இந்திய வரலாற்றிலேயே அரசு நிறுவனமான சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதலாவது முதல்வர் விஜய்தான் (CM Vijay) என்று தவெக அரசுக்கு ஆதரவு தரும் சிபிஎம் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடந்த மாதம் கடிதம் அனுப்பி இருந்தார். இந்த கடிதம் இதுவரை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. தி இந்து நாளேட்டில் இது தொடர்பாக இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக சிபிஎம் மூத்த தலைவர் கனகராஜ், சன் நியூஸ் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சென்னை விமான நிலையத்தின் சேவையில் குறைபாடு இருக்கிறது என்பதற்காக அதைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது எப்படி சரியான தீர்வாக இருக்க முடியும்? நாளை அரசாங்கத்தால் ஒரு பணியைச் சரியாகச் செய்ய முடியவில்லை என்றால், அரசாங்கத்தையே தனியார் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வீர்களா?
தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு பொதுத்துறை நிறுவனத்தை, “தனியார் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று ஒரு மாநில அரசே கேட்பது புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது.
நெய்வேலி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இப்போது ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்பது எப்படி சரியாகும்? பொதுத்துறை நிறுவனங்களும் மக்களின் சொத்துதானே?
தனியார் நிறுவனங்களில் குறைபாடுகளே இல்லையா? தனியார் நிர்வாகத்தில் எல்லாம் சிறப்பாகவே நடைபெறுகிறது என்று சொல்ல முடியுமா?
ஒருபுறம் மத்தியப் பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு கேட்கிறது. இன்னொருபுறம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான நிலையத்தைத் தனியாரிடம் மாற்ற வேண்டும் என்று கேட்கிறது. அந்தச் சொத்து யாருடைய உழைப்பில் உருவானது என்பதையும் பார்க்க வேண்டும்.
மருத்துவத் துறையிலும்..
ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதலமைச்சர் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டு, தமிழ்நாட்டில் ஏழு துணை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அது வரவேற்கத்தக்க அறிவிப்பாக இருந்தது.
ஆனால், தற்போது அதற்கான செலவை அரசாங்கம் ஏற்காது என்றும், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் அவை self-financed முறையில் செயல்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Self-financed என்றால் அதற்கான பணம் எங்கிருந்து வரும்? பணத்தை அச்சடிக்க முடியுமா? மரத்தில் காய்க்குமா? இறுதியில் மாணவர்களிடமிருந்துதான் அந்தப் பணம் வசூலிக்கப்படும்.
அத்தகைய கல்லூரிகளில் செவிலியர் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில்தான் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு, ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த நீண்டகாலப் பலன்களையும் அவர்கள் கோர முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல செப்டம்பர் 11-ஆம் தேதி 4,724 செவிலியர்களை நியமிப்பது தொடர்பான நடவடிக்கையிலும் அவர்கள் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவார்கள்; அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே தொடர முடியும்; நிரந்தரப் பணி கோர முடியாது; அரசின் ஊழியர்களாகவும் கருதப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சேவை சரியில்லை என்றால் அதைச் சரி செய்ய வேண்டாமா?
சென்னை விமான நிலையம் தொடர்பான செய்தியைப் பார்த்ததும், “இது தமிழ்நாடுதானா? தமிழ்நாட்டின் முதலமைச்சர்தான் இப்படியொரு கடிதத்தை எழுதியிருக்கிறாரா?” என்ற கேள்வி எழுகிறது.
விமான நிலையத்தில் ஏதாவது பிரச்சினை இருந்தால், அதன் சேவையை எப்படி மேம்படுத்துவது என்று பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைப்பது தீர்வாக இருக்க முடியாது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2×800 மெகாவாட் என மொத்தம் 1,600 மெகாவாட் Super Critical Thermal Power Plant திட்டத்தைத் தனியாரிடம் கொடுக்கப்போவதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவும் முதல்முறை.
அதேபோல எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத்தையும் தனியாரிடம் கொடுக்கப்போவதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவும் முதல்முறை.
ஏன் இவ்வாறு தொடர்ந்து நடக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
கேரளாவில் நடந்தது என்ன?
மற்ற இடங்களில் விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசுதான் மேற்கொண்டது.
கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை வந்தபோது, பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, “நாங்களே விமான நிலையத்தை நடத்துகிறோம்” என்று கேட்டது.
ஆனால், அவ்வாறு வழங்க முடியாது; Global Bid முறையில்தான் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. Global Bid நடைமுறையிலும் ஒரு மாநில அரசு நேரடியாகப் பங்கேற்பது தொடர்பாக பிரச்சினைகள் எழுந்தன.
