ஓய்வு பெற இருக்கும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆணைய தலைவராக நியமனம்!

Published On:

| By Kavi

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக எவ்வித உறுப்பினர்களும் இன்றி இந்த ஆணையத்தின் செயல்பாடு இருந்த நிலையில் தற்போது இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னாள் மின் பகிர்மான கழக இயக்குநர் ஏ.ஆர். மாஸ்கரனாஸ் உறுப்பினராகவும், ஏ. முத்துசாரதாவை சட்ட உறுப்பினராகவும் மாநில அரசு நியமித்துள்ளது.

இந்த ஆணையத்தின் சட்ட உறுப்பினராக இருந்த மோகன் கடந்த மார்ச் 9ம் தேதி ஓய்வு பெற்றார். உறுப்பினர் வெங்கடேசன் கடந்த ஜூன் 1ஆம் தேதி தனது பதவி காலத்தை நிறைவு செய்தார்.

ADVERTISEMENT

கடந்த ஜூன் 2ம் தேதி முதல் ஆணையத்தின் ஒரே அதிகாரியாக செயல்பட்டு வந்த மணிவண்ணன் கடந்த ஜூன் 19ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவரது ராஜினாமா கடிதம் கடந்த ஜூன் 24ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது.

ADVERTISEMENT

ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டிக்காராமன் தலைமையில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி இந்தக் குழு கூடியது. பின்னர் ஒவ்வொரு உறுப்பினர் பதவிக்கும் இரண்டு பேர் கொண்ட பட்டியலை அரசுக்கு பரிந்துரைத்தது.

இந்த சூழலில் தற்போது அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கூடுதல் தலைமைச் செயலாளராகவும், பயிற்சித் துறை தலைவராகவும் பணியாற்றி வரும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்சாரக் கட்டணங்களை நிர்ணயம் செய்தல், மின் கொள்முதல் மற்றும் மின் கடத்தல் கட்டணங்களை முறைப்படுத்துதல் ஆகிய பணிகளோடு, மின்சாரத் துறைக்கான விதிகளை உருவாக்குதல் மற்றும் அது தொடர்பான வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்குதல் ஆகியவற்றையும் இந்த ஆணையம் செய்கிறது.

இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share