சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது.
ஆண்டுதோறும் பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழா நடத்தப்படும்.
இந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டு இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
அப்போது பெரியார் விருது விவசாய அணி துணை செயலாளர் செல்லப்பாவுக்கு வழங்கப்பட்டது.
சேலம் மத்திய மாவட்ட அவை தலைவர் ஜி கே சுபாஷுக்கு அண்ணா விருது, திருச்சி சிவாவுக்கு கலைஞர் விருது, கனிமொழி சோமுவுக்கு பாவேந்தர் விருது, மிசா எஸ் அகமது தம்பிக்கு பேராசிரியர் விருது, நா. இளையராஜாவுக்கு மு க ஸ்டாலின் விருது, ஊடகவியலாளர் ப. திருமாவேலனுக்கு முரசொலி செல்வம் விருது வழங்கப்பட்டது.
இவர்கள் ஏழு பேருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில நம்பர் ஒன்னா இருந்துச்சு. ஆனா இந்த தமிழக வெற்றி கழக ஆட்சியில் விலைவாசியில் நம்பர் ஒன் மாநிலமாக ஆக போறோம். ஆனா முதலமைச்சரைப் பொறுத்தவரைக்கும் அவருடைய குறைகளை மக்கள் பேசக்கூடாதுன்னு அமைச்சரவை முதல் ஊடகங்கள் வரை டைவர்ஷன் பண்ணிட்டு இருக்காங்க, டைவர்ட் பண்றாங்க.
அதுல இப்போதெல்லாம் நாட்டுக்கு அவசியமான செய்தி என்ன தெரியுமா? சிஎம் இன்னைக்கு என்ன கோட்டு போட்டார்? வெள்ளிக்கிழமை பட்டு வேஷ்டி பட்டு சட்டை, நெத்தியில என்ன கலர் பொட்டு, கையில என்ன கயிறு, ஜோசியர் இன்னைக்கு என்ன சொல்லி இருக்கிறாரு… இதுதான் செய்திகளா வந்துட்டு இருக்கு.
முதலமைச்சரும் இது செஞ்சாவே போதும் என்ற மனநிலையில்தான் இருக்கிறார். கொஞ்சம் நினைச்சு பாருங்க, இந்தியாவில் டபுள் டிஜிட் வளர்ச்சி, கல்வியில சிறந்த தமிழ்நாடு, முதலீட்டாளர்கள் முதல் முகவரி தமிழ்நாடு, டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி, இந்தியாவில் எந்த மாநிலத்தில் இல்லாத ‘நான் முதல்வன்’, ‘புதுமைப்பெண்’, ‘தமிழ் புதல்வன்’னு பேசப்பட்ட நாட்டுல… அது எல்லாத்தையும் பின்னுக்கு தள்ளி கோட்டு சூட்டு, வேட்டி சட்டை போட்டாரு, கால்ல நடந்தாரு, கையால செயல் செஞ்சாரு, வாயால சாப்பிட்டாரு… இப்படித்தான் செய்தி வருது.
அததான் ட்ரெண்டும் பண்றாங்க. இதெல்லாம் பாக்குறதுக்கு ரொம்ப அருவருப்பா அசிங்கமாவே இருக்கு. அவங்க பாஷையில சொல்லணும்னா… அவர் பாஷையில சொல்லணும்னா… தமிழக வெற்றி கழக ஆட்சியில் ரெண்டே ரெண்டுக்கு நடுவுல தான் போட்டி.
நல்லா கவனிங்க, ரெண்டே ரெண்டுக்கு நடுவுலதான் போட்டி. ஒன்னு மின்வெட்டு, இன்னொன்னு அறிவால் வெட்டு. இப்படிதான ஆக்ஷன் பண்ணுவாரு?
பட்டப்பகலில் கொலைகள், துப்பாக்கி சூடுகள், ஆளுங்கட்சியினரே போதை பொருட்களை விற்பனை செய்றது, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுறது… இப்படி குற்றவாளிகள் வேட்டைக்காடா தமிழ்நாடு மாறி இருக்கு.
தமிழக வெற்றி கழக ஆட்சியில் சட்டமும் இல்ல ஒழுங்கும் இல்ல. ஆனா முதலமைச்சரா இருக்க கூடியவருக்கு இதைப் பற்றி எல்லாம் துளி கூட கவலை இல்லை. ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரைக்கும் இப்படி ஏமாத்துறவங்களும் இருக்கத்தான் செய்வாங்க. ஆனா இவங்களால மக்களை எல்லா நாளும் ஏமாத்த முடியாது.
