தாராபுரம், மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற, “பழைய திமுககாரனாக” களப் பணியாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னையில் நேற்று (செப்டம்பர் 19) நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் துரைமுருகன் பேசியதாவது: இந்த விழா இன்னும் இரண்டு தினங்களுக்கு முன்னாலேயே நடந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு அறிவிப்பை நான்தான் வெளியிட்டேன். என்ன சொன்னேன் என்றால், தலைவர் அவர்கள் (ஸ்டாலின்) சுகவீனமாக இருக்கிறார். ஆகையினாலே பிறகு தேதி அறிவிக்கப்படும் என்று சொன்னேன்.
நான் போய்க் கேட்டேன். “பரவாயில்லை” என்றார். திடீரென்று நான் ஆச்சரியப்படுகிற மாதிரி, வீட்டை விட்டு வரவேண்டாம் என்று சொல்லியிருந்த நிலையில், நேற்றைக்கு முதல்நாள் பெரியார் திடலுக்கு வந்தார். எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அதே நேரத்தில் கோபமாகவும் போய்விட்டது. அத்துடன் சமூக நீதி நாள் உறுதிமொழியும் வந்து எடுத்துக் கொண்டார்.
அப்போது போகும்போதுகூட நான் சொன்னேன், “It is too bad. நீங்கள் செய்தது தப்பு. வரவே கூடாது” என்று சொன்னேன்.

ஸ்டாலினுடைய உடல்நிலை சரியாக இருந்தால்தான் நம்முடைய உடல்நிலை சரியாக இருக்கும். “நீங்கள் உடல்நிலை சரியாக இருக்க வேண்டும்” என்று சொல்வது எங்கள் சுயநலத்தால். காரணம், உங்களை விட்டால் எங்களுக்கு வேறு கதி கிடையாது.
எங்களுக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டுக்கும் கதி கிடையாது. தமிழுக்கும் கதி கிடையாது. இந்த இயக்கம் ஒன்றுதான் எல்.ஐ.சி. எம்பளம் போல் தமிழர்களைக் காப்பாற்றுகிறது. அந்தக் காப்பாற்றுகிற பொறுப்பை நீங்கள் ஏற்றிருக்கிறீர்கள். எனவே தளபதி அவர்களே (ஸ்டாலின்), நாங்கள் சொல்கிறோம் என்று கோபப்படாதீர்கள். உங்கள் உடல்நிலை முதலில் எங்களுக்கு வேண்டும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை முடிக்கின்ற ஆற்றல் இங்கு வந்திருக்கிற கழகத் தோழனுக்கு உண்டு. நாம் களத்தில் இருக்கிறோம். எத்தனையோ தேர்தல்களை சந்தித்திருக்கிறோம். வெற்றி பெற்றிருக்கிறோம்; வீழ்த்தியும் இருக்கிறோம்; வாகை சூடியும் இருக்கிறோம். தேர்தலிலே அது சகஜம்.
ஆனால் என்ன காரணம் என்றால், நம்மைப் போல ஒரு எதிரியோடு மோதினோம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத ஒரு மாயாவி போல் வந்த ஒன்று இங்கே நின்றுவிட்டது. இந்த மாயாவி தமிழ்நாட்டிலே பரவி இருக்கிறது. ஆனால் இது நெடு நாளைக்கு நிற்காது.
காரணம், காங்கிரஸ் ஆனாலும், கம்யூனிஸ்ட் ஆனாலும் தியாகங்களைப் புரிந்த கட்சிகள்; பலமான அஸ்திவாரங்களைப் போட்ட கட்சிகள். அதேபோலத்தான் திராவிட இயக்கம். 1900களில் இருந்து நடேசனார், டி.எம். நாயர், வெள்ளுடை வேந்தர், பெரியார், அண்ணா, கலைஞர் என்று வலுவான அஸ்திவாரத்தைப் போட்டிருக்கிற கட்சி. இதன் இலைகளையோ அல்லது கிளைகளையோ முறிக்கலாமே தவிர, இதன் அடிவாரத்தை முறிக்கிற எந்தக் கொம்பனும் தமிழ்நாட்டிலே பிறந்திருக்க முடியாது.
ஆகையினாலே தலைவரே, மீண்டும் மன்றாடிக் கேட்கிறேன். இந்தக் கட்சிக்கு நீங்கள்தான் உயிர்நாடி. அதை நினைத்து உங்கள் உடம்பைக் கொஞ்சம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
எந்த கொம்பனாலும் ஏமாற்ற முடியாது
நண்பர்களே, இன்றைக்கு இந்த விழா நடக்கிறது. ஆனால் அவருடைய சிந்தனையில் இந்த விழா இல்லை என்பது எனக்குத் தெரியும். இரண்டு இடங்களிலே (2 தொகுதி இடைத் தேர்தல்) நம்முடைய வீரர்கள் போர்க்களத்திலே நின்றுகொண்டிருக்கிறார்கள். இரண்டு களங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. எதிரியோ, மாயாவியாக வருவானா, ஆளாக வருவானா என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால் எப்படியோ ஒருமுறை ஏமாந்துவிட்டான்.. இனி திமுககாரனை எந்தக் கொம்பனாலும் ஏமாற்ற முடியாது.

