‘அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவி’ கேட்ட ஆதவ் அர்ஜூனா.. போட்டுடைத்த இபிஎஸ்!

Published On:

| By Mathi

EPS-Aadhav Arjuna

அதிமுகவில் தமக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி தர வேண்டும் என்று கேட்டவர்தான் இன்றைய பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மதுராந்தகத்தில் பேசுகிறார்… “எடப்பாடி பழனிசாமி எங்களுடைய வேட்பாளராக இருந்தால் அவர் தோற்றிருப்பார்” என்று. தம்பி, தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டில் ஜெயித்தவன் நான்.

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் அண்ணா திமுக 7 இடங்களில் வென்றிருக்கிறது. சரியாகத் தெரியாமல் பேசக் கூடாது. உங்களை போல பல கட்சிகளுக்குப் போய்விட்டு வந்தவன் நான் அல்ல. சாதாரண கிளைச் செயலாளராக இருந்து, இன்றைக்கு இயக்கத்தினுடைய பொதுச் செயலாளராக உழைப்பால் நான் வந்திருக்கிறேன்.

ஆதவ் அர்ஜுனா அவர்களே, முதலில் எந்தக் கட்சியில் இருந்தீங்க? திமுகவில் இருந்தீங்க.. சபரீசன் அவர்களுக்கும் பெட்டி தூக்கிட்டு இருந்தீங்க.

ADVERTISEMENT

அடுத்து எங்கே போனீங்க? விடுதலைச் சிறுத்தைகள்கிட்ட போனீங்க.

அதற்குப் பிறகு என்கிட்ட வந்து, என்னைப் பார்த்துச் சந்தித்துப் பேசினீங்க.

ADVERTISEMENT

ஆதவ் அர்ஜுனாவுக்கு அண்ணா திமுகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவி வேண்டும்னு கேட்டார். “தம்பி, இந்தக் கட்சியில் பதவி விற்கிறது கிடையாது. உழைத்தவர்களுக்குத்தான் பதவி கிடைக்கணும்” என்று சொன்னேன்.

அதற்குப் பிறகுதான் தவெகவுக்குப் போனார். அங்கே போய் அந்தக் கட்சியைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டார்.

நீங்கள் பேசலாமா? அண்ணா திமுகவைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்குத் தகுதி இருக்குதா? நமக்கு வாய் இருக்கிறது என்பதற்காக, நாக்கு இழுத்த இழுப்புக்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது தம்பி. தயவுசெய்து சிந்தித்துப் பாருங்க..

கரூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடந்ததுல்ல… அப்போது என்ன ஆச்சு? அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தாங்க. அவர்களைப் பார்ப்பதற்குக்கூட நீங்க போக முடியல. இன்னைக்கு நீங்க இவ்வளவு வாய் பேசுறீங்க இல்ல? உண்மையிலேயே அந்த மக்கள் மீது அக்கறை இருந்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று உங்களுடைய மனதில் இடம் இருந்தால், ஈரம் இருந்திருந்தால், ஓடோடிப் போய் அந்தப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்கணும். உங்களால் போய் சொல்ல முடிஞ்சதா? கட்சி அலுவலகத்தை 15 நாளைக்கு மூடிட்டு எல்லாம் ஓடிப்போயிட்டாங்க. 15 நாள் தமிழக வெற்றிக் கழகக் கட்சியை மூடிட்டாங்க. எல்லாம் ஓடிட்டாங்க. இந்த ஆதவ் அர்ஜுனா வீரவசனம் பேசுறார்ல… இவரை வெளிமாநிலத்துல போய் தூங்கிட்டாரு.. அப்படிப்பட்ட வீரமிக்கவர்கள்தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கிறார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share