கடந்த வாரம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டுக்கு பயணம் செஞ்சார். பயணம் செஞ்சதா முதலமைச்சரே சொன்னார். இதுக்கு முன்னாடி நான் வெளிநாட்டுக்கு பயணம் செஞ்சப்ப என்ன பேசினாரு… சிஎம் சார் ‘வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டுல முதலீடா?’ன்னு மேடையில கத்துனாரு.
இப்ப அவர் அளவுக்கு நான் இறங்கி வர தயாரா இல்ல. இப்ப தமிழ்நாட்டு மக்கள் அவரை பார்த்து ‘சிஎம் சார், இந்தியாவில் இருக்கிற கம்பெனிக்கு எதுக்கு லண்டன்ல போய் கையெழுத்து போடுறீங்க?’ன்னு சத்தமா கேட்கிறாங்க.
அதைவிட இன்னொரு பெரிய கொடுமை என்ன தெரியுமா? தொழில்துறை அமைச்சர் இல்லாம, தொழில்துறை செயலாளர் இல்லாம முதலீடுகளை ஈர்க்க போயிருக்கிறார் முதலமைச்சர். இதுதான் முதலீடுகளை ஈர்க்கும் லட்சணமா? அது மட்டும்ல்ல, ரீல்ஸ் வெறிபிடிச்ச ஆளுங்கட்சியினரால நூற்றாண்டு புகழ் பெற்ற சட்டமன்றம் கூட தன்னுடைய மாண்பை இழந்து நிக்குது.
இப்போ நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்த பார்த்திருப்பீங்க. நல்ல வேளை கொளத்தூர் மக்களுக்கு நான் நன்றி சொல்றேன், இந்த கொடுமை எல்லாம் பார்க்காம இருக்க கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி.
எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை
இப்ப நீங்க அந்த கூட்டத்த பாத்திருப்பீங்க. அது நேரடியாவே ஒளிபரப்பு பண்ணாங்க. என்ன நடக்குது? முதலமைச்சர் சிரிக்கிறத பார்க்க முடியலன்னு கவலைப்பட்டு சட்ட பேரவையில ஸ்கிரீன் வைக்க சொல்லி ஆளுங்கட்சினர் கேட்கிறாங்க. இதுதான் நாட்டுக்கு தேவையா?
மிசா பத்தி பேசுறவங்களுக்கு நான் சொல்ல விரும்புறது ஒன்னே ஒன்னுதான். என் மிசா கைதை உங்க எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. என்னுடைய தியாகத்துக்கு மார்க் போட உங்க எவனுக்கும் தகுதி கிடையாது.
என்னுடைய மிசா வரலாற்றை அண்ணன் சிட்டி பாபு தன்னுடைய சிறை டைரியில் பதிவு செஞ்சிருக்கிறார். அது காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டா அமைஞ்சிருக்கு. அதுமட்டுமல்ல, சிறைச்சாலை சித்திரவதைகளை பற்றி விசாரிக்க மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு கமிஷன் அமைச்சார் – இஸ்மாயில் கமிஷன். அறிக்கை கொடுத்து சாட்சி எல்லாமே சொல்லி இருக்கேன், எல்லாருமே வந்து சொன்னாங்க. படிக்க தெரிஞ்சவனா இருந்தா அதையெல்லாம் எடுத்து படிக்கட்டும்.
ஓட்டு போட்ட மக்கள் வாக்குறுதிகளை பத்தி கேட்டா அவதூறை பரப்பி ரீல்ஸ் போடுறாங்க. நீங்க இவங்க கட்சிக்கு உண்மையா நியாயமா பாத்தீங்கன்னா, தமிழக வெற்றி கழகம்னு பேர் வச்சிருக்க கூடாது, ‘தமிழக ரீல்ஸ் கழகம்’தான் பேர் வச்சிருக்கணும்.
திமுக தந்தது ரியல் ஆட்சி, இவங்க நடத்துறது ரீல் ஆட்சி. ஒரு தடவை மக்கள் ஏமாந்துருக்கலாம், தொடர்ந்து ஏமாறுவாங்கன்னு நினைச்சா ஏமாற போவது இப்ப இருக்கக்கூடிய முதலமைச்சர்தான்.
அவதூறு பேசி, கொச்சையா பேசி திமுகவை அவமானப்படுத்தலாம், பலவீனப்படுத்தலாம்னு நினைச்சு செயல்படுறாங்க. இதெல்லாம் 78 வருஷமா நாங்க பார்த்துட்டு இருக்கோம். கேட்டு கேட்டு புளிச்சு போன இந்த அவதூறுகளை பரப்புற எதிரிகள்தான் மாறிட்டு இருக்காங்களே தவிர, நாங்க உறுதியா நிலைச்சு நின்னுட்டுதான் இருக்கோம்.
