சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதி இருப்பதற்கு திமுக, சிபிஐ, அமமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கூறியிருப்பதாவது: சென்னை விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை (AAI) மாற்றி, வேறு ஆபரேட்டரைக் கொண்டு வர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக
தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை விமான நிலைய செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்ய ஒன்றிய அரசிடம் உரிய அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, AAI-யை மாற்றி வேறு ஆபரேட்டரைக் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் கோருவது ஏன்? விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு துணை நிற்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டதாக அறிவித்துவிட்டு, மறுபுறம் இருக்கும் சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க முயல்வது குறித்து முதலமைச்சர் தமிழ்நாடு மக்களுக்கு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் பொதுச் சொத்துகளை தனியார் நலன்களுக்காக தாரை வார்க்கும் எந்த முயற்சியையும் எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் குரல் கொடுக்கும். இவ்வாறு தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
அமமுக கண்டனம்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளதாவது: இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airport Authority of India) கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வேறொரு நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில், அதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.
பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில், லாபமே முதன்மை நோக்கமாக மாறும் என்பதோடு, பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்ற விமர்சனமும் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.
எனவே, சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் உண்மை இருக்கும் பட்சத்தில், அத்தகைய முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) இடத்தில் வேறு ஒரு இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதம், சென்னை விமான நிலையத்தைத் தனியார்மயமாக்கும் முயற்சியாகும். இந்த நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சென்னை விமான நிலையம் ஒரு சாதாரண வணிக நிறுவனம் அல்ல. அது தனியாரின் சொத்து அல்ல, மக்களின் பொதுச்சொத்தாகும். நாட்டின் முக்கியமான பொது உள்கட்டமைப்பாகும். தமிழ்நாட்டின் தொழில், வர்த்தகம், சுற்றுலா மற்றும் சரக்கு போக்குவரத்தில் முக்கியமான பங்களிப்பை அது செலுத்துகிறது.
AAI நாடு முழுவதும் விமான நிலையங்களை இயக்குவதன் மூலம் குறிப்பிடத்தக்க வருவாயும் லாபமும் ஈட்டி வருகிறது. 2025-26 நிதியாண்டில் AAI-யின் நிகர லாபம் ரூ.6,522 கோடியாக இருந்ததாக அதன் நிதிநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை விமான நிலையத்தில் நிர்வாகக் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய வேண்டும். பயணிகள் சேவை, விமான இயக்கம், சரக்கு கையாளுதல், சாலை இணைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்த வேண்டும். அதைவிடுத்து, விமான நிலையத்தைத் தனியார்மயமாக்குவது அதற்குத் தீர்வு அல்ல” என தெரிவித்துள்ளார்
