கணிசமான ஓட்டுகளை வெச்சிருக்கிற விசிக, தவெக கூட்டணியில இருக்குது.. தவெகவுடன் விசிக இருக்கிறதால நிச்சயம் பாமக ஓட்டுகள் அந்த கூட்டணிக்கு போகாது.. அதிமுக கூட்டணியில இருந்து பாமக விலகி நின்று யாருக்கும் ஆதரவு இல்லைன்னு முடிவு எடுத்திருக்கு.. இது எங்களுக்கு சாதகமா இருக்கும்” அப்படின்னு நம்பிக்கையா சொல்றாங்க ப்ரோ.

ஆனா தவெக தரப்புல சிஎம் விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் பேசுறப்ப, “இடைத்தேர்தலில் பாமக ஆதரவை கேட்டு நாங்க பேசுனது உண்மைதான். பாமகவைப் பொறுத்தவரையில் கூட்டணி கட்சிங்கிற அடிப்படையில் அதிமுக செயல்பாடுகளை விரும்பலை.. அந்த பக்கம் வன்னியர் உள் இடஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்புன்னு எல்லா விஷயத்திலேயும் திமுக தங்களுக்கு ஆதரவா இல்லையே அப்படிங்கிற கோபத்துல இருக்காங்க.. ஆனா ஜாதிவாரி கணக்கெடுப்பு உட்பட எல்லா விஷயத்திலும் பாமகவோட கோரிக்கைகளுக்கு தவெக சப்போர்ட்டா இருக்குது..

இந்த எலக்‌ஷன்ல யாருக்குமே ஆதரவு இல்லைன்னு அன்புமணி சொல்லி இருந்தாலும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் நிச்சயம் தவெகவுக்குதான் பாமக ஓட்டுகள் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம் சார்”ன்னு சொன்னாங்க ப்ரோ..

அதே நேரத்துல விசிகதான் ரொம்ப கவலையா இருக்குங்க ப்ரோ.. இதை பத்தி விசிகவின் உள்விவகாரங்களை அறிந்தவர்களிடம் பேசுனப்ப, “என்னதான் நாங்க இந்த ஆட்சியை ஆதரிச்சாலும் அமைச்சரவையில இடம் பெற்றிருந்தாலும் பாமகவுடன் தவெக நெருக்கம் காட்டுகிறதோ அப்படிங்கிற சந்தேகம் எங்களுக்கு இருக்குதுங்க..

மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் தவெக ஜெயிச்சுட்டா சட்டசபையில அந்த கட்சியோட பலம் 109 ஆகிடும். தவெகவுக்கு ஆதரவு தந்து அமைச்சரவையில இருக்கிற காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அவங்க கிட்ட முழுமையாக சரண்டராகிடுச்சு.. அதேபோலதான் ஐயூஎம்எல் கட்சியும் சரண்டராகிட்டாங்க.. தவெக சொல்றதைத்தான் அவங்க எல்லாம் கேட்கிறாங்க..

தவெகவுடன் அமைச்சரவையில இருந்துகிட்டு கேள்வி கேட்டுகிட்டு வர்ற ஒரே கட்சி விசிகதான். இப்ப தவெகவுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் கூடுதலா கிடைச்சுட்டா எங்க 2 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு, விஜய் அரசுக்கு முக்கியமானதா இல்லாம போகும்.. எங்களுடைய ஆக்டிவ் ரோல் அப்படிங்கிறது கேள்விக்குள்ளாகிடும்.. அதுதான் எங்களோட பெரும் கவலை”ன்னு சொல்றாங்க ப்ரோ..

இப்ப இருக்கிற நிலைமையில கடந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு துணையாக இருந்த பாமக ஓட்டு இப்ப யாருக்கு போகும்னு உறுதியாக சொல்ல முடியலை.. இன்னொரு பக்கம் கூட்டணியிலே இருந்தாலும் தவெக ஜெயிச்சா முக்கியத்துவம் போயிடும்னே கவலைப்படுகிற விசிக ஓட்டு, அப்படியே தவெக வேட்பாளருக்கு கிடைக்குமா? அப்படிங்கிற சந்தேகமும் இருக்கு.. அதனால மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் களம் எல்லா கட்சிகளையும் ரொம்பவே டென்ஷனாக்கிட்டுதான் இருக்குதுங்க ப்ரோ என சொல்லியபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் நுழைந்தது.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share