தன்னைவிட இயக்கம் பெரிது, கொள்கை பெரிதுனு நினைக்கிறவங்க எங்க உடன்பிறப்புகள்தான். நாங்க வட்டியை முதலுமா திருப்பி தர காத்திருக்கோம், சீக்கிரமே வரும்.
இரண்டு தொகுதி இடைத்தேர்தல் வரப்போகுது. அதுவும் இது முறையா வர தேர்தலா இல்ல திணிக்கப்பட்ட தேர்தல். எவ்வளவு அகம்பாவம் இருந்தா வேற கட்சி உறுப்பினர்களை… விரல்ல வச்ச மை இன்னும் காயல, காயறதுக்கு முன்னாடி ராஜினாமா செய்ய சொல்லி எவ்வளவு நிர்பந்தம் செஞ்சிருப்பாங்க?
அது மட்டுமல்ல, வெட்கமே இல்லாம இப்ப அவங்களை அவங்களுடைய சின்னத்தில வேற நிக்க வச்சிருக்காங்க. கேட்டா உத்தமர் பிம்பம், தூய ஆட்சி… இதுதான் இவங்களுடைய மானங்கெட்ட மாற்றமா?
பொதுவா சட்டமன்ற உறுப்பினர் மரணம் அடைஞ்சாதான் இடைத்தேர்தல் வரும். முதல் முறையா ஜனநாயக மரணமடைந்துவிட்டது.
இதையெல்லாம் வீடு வீடா போய் பிரச்சாரம் செய்யணும்.
காலையில கூட பத்திரிக்கை பார்த்திருப்பீங்க, ஒரே நாள்ல எட்டு கொலைகள்! இன்னைக்கு மக்கள் நடமாட்டம் இருக்கக்கூடிய பகுதிகள்ல இரட்டை கொலைகள், ஆணவ கொலைகள், லாக்கப் படுகொலைகள், டாஸ்மாக் தகராறு கொலைகள், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலைகள்… ஒவ்வொரு நாளும் விடிந்தா எண்ண முடியாத அளவுக்கு கொலைகள்…
கரண்ட் இல்லாம நடுராத்திரியில குழந்தைகளோட மக்கள் போராடிட்டு இருக்காங்க. தொழில் எல்லாம் முடங்கி போச்சு. ஏழை மக்களுக்கு எட்டாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து, பெண்கள் எல்லாம் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கவே பயப்படுறாங்க, வருமானம் பத்தல.
இவங்க சொன்ன 2500 ரூபாய் வரல. காசு கொடுத்தாலும் ஆவின் பால் கிடைக்கல. ஒரு மாசமா டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பரவிட்டு இருக்கு, 12 பேர் இறந்துட்டாங்க… இனிமேதான் நடவடிக்கை எடுக்க போறோம்னு சொல்றாங்க.
எல்லாத்தையும் கவர்ச்சியால சரி கட்டலாம்னு ஆணவத்தோடு இருக்கக்கூடிய ஒருத்தர்தான் முதலமைச்சரா இருக்கார். மீடியாவை சந்திச்சு பதில் சொல்ல மாட்டேன் என திமிரா இருக்கார். இந்த திமிருக்கும் ஆணவத்துக்கும் பாடம் புகட்டுகிற வாய்ப்புதான் கிடைத்திருக்கு.
அதனால மதுராந்தகம், தாராபுரம் வாக்காள பெருமக்களுக்கு… ஆளுங்கட்சிக்கு தக்க பாடம் புகட்ட திமுகவுக்கு வாக்களிக்க இந்த மேடையில் நின்று, இந்த முப்பெரும் விழா மேடையில் நின்று உங்களை எல்லாம் சாட்சியாக வைத்து நான் கேட்கிறேன்.
திராவிட முன்னேற்ற கழகம் என்ற பேரியக்கம் காலத்துக்கு ஏத்த மாதிரி மாற்றம் கண்ட காரணத்தால் தான் 78 ஆண்டுகளாக திமுக அதே வலிமையோடு இருக்கிறது. அதற்கு இன்னும் வலிமை கூட்டத்தான் கழக மறுசீரமைப்பு செய்ய தொடங்கி இருக்கிறோம்.
நம்மை மாத்திக்கிட்டு மக்களையும் கவர்ச்சியில் இருந்து மாத்தணும். இன்றைய Gen Z இளைஞர்களையும் கவரணும்னா அவங்களுடைய மொழியிலேயே பேசணும். அது எப்படி பேசணும்? அவங்க மொபைல்ல போய் சேர்ற மாதிரி பேசுங்க. கழகப்பணி செய்வோம், இயக்கம் காப்போம், தமிழ்நாட்டை காப்போம், தமிழ்நாட்டை மீட்போம்” என்று கூறினார்.