மன்னாதி மன்னனையெல்லாம் தோற்கடித்த கட்சி இது. ஒரு காலத்திலே ராமநாதபுரம் ராஜாவை, அவரது காம்பவுண்டில் சைக்கிள் கடை வைத்திருந்த தங்கப்பனை வேட்பாளராக நிறுத்தி அண்ணா தோற்கடித்தார்.. புதுக்கோட்டை மன்னரைத் தோற்கடித்தார்.. பொள்ளாச்சி மகாலிங்கத்தைத் தோற்கடித்தார். அந்த வீரம் தமிழ்நாட்டிலே இன்னும் செத்துவிடவில்லை தலைவரே! செத்துவிடவில்லை!
உலர்ந்த சருகு கண்டு உடல் துடிக்க நிற்பதா?
அண்ணா அவர்கள் ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ நாடகத்தில் எழுதியதுபோல், ‘ஈட்டிக்கு மார்பு காட்டுகின்ற இணையில்லா வீரன், உலர்ந்த சருகு கண்டு உடல் துடிக்க நிற்பதா?’.. பயப்படமாட்டான்.
ஆகையினாலே நான் உங்களையெல்லாம் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் ஓர் உறுதிமொழி எடுங்கள். இந்த களம் நமக்கு ஒரு முக்கியமான களம். நம்முடைய இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, ஒரு வீரமிக்க எதிர்க்கட்சித் தலைவனாக அங்கு அமர்ந்திருக்கிறார். அவருடைய களம் அது. அந்தக் களத்திலே அவர் வென்றுகொண்டிருக்கிறார். இது நம்முடைய களம். இந்தக் களத்திலே நாம் வென்றாக வேண்டும்.
வாய்க்கரிசி போட்டுக் கொண்ட பழைய திமுககாரன்..
நீங்கள் ”பழைய திமுககாரனாக” வாருங்கள்… அந்த காலத்தில் மேடையிலே பேசுவார்கள், தெரியுமா? இந்த காலத்துப் பிள்ளைகளுக்குத் தெரியாது.. மேடையிலே எவனாவது ஒரு கல்லைப் போட்டால் சொல்லுவார்கள்…
“டேய், நாங்க வாய்க்கரிசியை வாயில் போட்டுட்டுத்தான்டா இங்கே வந்திருக்கோம்” என்று.
வாய்க்கரிசியை வாயில் போட்டு வந்திருக்கிற கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். அவனுடைய பரம்பரையா கோழையாக நிற்கும்?
அவனுடைய ரத்தத்தில், தசையில் உணர்ச்சி வேற மாதிரி இருக்கும். திமுககாரன் என்றால் சாதாரண ஆள் அல்ல. இரும்பை நரம்பாக்கிக் கொண்டவன்; எஃகைத் தசையாக்கிக் கொண்டவன்; ஊழிப் பெருவெள்ளத்தைத் தன் மூச்சாகக் கொண்டிருக்கக்கூடியவன். அந்த வீரனை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை இந்தத் தேர்தலிலே காட்டியாக வேண்டும்.
எனக்கு என்ன செய்வீர்களோ தெரியாது. போங்கள் வீடு வீடாக.. மக்கள் காலில் விழுவீர்களோ.. கையை பிடிப்பீர்களோ.. தெரியாது. வெற்றியைக் கொண்டு வந்து நம்முடைய தலைவர் வசம் சேர்ப்பதுதான் முக்கியம்.
ஏனென்று கேட்டால், தலைவரே, நான் ஒன்றை இன்றைக்கு சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போகிறேன்.
உறுதி மொழி எடுக்க வைத்த துரைமுருகன்
நான் எல்லோரையும் ஒரு உறுதிமொழி எடுக்கச் சொல்கிறேன். இங்கே அனைவரும் ஒரு கையைத் தூக்கி நான் சொல்வதைச் சொல்ல வேண்டும்:
“தலைவரே! எங்கள் தலைவரே!
என்றென்றும் உங்களுக்கு நல் ஊழியராக நாங்கள் இருப்போம்.
எங்கள் உடல், பொருள், ஆவியும் உங்களுக்கு அர்ப்பணிப்பதற்காக நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எங்களை அழைத்துச் செல்லுங்கள்.
அதேபோல் நீங்கள் விரும்புகின்ற அந்த வெற்றியைப் பெற்றுக் கொண்டு வந்து சேர்ப்போம்” – என்ற உறுதி மொழியை ஏற்போம் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.