ஆனால் இங்கே தமிழக அரசே தானாக முன்வந்து சென்னை விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்குமாறு கேட்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
நெய்வேலி, BHEL, ரயில்வே?
இதே அணுகுமுறையை மற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பயன்படுத்த முடியுமா?
நாளை, “நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியாரிடம் கொடுத்துவிடுவோம். BHEL-ஐ தனியாரிடம் கொடுத்துவிடுவோம். ரயில்வேயைத் தனியாரிடம் கொடுத்துவிடுவோம்” என்று கூறினால் அதை ஏற்றுக்கொள்வார்களா?
தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி என இரண்டு Major Port-கள் இருக்கின்றன. அவற்றின் சேவையில் பிரச்சினை இருப்பதாகக் கூறி அவற்றையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட முடியுமா? என்ன மாதிரியான நடைமுறை இது என்பதே புரியவில்லை. தனியாரிடம் சென்றால் அனைத்தும் சரியாகிவிடுமா?
சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு ஐந்தரை கோடி பயணிகளைக் கையாள வேண்டும்; ஓடுபாதையை விரிவாக்க வேண்டும்; புதிய முனையத்தைத் திறக்க வேண்டும்; ஒவ்வொரு முடிவுக்கும் டெல்லியில் இருக்கும் AAI-யை அணுக வேண்டியுள்ளது; அதன் செயல்பாடு மெதுவாக இருக்கிறது என்பதெல்லாம் காரணங்களாகக் கூறப்படலாம்.
ஆனால், தனியாரிடம் கொடுத்துவிட்டால் மட்டும் தமிழக அரசால் உடனடியாக எல்லாவற்றையும் செய்து கொள்ள முடியுமா?
தனியார் நிறுவனங்கள் அனைத்துச் சட்டங்களையும் முறையாக மதித்துச் செயல்படுகின்றன என்று சொல்ல முடியாது. ஸ்டெர்லைட் நிறுவனம் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றியிருந்தால், அந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டிருக்கலாம்; காப்பர் உற்பத்தியும் கிடைத்திருக்கும்; தொழிலாளர்களுக்கும் வேலை கிடைத்திருக்கும். ஆனால் சட்டத்தை மதிக்காதபோது பிரச்சினைகள் உருவாகின்றன.
ஆரம்பத்தில் தனியார் நிர்வாகம் குறித்து சிறப்பாகப் பேசப்படலாம். ஆனால் அதன் நீண்டகால விளைவுகளையும் பார்க்க வேண்டும்.
இந்த முடிவை எடுத்தது யார்?
சென்னை விமான நிலையத்தைத் தனியார்மயமாக்க வேண்டும் என்ற முடிவு எப்படி எடுக்கப்பட்டது? இது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவா? புதிய அரசு பொறுப்பேற்று குறுகிய காலமே ஆகியுள்ள நிலையில் இவ்வளவு வேகமாக இப்படிப்பட்ட முடிவு எப்படி எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.
ஒரு பயணி ரயிலிலோ விமானத்திலோ செல்லும்போது, “சேவை மோசமாக இருக்கிறது; தாமதமாகிறது” என்று கூறியதும், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை முழுமையாக ஆராயாமல், “பேசாமல் தனியாரிடம் கொடுத்துவிடலாம்” என்று முடிவெடுப்பதைப் போன்ற அணுகுமுறையாகவே இது தெரிகிறது.
கடிதம் ரகசியமாக இருந்தது பிரச்சினை அல்ல
மத்திய அரசுக்கு எழுதப்பட்ட கடிதத்தை தமிழக அரசு ஏன் வெளியிடவில்லை என்பது பிரதான பிரச்சினை அல்ல. மத்திய அரசுக்கு எழுதும் ஒவ்வொரு கடிதத்தையும் மாநில அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டுமா என்பது தனிப்பட்ட விஷயம்.
ஆனால், இங்கு பிரச்சினை கடிதத்தை வெளியிடாதது அல்ல; அந்தக் கடிதத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைதான். சென்னை விமான நிலையத்தைத் தனியார்மயமாக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியிருப்பது தவறான நடவடிக்கை. இது தமிழ்நாட்டின் நலனுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் நலனுக்கும் எதிரானது.
எனவே தமிழக அரசு, “அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை” என்று விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது தனியார்மயமாக்கக் கோரி அனுப்பிய கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இது சரியான நடவடிக்கை அல்ல என்று கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முன்வர வேண்டும். இவ்வாறு சிபிஎம் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
